Featuredஅரசியல்தமிழகம்தமிழகம்

விவசாயிகளுக்கான 1 லட்சம் புதிய மின் இணைப்பு திட்டம் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக கூட்ட அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில், விவசாயிகளுக்கான 1 லட்சம் புதிய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்து ஆணை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பின்னர் பேசுகையில், வேளாண் மக்களின் சிறு கோரிக்கையாக இருந்தாலும் அதற்கு உடனடியாகச் செவி மடுத்து அதனை நிறைவேற்றித் தரும் ஆட்சி தான் திமுக ஆட்சி என்று கூறினார்.

கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசுகையில், சில திட்டங்கள் அந்த நேரத்திற்கு தேவையானதாக இருக்கும் சில திட்டங்கள் சில ஆண்டுகள் தேவையானதாக இருக்கும், ஆனால் சில திட்டங்கள் மட்டும் தான் தலைமுறை தாண்டி தேவை இருக்கும் அப்படியான திட்டம் தான் இந்த திட்டம். கடந்த 2006&11 திமுக ஆட்சி காலத்தில் 2 இலட்சத்து 9 ஆயிரத்து 910 பேருக்கு புதிய மின் இணைப்புகள் தரப்பட்டது.

ஆனால் 2011-16 அதிமுக ஆட்சியில் 82 ஆயிரத்து 987 பேருக்கும், 2016-&21 அதிமுக ஆட்சியில் 1 இலட்சத்து 38 ஆயிரத்து 592 பேருக்கும் தான் புதிய இணைப்புகள் தரப்பட்டன. அதிமுக ஆட்சிக்கும் திமுக ஆட்சிக்குமான வேறுபாடு என்பது இதுதான். பத்து ஆண்டு காலத்திலே சுமார் 2 லட்சம் இணைப்புகள் தான் அதிமுக ஆட்சியில் தரப்பட்டன. ஆனால் ஆட்சிக்கு வந்த நான்கு மாத காலத்தில் ஒரு லட்சம் இணைப்புகளை நாம் கொடுக்கப் போகிறோம். இதை விட வேகமான ஆட்சி இந்தியாவில் இருக்க முடியாது என்கிற அளவுக்கு நாம் செயல்பட்டு வருகிறோம்.

திமுக ஆட்சி என்பதே விவாயிகளின் ஆட்சியாக, வேளாண்மை புரட்சி செய்யும் ஆட்சியாகத்தான் எப்போதும் இருந்துள்ளது. மண்ணையும் மக்களையும் காப்பதில் எப்போதும் யாருக்கும் சளைக்காத ஆட்சி தான் திமுக ஆட்சி. இதற்கு ஒரு உதாரணம், சில நாட்களுக்கு முன்னால் தமிழ்நாடு சட்டமன்றத்தில் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக துணிச்சலாக தீர்மானம் நிறைவேற்றிய ஆட்சி திமுக ஆட்சி என்பதை விவசாயப் பெருமக்கள் மறக்க மாட்டார்கள்.

காவிரி போன்ற பெரிய பிரச்னையாக இருந்தாலும், வேளாண் மக்களின் சிறு கோரிக்கையாக இருந்தாலும் அதற்கு உடனடியாகச் செவி மடுத்து அதனை நிறைவேற்றித் தரும் ஆட்சி தான் திமுக ஆட்சி. ஒரு லட்சம் புதிய இணைப்புகள் வழங்குகிறோம் – அதிலும் பெரும்பாலும் இலவசமாக வழங்குகிறோம் என்றால் தமிழ்நாடு மின்சார வாரியம் என்பது செழிப்பாக இருக்கிறது என்று யாரும் நினைத்துவிட வேண்டாம். செழிப்பாக அல்ல, சீரழித்து வைத்து விட்டுப் போயிருக்கிறார்கள் கடந்த அதிமுக ஆட்சியினர்.

