அரசியல்தமிழகம்

சி.பி.எஸ்.இ. 9ஆம் வகுப்பு பாட நூலில் நாடார் சமூக மக்களை இழிவுபடுத்துவதா?: வைகோ கண்டனம்

சிபிஎஸ்இ 9ஆம் வகுப்பு பாடநூலில் நாடார் சமூக மக்களை இழிவுபடுத்தும் வகையில் பாடம் இடம்பெற்று இருக்கிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது, “மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடநூலில் பக்கம் 168 இல், சாதி மற்றும் மோதலும்; ஆடை மாற்றமும் என்ற குறுந்தலைப்பில் நாடார் சமுதாயத்தை இழிவு படுத்தும் வகையில் பாடம் இடம்பெற்று இருக்கிறது.
2012 ஆம் ஆண்டு இதுபோன்று நாடார்குல மக்கள் மீது அவதூறு செய்யும் வகையில் சி.பி.எஸ்.இ., 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் இடம்பெற்று இருந்தது. அதனை நீக்க வேண்டும் என்று 2012 அக்டோபர் 26 இல் நான் அறிக்கை வெளியிட்டு வலியுறுத்தினேன். மத்திய அரசின் இடைநிலைக் கல்வி வாரியத்தைக் கண்டித்தும், நாடார் மக்கள் மீது நஞ்சைக் கக்கும் பாடத்தை அறவே நீக்க வலியுறுத்தியும் 2012 நவம்பர் 2 ஆம் தேதி நாகர்கோவிலில், தலைமை அஞ்சலகம் எதிரே மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தினோம்.
இந்நிலையில், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள சி.பி.எஸ்.இ., 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் நாடார் சமுதாயத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில், அதே பாடம் இடம்பெற்று இருக்கிறது.
தமிழகத்தின் வரலாற்றில் நாடார்குல மக்களுக்கு மேன்மையான சிறப்பு இருக்கிறது. பழந்தமிழர் பூமியான நாஞ்சில் நாட்டின் குமரி மாவட்டத்தை கேரளத்தோடு இணைப்பதற்கு வஞ்சக சதி நடந்தபோது, அதை எதிர்த்து மக்களைத் திரட்டிப் போராடிய வீர வரலாறு மார்ஷல் நேசமணி, குஞ்சன் நாடார், தாணுலிங்க நாடார், நத்தானியர், பி.எஸ்.மணி, சிதம்பர நாடார், கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை உள்ளிட்ட பெருமக்களுக்கு உண்டு.
நாடார்குல பெருமக்கள் நாஞ்சில் நாட்டின் மண்ணின் மைந்தர்கள் ஆவார்கள். ஆனால், அவர்களை பிழைப்புத் தேடி இடம்பெயர்ந்து வந்தவர்கள் என்று சி.பி.எஸ்.இ., பாடநூல் குறிப்பிடுகிறது. மேலும் பழம்பெருமை வாய்ந்த நாடார் சமூக மக்களை மதிப்புக் குறைவான பெயரைக் குறிப்பிட்டு, இழிவுபடுத்தப்பட்டு இருக்கிறது.
நாடார் சமூகத்திற்கும், அக்குலப் பெண்களுக்கும் இழைக்கப்பட்ட அநீதிகளையும், கொடுமைகளையும் எதிர்த்து அய்யா வைகுண்டநாதர் தலைமையில் அறப்போராட்டம் வீறுகொண்டு எழுந்தது. ஆனால் சி.பி.எஸ்.இ. பாடநூலில் நாடார் சமூக பெண்கள் மேலாடை அணியும் உரிமை பெறுவதற்காக கிறித்துவ சமயத்தைத் தழுவியதாக சி.பி.எஸ்.இ. பாடநூலில் நஞ்சை கொட்டி இருக்கிறார்கள்.
தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சி.பி.எஸ்.இ. 9 ஆம் வகுப்புப் பாடநூலில் வரலாற்று உண்மைகளை மறைத்து, நாடார் சமூகத்தின் மீது அவதூறு சேற்றை வாரி வீசி இருப்பது மன்னிக்கவே முடியாத கொடும் செயலாகும். மத்திய பா.ஜ.க. அரசு சி.பி.எஸ்.இ., 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் நாடார்குல மக்களை தவறாகச் சித்தரிக்கும் பாடத்தை உடனே நீக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” என்றார்.
