தமிழகம்

திண்டுக்கல் அய்யலூரில் மீண்டும் தலைதூக்கும் லாட்டரி கலாச்சாரம் : மாவட்ட எஸ்பி சிறப்பு கவனம் செலுத்த வேண்டி பொதுமக்கள் கோரிக்கை

லாட்டரிச் சீட்டு என்பது இந்தியாவில் சில மாநிலங்களில் நடைமுறையிலுள்ள குலுக்கல் பரிசுத் திட்டத்திற்கான சீட்டாகும். இந்த குலுக்கல் பரிசுத் திட்டம், 1998 ஆம் ஆண்டு இந்திய குலுக்கல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் நடத்தப்படுகிறது.
இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படும் பரிசுச் சீட்டுகளில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் எண்களைக் கொண்ட சீட்டு உடையவர்களுக்குப் பரிசுகளை அளிக்கும். இந்தியாவில் சில மாநில அரசுகள் குலுக்கல் பரிசுச் சீட்டுத் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன.
குலுக்கல் பரிசுச்சீட்டுத் திட்டத்தில் அருணாசலப் பிரதேசம், நாகலாந்து, மிசோரம், சிக்கிம் போன்ற மாநிலங்கள் முதன்மையாக இருக்கின்றன. இந்தியாவில் 2001-2002 ஆம் ஆண்டில் அதிகமான குலுக்கல் பரிசு சீட்டுகள் விற்பனையாகும் மாநிலமாகத் தமிழ்நாடு இருந்தது. குலுக்கல் பரிசுச் சீட்டு முடிவுகளை வெளியிடுவதற்கென்றே இரண்டு நாளிதழ்கள் தமிழ்நாட்டில் வெளியாகிக் கொண்டிருந்தன.

தமிழ்நாட்டில் தினக்கூலிப் பணியாளர்களும், குறைவான வருமானம் உள்ள ஏழை மக்களும் இப்பரிசுச் சீட்டில் ஆசை கொண்டு அதிக அளவில் சீட்டுகளை வாங்குவதால் அவர்களது குடும்பத்திற்கு உணவு, பொருளாதாரப் பாதிப்புகள் ஏற்படுகிறது என்று கூறி தமிழ்நாடு அரசு குலுக்கல் பரிசுச் சீட்டுத் திட்டத்தை 2003 ஆம் ஆண்டில் நிறுத்தியதுடன் பிற மாநில குலுக்கல் பரிசுச்சீட்டு விற்பனைக்கும் தடை விதித்தது. அதையும் மீறி விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து ஒடுக்கியது. லாட்டரிச் சீட்டினால் தோட்டம், காடு, பாத்திரங்களை இழந்த குடும்பங்கள் ஏராளம்…
இந்நிலையில்தான் நீரு பூத்த நெருப்பாக இன்றளவிலும் திண்டுக்கல் மாவட்டம், அய்யலூர் பேரூராட்சி பகுதிகளில் அமோகமாக தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு வியாபாரம் நடந்துவருகிறது. முற்றிலும் மலை கிராமங்கள் சூழ்ந்த பகுதிகளை உள்ளடக்கியதுதான் அய்யலூர் பேரூராட்சி. விவசாயத்தையே முதன்மைத் தொழிலாக செய்துவந்த இப்பகுதி மக்கள் மழையின்மையினாலும் நிலவும் கடும் வறட்சியினாலும் தற்போது விவசாயத்தை கைவிட்டுவிட்டு வயிறு வளர்பதற்கென்று வெவ்வேறு தொழில்களை செய்வதற்கு தளைப்பட்டுள்ளனர். காலம்பூராம் உழைத்தாலும் கால் வயிற்று கஞ்சிக்கு போதவில்லை எனும் கதையாக வறுமையிலும் வெறுமையிலும் உழன்ற மக்களின் பலஹீனங்களை மிகச்சரியாக பயன்படுத்தி அவர்களிடம் கொஞ்சம் நஞ்சமுள்ள வாழ்வியல் ஆதாரங்களையும் லாட்டரிச் சீட்டுக்கள் மூலம் கறந்து வருகிறது சில சமூக விரோத கும்பல்கள்.
ஒரே நாளில் லட்சாதிபதியாகவும் கோடீஸ்வரராகவும் ஆசைகொள்ளும் ஏதுமறியா ஏழை மக்களின் கனவுகளுக்கு பால்வார்க்கும் விதமாக அய்யலூரின் பல இடங்களில் இந்த தடை செய்யப்பட்ட லாட்டரி வியாபாரம் கண்ணும் காதும் வைத்தாற்போல் வெகு ஜோராக நடந்து வருகிறது. அவ்வப்போது சிலருக்கு லட்சங்களில் பரிசும் கிடைத்து விடுவதால் தற்போது படித்தவர் படிக்காதவர் என்று எவ்வித பாகுபாடுமின்றி அனைவரும் லாட்டரி சீட்டு வாங்கி கோடீஸ்வர கனவில் மிதந்து வருவது கண்கூடாகத் தெரிகிறது.


