உன்னால் ஒன்னும் புடுங்க முடியாதுடா…! நீதிபதியை மிரட்டிய போலீஸ்
சாத்தான்குளம் காவல்நிலைய சம்பவத்தால் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் சம்பந்தமாக சாத்தான்குளம் காவல்நிலையத்தில் கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை மேற்கொண்டு வருகிறார். அவரது விசாரணைக்கு காவல்துறையினர் ஒத்துழைக்க மறுத்து வருகின்றனர்.
காவல்துறையினரிடம் ஆவணங்களை கேட்டபோது காவலர் மகாராஜன் என்பவர் நீதிபதி பாரதிதாசனை பார்த்து உன்னால் ஒன்னும் புடுங்க முடியாதுடா என்று நான்காம் தர வார்த்தையை பயன்படுத்தி மிரட்டியுள்ளார். அப்போது டிஎஸ்பி பிரதாபன், குமார் மற்றும் காவலர்கள் உடன் இருந்திருக்கிறார்கள் .
நீதிபதியையே ஒரு சாதாரண காவலர் மிரட்டும் போது சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பொதுமக்களும் வியாபாரிகளும் என்ன பாடுபட்டிருப்பார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.
ஒரு நீதிபதியை காவலர் மிரடடிய சம்பவம் இந்தியாவிலேயே இது தான் முதல் முறையாக இருக்கும். தமிழக காவல்துறை வரலாற்றில் முதல் முறையாக இந்த சம்பவம் நடந்தேறி இருக்கிறது. காவலர்கள் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வில்லை என்பதையும் உன்னால் ஒன்னும் புடுங்க முடியாதுடா என்று காவலர் மகாராஜன் பேசிய வார்த்தையை அப்படியே தமிழில் எழுதி உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு மின்னஞ்சல் மூலம் புகார் அனுப்பியுள்ளார் விசாரணை நீதிபதி பாரதிதாசன்.
இந்த வழக்கில் ஏற்கனவே சாத்தான்குளம் காவல்நிலையத்தை மாவட்ட ஆட்சியரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. இந்த வழக்கில் காவல்துறையினர் கூறிய அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய்யான தகவல்களாக இருப்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது .ஆகையால் காவல்துறையினர் இந்த வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கின்றனர்.
தமிழக அரசு, எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவரின் நேரடி கண்காணிப்பில் இருக்கும் போதே இவ்வளவு முறைகேடுகள், மிரட்டல்கள், ஆவணங்கள் மறைப்பு நடைபெறுகிறதே ,சாதாரண சாமானியனுக்கு ஒரு அநீதி ஏற்பட்டால் எப்படி நீதி கிடைக்கும் என்கிற கேள்வி எழுகிறது.
மனித உரிமை அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் ஆகிய அனைவரின் கவனமும் சாத்தான்குளத்தின் மீது இருக்கும் போது , அந்த காவல்நிலையத்தின் காவலர் நீதிபதியையே மிரட்டும் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வாறு நீதி கிடைக்கப் போகிறது என்கிற கேள்வி எழுகிறது.
போலீஸ்காரர்களால் இந்தியா சர்வாதிகார நாடாக மாறி வருகிறதோ என்று தோன்றுகிறது