ஆன்லைனில் மது விற்பனை செய்த இளைஞர் கைது…திருப்பூர் அருகே பரபரப்பு…..
திருப்பூர் அருகே ஆன்லைனில் மது விற்பனை செய்த வாலிபரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் விசைத்தறி கோழிப்பண்ணை மற்றும் பனியன் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் இத்தொழிலை நம்பி லட்டசக்கணக்கான தொழிலாளர்கள் வெளிமாநிலங்களில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் இங்கு வந்து தங்கி பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் போதைக்கு அடிமையான தொழிலாளர்களை குறி வைத்து பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான லட்சுமி மில்ஸ், கரடிவாவி, காரணம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் புற்றீசல் போல் ரெஸ்டாரண்ட்கள் முளைத்துள்ளன. இந்த ரெஸ்டாராண்ட்டுகளில் மது வகைகள் சட்டவிரோதமாக பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டுவருகிறது. இந்நிலையில் நூதன முறையில் லட்சுமி மில்ஸ் பகுதியில் செயல்பட்டு வரும் கார்டன் ரெஸ்டாரண்ட்டில் மது வகைகள் அதிக அளவில் பதுக்கி வைக்கப்பட்டு ஆன்லைன் மூலமாக படு ஜோராக சரக்கு விற்பனை வீடுகளுக்கே சென்று சப்ளை செய்யப்படுவதாக பல்லடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனை அடுத்து லட்சுமி மில்ஸ் பகுதியில் உள்ள கார்டன் ரெஸ்டாரண்டில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 24 பீர் பாட்டில்கள் மற்றும் இரு சக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்து சுரேஸ்(வயது 33) என்பவரை கைது செய்தனர். பின்னர் இரவு சுரேஸ் ஜாமினில் வெளியே வந்த பிறகு தொடர்ச்சியாக ஆன்லைனில் மது விற்பனையை தொடர்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுரேசை கைது செய்து 52 குவாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் மொத்தமாக டாஸ்மாக் கடையில் இருந்து தொடர்ந்து மது வகைகளை கொள்முதல் செய்து இது போன்று அதிக விலைக்கு சட்டவிரோதமாக சுரேஸ் விற்பனை செய்து வருவதால் டாஸ்மாக் ஊழியருக்கு தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது.
எனவே இது போன்று ஆன்லைனில் சரக்கு விற்பனை செய்து வருவோர் மீது நடவடிக்கை எடுப்பதோடு தொடர்புடைய டாஸ்மாக் ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது.
நமது நிருபர்.