தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்குகளில் உச்ச நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் வெவ்வேறு நிலைப்பாடுகள் எடுத்துள்ளதாக, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்காததால், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், பஞ்சாயத்து ராஜ் செயலாளர், நகராட்சி நிர்வாகத் துறை செயலாளர்கள் மீது தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு, நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சுந்தர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, வார்டு மறுவரையறை பணிகள் முடிவடையாததால் உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியவில்லை என உயர் நீதிமன்றத்தில் தெரிவித்து விட்டு, தேர்தல் நடத்த தயாராக இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் கூறியது ஏன் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தது ஏன் எனவும் தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் நீதிபதிகள் வினா எழுப்பினர். இதுசம்பந்தமாக விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நவம்பர் 8 ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
இதனிடையே தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கு எப்போது இடைத்தேர்தல் வந்தாலும் சந்திக்க அதிமுக தயார் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளர்.
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தினகரனை சந்தித்த 3 எம்எல்ஏக்களிடம் விளக்கம் கேட்டு அதிமுக நோட்டீஸ் அனுப்பவில்லை என்று கூறினார். உள்ளாட்சி தேர்தலை நடத்த மாட்டோம் என சொல்லவில்லை என்று கூறிய முதலமைச்சர், நீதிமன்றத்தை நாடி தடை உத்தரவு பெற்றது திமுக தான் என்றும் தெரிவித்தார். அதிமுக அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத தினகரன் குறித்து கேள்வி கேட்க வேண்டாம் என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.