6 வயதில் காணாமல் போன மகன் : 20 ஆண்டுகளுக்கு பின் மகனை கண்டுபிடித்த தாய்
திட்டக்குடி அருகே, 6 வயதில் காணாமல் போன மகனை 20 ஆண்டுகளுக்குப் பின்னர் மீட்டுள்ளார் ஏழைத் தாய் ஒருவர். உறவுக்காரப் பெண் அடையாளம் கண்டு கொடுத்த தகவலின் பேரில் மீண்டும் மகனை மீட்டுள்ளார்.
திட்டக்குடியை அடுத்த திருமாந்துறை கிராமத்தை சேர்ந்தவர் இந்திரா. கணவனை இழந்த நிலையில், மகன் மற்றும் மகளை விவசாயக் கூலி வேலை செய்து காப்பாற்றி வந்துள்ளார். 20 ஆண்டுகளுக்கு முன்பு தனது 6 வயது மகனை மரத்தடியில் அமர வைத்து விட்டு, வயலில் வேலை செய்யச் சென்ற அவர், திரும்பி வந்து பார்த்தபோது, மகனைக் காணாமல் பரிதவித்துள்ளார்.
பல இடங்களில் தேடியும் மகன் கிடைக்காத நிலையில், அன்றாடம் அழுது நொந்து கொண்டிருந்த அவர், தனது மகளுடன் பெங்களுர் பகுதியில் வீட்டு வேலைக்காகச் சென்றுவிட்டார்.
அவ்வப்போது சொந்த ஊருக்கு வரும் போது, மகனைப் பற்றிய தகவல் ஏதாவது கிடைக்கிறதா என விசாரித்து வந்துள்ளார். இதனிடையே, மகளை வளர்த்து திருமணம் செய்து கொடுத்துவிட்டதால், சிலமாதங்களுக்கு முன்பு சொந்த ஊரான திருமந்துரைக்கு திரும்பியுள்ளார்.
இந்த நிலையில், அண்மையில், ராமநத்தத்தில் உள்ள உறவுக்கார பெண் ஒருவரின் வீட்டிற்கு சென்றுள்ளார் இந்திரா. அப்போது அந்த உறவுக்காரப் பெண், தொழுதூர் பகுதியில் கட்டிட கூலி வேலைக்குச் சென்றபோது, தன்னுடன் ஒருவர் வேலை செய்ததாகவும், அந்த இளைஞர் இந்திராவின் கணவர் சரவணனின் சாயலில் இருந்ததாகவும் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அந்த இளைஞரைத் தேடி உறவினர்களுடன் சென்று விசாரித்த போது, அவர் தனது பெயர் இம்ரான் என்றும், தனது தந்தை அபிபுல்லா ராமநத்தத்தில் இருப்பதாகவும் கூறியுள்ளார். ஆனால் இம்ரான் தன் மகன்தான் என்ற உறுதியுடன் இருந்த தாய் இந்திரா, அபிபுல்லாவை சந்தித்து தன் மகன் காணாமல் போனதைக் கூறியுள்ளார்.
அதன்பின்னர், 15, 16 ஆண்டுகளுக்கு முன்பு 10 வயது சிறுவனாய் அவன் தெருவோரத்தில் அழுது கொண்டு நின்றதாகவும், அவனை அழைத்து வந்து தான் வளர்த்து வருவதாகவும் கூறிய அபிபுல்லா, முறைப்படி போலீசாரிடம் கூறி முடிவு காணக் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, தாய் இந்திராவின் புகாரின் பேரில், விசாரணை செய்த ராமநத்தம் போலீசார், இம்ரான் என்ற பெயரில் வளர்ந்து வந்த அந்த இளைஞர், இந்திராவின் மகன்தான் என்பதை உறுதி செய்து தாயுடன் அனுப்பி வைத்தனர்.
6 வயதில் காணாமல் போன அந்த சிறுவன் 10 வயது வரை ஒரு பெரியவரின் பராமரிப்பில் இருந்து வந்ததாகவும், அவர் விட்டுச் சென்றவுடன், அபிபுல்லாவின் பராமரிப்பில் வந்ததாகவும், சிறுவனின் தாய் இந்திரா தெரிவித்துள்ளார்.
யாருமற்ற நிலையில் வாழ்ந்து வந்த நிலையில், மீண்டும் தனது மகன் கிடைத்தது, பெரும்வரம் கிடைத்ததற்கு ஒப்பானது என்று நெகிழ்கிறார் ஏழைத்தாய் இந்திரா.