ஈரோடு மாவட்டம் நம்பியூர் தாலுகாவில் தீர்த்தமலை பகுதியில் குழந்தைகளைக் கடத்திய கும்பல் குழந்தைகளை கடத்திய போது கையும் களவுமாக பிடிபட்டனர்.
கிராமங்களில் பெரும்பாலான மக்கள் கூலிவேலை பார்ப்பவர்கள் தான். தற்போது கொரோனா காலமாக இருப்பதால் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் குழந்தைகளை வீட்டில் அருகில் உள்ள குழந்தைகளோடு விளையாட விட்டு விட்டு பெற்றோர்கள் வேலைக்கு செல்வது அப்பகுதி மக்களின் வழக்கம்.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் நம்பியூர் தாலுகாவில் தீர்த்தமலை கிராமத்தில் மூன்று பெண்கள், ஒரு ஆண் உள்ளிட்ட கும்பல் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை கடத்தும் போது குழந்தை அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி பொதுமக்கள் கடத்தல் கும்பலை கையும் களவுமாகப் பிடித்தனர்.
பொதுமக்களின் பிடியிலிருந்து தப்பிக்க முயன்றதால் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் கடத்தல் கும்பலை அடித்து உதைத்துள்ளனர். பின்னர் நம்பியூர் காவல் நிலையத்தில் நான்கு பேரையும் ஒப்படைத்துள்ளனர். இது சம்பந்தமான வீடியோவும் வெளியாகி சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நம்பியூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
செளந்திரராஜன்.
ஈரோடு செய்தியாளர்