1.59 லட்சம் கோடிக்கு கடனில் இருக்கிறது மின்வாரியம். ஆண்டுக்கு 16 ஆயிரம் கோடி வட்டி கட்ட வேண்டிய நிலைமையில் இருக்கிறது. மிக அதிகமான விலை கொடுத்து மின்சாரம் கொள்முதல் செய்துள்ளார்கள். குறுகிய கால ஒப்பந்தங்களாக இல்லாமல் மிக நீண்ட கால ஒப்பந்தங்களாகப் போட்டுள்ளார்கள். அனல் மின் நிலையங்களில் நிலக்கரி பதிவேட்டில் இருப்பதும் – இருப்பு இருப்பதும் வித்தியாசமாக உள்ளது.
புதிய மின் திட்டங்களை திட்டமிட்டுள்ளோம். 17 ஆயிரத்து 980 மெகா வாட் மின்சாரத்தை வரும் பத்தாண்டு காலத்தில் தயாரிக்க திட்டப்பணிகள் தொடங்கி இருக்கிறது. ஏற்கனவே திட்டமிடுதலில் உள்ள பணிகளை விரைந்து முடிக்கச் சொல்லி இருக்கிறோம். சூரிய சக்தி மின்சாரம் தயாரிப்புக்கு முன்னுரிமை வழங்க இருக்கிறோம். திருவாரூரில் சூரிய சக்தி பூங்கா அமைக்கப்பட இருக்கிறது என்று கூறினார்.
‘வரும் முன் காப்போம்’ திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியால் தொடங்கப்பட்ட ‘வரும் முன் காப்போம்’ திட்டத்தை 10 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது, ‘கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டம்‘ என்ற பெயரில் புத்துயிர் பெற்றுள்ளது. சேலம் மாவட்டம் வாழப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் சாதாரண மக்களும் நோய் நொடியின்றி வாழ வேண்டுமென்பதற்காக, வரும் முன் காப்போம் திட்டம், கடந்த திமுக ஆட்சியில் 2006ஆம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது. ஏராளமான மக்கள் இதன் மூலம் பயனடைந்தனர். அதிமுக ஆட்சியில் இத்திட்டம் தொடரப்படவில்லை. எளிய மக்களும் நோய் நொடியின்றி வாழ வேண்டும் எனும் நோக்கில், வருமுன் காப்போம் என்ற திட்டத்தை அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. அதில் பரிசோதனையின் மூலம், ஆரம்ப கட்டத்திலேயே நோய்கள் அடையாளம் காணப்பட்டு, அதற்கான உரிய சிகிச்சை வழங்கி பொதுமக்களின் உயிர் காக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதிமுக ஆட்சி அமைந்ததும் இந்த திட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில், அத்திட்டம் ‘கலைஞரின் வருமுன் காப்போம்’ என்ற பெயரில், மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் ஆண்டுக்கு, 1,250 சிறப்பு மருத்துவ முகாம்கள், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. அதாவது ஒரு வட்டாரத்துக்கு 3 முகாம்கள், ஒரு மாநகராட்சிக்கு 4 முகாம்கள் என, 385 வட்டாரங்கள் மற்றும் 20 மாநகராட்சிகளில் மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. சென்னை பெருமாநகராட்சியில் 15 மண்டலங்களிலும் 15 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்.
இந்த முகாம்களில் பொது மருத்துவர், அறுவை சிகிச்சை மருத்துவர், குடல் நோய் மருத்துவர், குழந்தை மருத்துவர், மகப்பேறு மருத்துவர், காது, மூக்கு, தொண்டை மருத்துவர் மற்றும் சித்த மருத்துவர் என 15 சிறப்பு மருத்துவர்கள் இருப்பார்கள். பொதுமக்களை பரிசோதித்து உடலில் என்ன பிரச்னை இருந்தாலும் கண்டுபிடிக்கப்பட்டு தேவையான சிகிச்சை வழங்கப்படும். மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டியிருந்தால் உடனடியாக பரிந்துரைக்கப்படும்.

இந்த முகாமில், சர்க்கரை நோய், புற்றுநோய், ரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் கண்டறியப்பட்டால், மக்களை தேடி மருத்துவத்தில் சேர்க்கப்பட்டு மருத்துவ உதவிகள் வழங்கப்படும் என்று தெரிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தைத் தொடங்கி வைத்த முதலமைச்சர் 2,530 பயனாளிகளுக்கு, 24 கோடியே 73 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சேலம் மாவட்டத்தில் 100 விழுக்காடு தடுப்பூசி போடப்பட்டுள்ள அத்தனூர்பட்டி, முத்தம்பட்டி, மஞ்சகுட்டை, குறிச்சி, தலைவாசல் ஊராட்சிகளின் தலைவர்களை முதலமைச்சர் பாராட்டினார்.

  • நமது நிருபர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button