மேலும், இலங்கை அரசு தூத்துக்குடி மீனவர்களை கைது செய்ததை கண்டித்து அவர் கூறியதாவது; “ஆகஸ்டு மாதம் 21 ஆம் தேதி, தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள், இந்திய கடற்பரப்பில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது வழக்குத் தொடுத்து, இலங்கை கல்பிட்டி நீதிமன்றத்தில் நேர் நிறுத்தப்பட்டு, புத்தளம் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் கல்பிட்டி சுற்றுலா நீதிமன்றத்தில் அக்டோபர் 16 ஆம் தேதி விசாரணை நடத்தப்பட்டு, தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை நீதிமன்றம், தமிழக மீனவர்கள் சா.அந்தோணி, அ.ரூபின்ஸ்டன், ந.வில்பிரட், நே.விஜய், சே.ரமேஷ், பே.இசக்கிமுத்து, மொ.கோரத்த முனியன் மற்றும் மாப்பிள்ளையூரணியைச் சேர்ந்த சீ.ஆரோக்கியம் உள்ளிட்ட எட்டு பேருக்கும் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய கடற் தொழில் சட்டத்தின் கீழ் தலா ரூ.60 இலட்சம் அபராதம், மூன்று மாதம் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பு அளித்து இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது.
தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழிலை நசுக்கும் புதிய கடற்தொழில் சட்ட முன்வரைவு இலங்கை நாடாளுமன்றத்தில் முன் வைக்கப்பட்டபோதே, இந்திய அரசு தலையிட்டு திரும்பப் பெற வலியுறுத்த வேண்டும் என்று 2016 டிசம்பர் 8 ஆம் தேதியே நான் அறிக்கை வெளியிட்டேன்.
பின்னர் 2016 டிசம்பர் 15 ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி அவர்களை டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் நேரில் சந்தித்து, இதே கருத்தை எடுத்துக்கூறி வலியுறுத்தினேன்.
தமிழக மீனவர்களை மிரட்டி, அச்சுறுத்தி மீன்பிடித் தொழிலைவிட்டே விரட்ட வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் சிங்கள அரசால் கொண்டுவரப்பட்ட இக்கொடிய சட்டத்தைத் இலங்கை அரசு திரும்பப் பெற இந்தியா அழுத்தம் தர வேண்டும் என்பதை வலியுறுத்தி, 2016 டிசம்பர் 16 ஆம் தேதி இராமநாதபுரத்தில் எனது தலைமையில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடத்தினேன்.
இதன் பின்னர் 2017 மே 11 ஆம் தேதி இலங்கை அரசின் அழைப்பின் பேரில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் விசாக நாள் விழாவில் பங்கேற்க இலங்கை சென்றபோது, தமிழக மீனவர் நலனுக்கு எதிரான சட்ட முன்வடிவு குறித்து சிங்கள அரசிடம் இந்தியாவின் கவலையைத் தெரிவிப்பார் என்ற எதிர்பார்ப்பும் நிறைவேறவில்லை.
இலங்கையின் கருப்புச் சட்டத்திற்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 2017 ஜூலை 8 ஆம் தேதி பிரதமர் மோடி அவர்களிடம் மீண்டும் கோரிக்கை வைத்தேன்.
இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய கடல்தொழில் சட்டம் நடைமுறைக்கு வந்தபோது பா.ஜ.க. அரசு, தமிழக மீனவர்களை இந்தியர்களாக கருதவில்லையா? என்று 2018 ஜனவரி 26 இல் கேள்வி எழுப்பினேன்.
தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியப்போக்குடன் நடந்துகொண்டு வரும் மத்திய பா.ஜ.க அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன்.
இந்திய அரசு உடனடியாக தலையிட்டு, தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் மீது இலங்கை அரசால் போடப்பட்டுள்ள வழக்கைத் திரும்பப் பெறச் செய்து, விடுதலை செய்திட உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button