ஒரு காலத்தில் இந்த லாட்டரிச்சீட்டால் அய்யலூரில் பல குடும்பங்கள் அழிந்து போயிருக்கின்றன. அதிலும் சுரண்டல் லாட்டரி வந்தபோது பல சீமான்கள் சுரண்டிச் சுரண்டி ஏமான்களாய் மாறி குடும்பத்தை நடுத்தெருவில் விட்ட கதைகளும் அதிகம். அதே நிலை தற்போது மீண்டும் உருவாகிவருவது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாய் பேரூராட்சி வணிக வளாகப் பகுதிகள், சந்தை கேட்டு ஓரங்கள், ரயில்வே கேட் பகுதிகளில் இதற்கான வியாபாரிகள், ஏஜெண்டுகள் நிறைந்து கிடக்கின்றனர். பார்க்க வெகு சாது போலவும் ஏதுமறியா அப்பாவிகள் போலவும் தோற்றமளிக்கும் அவர்களிடம்தான் கட்டுக்கட்டாய் லாட்டரிச் சீட்டுகள் விற்பனைக்கு கிடைக்கின்றன. குறைந்தபட்சம் ஐநூறு ரூபாயிலிருந்து முப்பதாயிரம், ஐம்பதனாயிரம் ரூபாய் வரை லாட்டரி சீட்டுக்கள் வாங்கி அன்றாடம் ஏமாற ஆட்கள் உண்டு.
வடமதுரை போலீசார் எப்போதாவது வந்து கூலிக்கு விற்கும் ஒருசில ஏப்பை சுப்பைகளை பிடித்து கேஸ் எழுதி தமது கடமையினை முடித்துக்கொள்கிறது. லாட்டரி சீட்டு வியாபாரம் எவ்வித குறுக்கீடும் இல்லாமல் நடக்க உள்ளூர் அரசியல் அமைப்புகள் தொடங்கி வடமதுரை காவல்நிலையம் மற்றும் வேடசந்தூர் டிஎஸ்பி வரைக்கும் ‘கவனிப்பு’ செய்யப்படுவதாக பொதுமக்களால் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பல்வேறு புகார்கள் எழுந்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சமூக ஆர்வலர்கள் சிலரால் மாவட்ட ஆட்சித் தலைவரின் கவனத்துக்கும் அய்யலூரின் இந்த இழிநிலை எடுத்துச்செல்லப்பட்டிருக்கிறது.
எது எப்படியோ அய்யலூரில் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். விற்பவர்கள் மீது மாவட்ட எஸ்பி சக்திவேல் மிக கடுமையான நடவடிக்கை எடுத்து இப்பகுதி மக்களின் வாழ்நிலையை காக்கவேண்டும் என்பதே அய்யலூர் பகுதி மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

  • சுப்பிரமணி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button