உள்ளாட்சி தேர்தலை நடத்த திமுக தடையாக இல்லை- முக ஸ்டாலின்
உள்ளாட்சி தேர்தலை நடத்த விடாமல் தாங்கள் தடுக்கவில்லை என்று தி.மு.க. பொறுப்பாளர் இல்ல திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் நிவேதா எம்.முருகன் இல்ல திருமண விழா திருக்கடையூர் கலைஞர் அரங்கில் நடந்தது. திருமண விழாவுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர், “இன்று நடைபெறும் சீர்திருத்த திருமணம், தி.மு.க. ஆட்சிக்கு வராத காலத்தில் சட்டமாக்கப்படவிலலை. கடந்த 1967-ம் ஆண்டு அண்ணா தலைமையில் தி.மு.க. வெற்றி பெற்றது. அப்போது சட்டமன்றத்தில் முதல் தீர்மானமாக சீர்திருத்த திருமணங்களை சட்டமாக்கினார்.
அதை நினைவுகூர்ந்து தமிழர்கள் முறைபடியும், தமிழ் முறைப்படியும் இன்று சீர்திருத்த திருமணங்களை நடத்தி கொண்டிருக்கிறோம். கலைஞர் பிறந்த ஊர் திருக்குவளை என்றாலும் நாகை மாவட்டத்தில் தான் பிறந்தார். தி.மு.க. தலைவராக நான் பொறுப்பேற்ற பிறகு கலைஞர் பிறந்த ஊரில் முதன் முறையாக சீர்திருத்த திருமணம் நடத்துவது பெருமை அளிக்கிறது.
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லும் என்பது எடப்பாடிக்கும், தினகரனுக்கும் உள்ள பிரச்சனையாக இருக்கலாம். இதனால் தி.மு.க.வுக்கு எந்த விதத்திலும் பாதிப்போ, சாதகமோ இல்லை. இது அவர்களுடைய பிரச்சனை. 18 எம்.எல்.ஏ.க்கள் தொகுதிகள் மற்றும் திருவாரூர், திருப்பரங்குன்றம் என 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த முதல்- அமைச்சர் எடப்பாடி தயார் என கூறுகிறார்.
உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாத எடுபிடி அரசு, 20 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்த கூறுவது எந்த தகுதியும் இல்லை. நீதிமன்றம் பல்வேறு காலக்கெடு கொடுத்தும் உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியவில்லை. சாக்குபோக்கு காரணங்களை கூறி தள்ளி வைத்து வருகிறார்கள். உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருப்பதற்கு காரணம் தி.மு.க. தான் என்று பொய் பிரசாரம் செய்து வருகிறார்கள்.
தி.மு.க. உண்மையிலேயே வழக்கு தொடர காரணம் சட்ட விதிகளின்படி இட ஒதுக்கீடு அனைத்தும், நேர்மையான முறையில் நடத்த வேண்டும் என்று தான் தேர்தல் ஆணையம் மீது வழக்கு போட்டோம். உள்ளாட்சி தேர்தலை நடத்த விடாமல் நாங்கள் தடுக்கவில்லை. இதற்கு பதில் சொல்ல வேண்டிய உரிமை தமிழக தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது. ஆனால் எடப்பாடி சொல்கிறபடி தேர்தல் ஆணையம் செய்கிறது. தலைமை செயலாளர் உள்ளாட்சி தேர்தலை நடத்த தேதி குறிப்பிடாமல் வெறுமனே அறிக்கையை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியுள்ளார்.
முதல்-அமைச்சர் எடப்பாடி மக்கள் விரோதமாக செயல்பட்டு வருவதால் எடுபிடி அரசு என்று கூறியதால் என்மீது தமிழக அரசு 7 வழக்குகளை தொடர்ந்துள்ளது. இதை நான் சந்தித்து தான் வருகிறேன். மத்திய அரசுடன் சேர்ந்து மக்கள் விரோத போக்கை கடைபிடித்து வருவதால் எடுபிடி அரசு என்று சொல்லாமல் எப்படி அழைப்பது?
தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் உள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி மீது சி.பி.ஐ. விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. தி.மு.க. வருகிற தேர்தல்களில் வெற்றி பெற்று ஊழலில் சம்பந்தப்பட்ட எடப்பாடி மற்றும் அமைச்சர்கள் அனைவரும் சிறைக்கு செல்வார்கள்.
தமிழகத்தில் இதுவரை டெங்கு காய்ச்சலுக்கு 100-க்கும் பாதிக்கப்பட்டு இறந்து கொண்டு இருக்கிறார்கள். தமிழக அரசின் சுகாதார துறை எந்த கவனமும் செலுத்தாமல் உள்ளது. முடிந்தவரை எல்லாவற்றையும் கொள்ளையடித்து சுருட்டி கொள்வது என்று உள்ளனர்.
தி.மு.க. ஆட்சி அமையும். சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்படுவார்கள்.” என்று பேசினார்.