வாக்கு சேகரித்த வாரிசுகள்…
2021 சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் எந்தத் தேர்தலிலும் இல்லாத வகையில் இந்த தேர்தல் மிகவும் கடுமையான போட்டிகள் நிறைந்த தேர்தலாகவே பார்க்கப்படுகிறது.
இந்த தேர்தலில் பல வேட்பாளர்களுக்கு தங்களது குடும்பத்தினரும் களத்தில் இறங்கி வாக்குகளை சேகரித்தனர். விராலிமலைத் தொகுதியில் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு போட்டி கடுமையாக இருந்ததால் அவரது மகள், மனைவியும் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு உருக்கமாகப் பேசி வாக்குகள் சேகரித்தனர். இதேபோல், திருமங்கலம் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் உதயகுமாருக்கும் இந்த முறை போட்டி கடுமையாக இருந்ததால் அவரும் தனது மகளை பிரச்சாரத்தில் இறக்கினார்.
கோடைகாலத்தில் வெயிலின் தாக்கத்தையும் பொருட்படுத்தாமல் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் மகள் விராலிமலைத் தொகுதி முழுவதும் பிரச்சாரம் செய்தார். அதேபோல் திருமங்கலம் தொகுதியில் வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமாரின் மகளும் தொகுதி முழுவதும் பிரச்சாரம் செய்து வாக்குகள் சேகரித்தார். அமைச்சர்களின் குழந்தைகள் பிரச்சார வாகனங்களில் பிரச்சாரம் செய்தனர்.
ஆனால் பழனி சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமாரின் மகன் தொகுதி முழுவதும் நடந்து சென்று பொதுமக்களிடம் தனது தந்தைக்காக பிரச்சார நோட்டிஸ்களை வழங்கி வாக்குகளை சேகரித்ததை பார்க்கும் போது மிகவும் சுவாரசியமாக இருந்ததாக பொதுமக்கள் கூறுகிறார்கள்.
திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமியின் பேரனும் பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமாரின் மகனுமான பதிமூன்று வயதே ஆன செந்தூர் ஆதவனின் பிரச்சாரம் அனைவரையும் கவர்ந்திருக்கிறது. இருபது நாட்களாக பழனி சட்டமன்றத் தொகுதி முழுவதும் மக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி மக்களின் பிரச்சனைகளை கேட்டதோடு திமுகவின் இருவண்ண சால்வையை தோளில் சுமந்து கொண்டு வெயிலையும் பொருட்படுத்தாமல் நடந்தே சென்று இந்த தேர்தலில் களப்பணியாற்றி வாக்குகளை சேகரித்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
– ரபீக் அகமது