பல்லடம் வழித்தடம் பாதுகாப்பானதா? அச்சத்தில் பொதுமக்கள்!!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தென் மாநிலங்கள் மற்றும் திருச்சி, தஞ்சை, வேளாங்கண்ணி உள்ளிட்ட மாவட்டங்களுக்குச் செல்லும் பிரதான நெடுஞ்சாலையாக அமைந்துள்ளது. இந்நிலையில் அதிக அளவில் விபத்துக்கள் நடைபெற்று உயிரிழப்புக்கள் ஏற்பட்டதை அடுத்து நான்கு வழி சாலையாக தரம் உயிர்த்தப்பட்டு மையத்தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே சாலை விரிவாக்கம் விபத்துக்களுக்கு வித்திடுகிறதா? என்கிற அச்சம் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.
சாலையை கடக்கும் வாகனங்கள் பந்தைய சாலையாக எண்ணி அசுர வேகத்தில் இயக்கப்படுவதால் கட்டுப்பாட்டை இழந்து முன்னே செல்லும் வாகனங்கள் மீது பின்புறமாக மோதி விபத்துக்குள்ளாவது அதிகரித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் கேஸ் டேங்கர் லாரி கட்டுப்பாட்டை இழந்து பல்லடம் காவல்நிலையம் அருகே மையத்தடுப்பை உடைத்து மறுபுறம் சென்று வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. சமீபத்தில் நால்ரோடு சிக்னலில் இருந்து கோவை நோக்கி சென்ற தனியார் பேருந்து போட்டிபோட்டுக்கொண்டு வந்ததால் முன்னே சென்ற கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார் 7 பேர் காயமடைந்தனர்.
பொதுமக்கள் அதிகம் நடமாடும் நகரப்பகுதியில் பெரும்பாலும் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து ஓடுவதால் சமீப காலங்களில் பல்லடத்தில் விபத்துக்கள் அதிக அளவில் நடைபெறுகிறது. மேலும் பல்லடம் வழித்தடம் பாதுகாப்பானதா? என்கிற அச்சம் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.
– நமது நிருபர்