தமிழகம்

கோவையில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தம்…

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தொடர்ந்து அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பாரத் பயோடெக் நிறுவனத்தால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோவேக்சின் தடுப்பூசியும், சீரம் நிறுவன தயாரிப்பில் உருவாக்கப்பட்ட கோவீஷீல்டு தடுப்பூசியும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

அதேபோல், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரெம்டெசிவிர் ஊசி மருந்து வழங்கப்படுகிறது. சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனா தடுப்பூசிகளான கோவாக்சின், கோவிஷில்டு ஆகியவற்றுக்கு ஒருசில இடங்களில் தட்டுப்பாடு இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் 18 வயது முதல் 45 வயது வரையிலானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது.

இந்நிலையில் மும்பையிலிருந்து இண்டிகோ விமானம் மூலம் 2 லட்சம் டோஸ் கோவீஷீல்டு கொரோனா தடுப்பூசி மருந்துகள் சென்னை விமான நிலையம் கொண்டு வரப்பட்டது.

தடுப்பூசி மருந்துகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் பெற்றுக்கொண்டனர். இதையடுத்து குளிர்சாதன வாகனம் மூலம் சென்னை DMS வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி சேமிப்பு மையத்திற்கு அவை எடுத்து செல்லப்படுகின்றன. பின்னர் பற்றாக்குறை உள்ள மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கோவை மாவட்டத்தில் 120 இடங்களில் கொரோனா தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. கோவை அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில், கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் அரசு கலை கல்லூரிக்கு மாற்றப்பட்டது. அரசு கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் கடந்த ஒருவாரமாக தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வந்தது.

தடுப்பூசி போட வந்த 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கல்லூரி முன்பு தடுப்பூசி செலுத்துவதற்காக காத்திருந்த நிலையில், தடுப்பூசி முடிவடைந்தால் பொதுமக்களை போலிசார் கலைந்து செல்ல செய்தனர். இதனால் பல மணி நேரமாக காத்திருந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இந்நிலையில் கோவை அரசு கலைக் கல்லூரியில் தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. கல்லூரி முன்பு கரும்பலகையில் ‘தடுப்பூசி இல்லை’ என எழுதி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது,”தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. தடுப்பூசி மீண்டும் வந்தால் பணிகள் துவக்கப்படும்” என்றனர்.

ஆனந்தகுமார்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button