கருகும் குறுவைப் பயிர்கள்… டெல்டா விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வழங்குவது எப்போது?!
காவிரியிலிருந்து தண்ணீர் திறக்கப்படுமா என்பது ஒருபுறம் பெரும் சந்தேகமாக இருக்கும் சூழலில், ஏற்கெனவே திறக்கப்பட்ட காவிரிநீர் கடைமடையை எட்டாமல், குறுவைப் பயிர்கள் கருகிவருகின்றன. அதற்கு தமிழக அரசு நிவாரணத் தொகை வழங்குவதாக அறிவித்து ஆய்வும் நடத்தப்பட்டது. ஆனால், நிவாரணத் தொகை வரவு குறித்த தகவல் எதுவும் இன்னும் வரவில்லை என்கிறார்கள் விவசாயிகள்.
கடந்த ஜூன் 12-ம் தேதி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய டெல்டா பகுதிகளுக்கு மேட்டூர் அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டது. தொடக்கத்தில் நீர் போதிய அளவு கிடைத்ததால், பல விவசாயிகள் குறுவைச் சாகுபடி செய்ய தீவிரம் காட்டினர். இதனால், இந்த ஆண்டு 5.2 ஏக்கரில் குறுவை பயிரிடப்பட்டது. ஆனால், அதன் பிறகு கர்நாடக அரசு சரியாக நீர் திறக்கவில்லை. இதனால், மேட்டூர் நீர்மட்டம் கிடுகிடுவெனக் குறைந்தது. கடைமடை வரை நீர் பாயாததால் பல ஏக்கர் குறுவைப் பயிர்கள் கருகத் தொடங்கின.
எனவே, வேளாண்துறையின் செயலாளர் தலைமையில் அதிகாரிகள் குழு நேரடியாகச் சென்று ஆய்வுசெய்தது. விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தையும் தமிழக அரசிடம் சமர்பித்திருக்கிறது. இந்த நிலையில், கடந்த 7-ம் தேதி தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் விவசாயிகளுக்குக் கொடுக்கப்படவேண்டிய நிவாரணத் தொகை பற்றி விவாதிக்கப்பட்டது என்றும், அது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் சொல்லப்பட்டது. ஆனால், ஆலோசனைக் கூட்டம் முடிந்து இத்தனை நாட்கள் ஆகியும், அதற்கான எந்த அறிவிப்பையும் அரசு வெளியிடவில்லை.
இது குறித்து தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தினர் பேசுகையில், “காவிரி அணை இப்போதே வரண்டுவிட்டது. இதனால், டெல்டா பகுதிலுள்ள 3.5 லட்சம் ஏக்கர் குறுவைப் பயிர் கருகத் தொடங்கியிருக்கிறது. இந்த நிலையில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு விளைச்சலுக்குத் தயாராக இருந்த பயிர்களை மட்டும் அதிகாரிகள் கணக்கெடுத்திருக்கின்றனர். மேட்டூர் நீர்மட்டம் மேலும் குறைந்திருப்பதால், சில நாட்களில் இளங்கதிர்களும் தண்ணீர் கிடைக்காமல் காய்ந்துவிடும். எனவே, மீண்டும் கணக்கெடுக்கும் பணிகளை அரசு தொடங்கியிருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 10, 15 நாள்களுக்குப் பிறகு நிவாரணத் தொகை மற்றும் பிற விவரங்கள் வெளியிடப்படும்.
கோர்ட் உத்தரவிட்ட பின்னரும், ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நீர் மிகக் குறைந்த அளவிலேயே திறந்துவிடப்பட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவையும் மீறி, கர்நாடக அரசு மெத்தனமாகச் செயல்படுகிறது. தொடக்கத்தில் மாநில அரசு ஆணையத்தை இவர்கள் புறக்கணித்தார்கள். அதன் பிறகு, நாங்கள் வைத்த கோரிக்கைப்படி ஆணையத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள தமிழ்நாடு தயாராக இருந்தது. ஆனால், ஆணையத்தின் செயல்பாடுகளை மொத்தமாக முடக்கும் செயலில் மத்திய அரசு ஈடுபட்டுவருகிறது.
காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மத்திய அரசின் பிரதிநிதிகள் தமிழ்நாடுமீது ஆதாரமற்ற குற்றச்சாட்டை வைக்கின்றனர். குறிப்பாக `குறுவை என்ற பெயரில் காவிரிநீரை வீணடிக்கின்றனர். நெல்லுக்கு மாற்றுப் பயிர்களைச் சாகுபடி செய்ய மறுக்கிறார்கள். தென்மேற்குப் பருவமழை முடிந்த நிலையில், வடகிழக்குப் பருவமழை தமிழ்நாட்டுக்குக் கைகொடுக்கும். ஆனால் கர்நாடகாவில் இனி மழை பெய்வதற்கான வாய்ப்பு இல்லை. எனவே, தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது’ என மத்திய அரசு கூறுகிறது.
இதையே வார்த்தை மாறாமல் உச்ச நீதிமன்றத்தில் ஆணையத் தலைவர் எழுத்துபூர்வமாக அறிக்கையாகச் சமர்ப்பித்திருக்கிறார். இதன் மூலம் மத்திய அரசு, காவிரிப் பிரச்னையில் கர்நாடகாவுக்கு ஆதரவாகவும், அரசியல் உள்நோக்கத்தோடு, தமிழ்நாடு விவசாயிகளை அழிக்கும் நோக்கோடு செயல்படுவது வெட்ட வெளிச்சமாகிறது.
ஆணையம் உத்தரவிட்டும், தமிழ்நாட்டுக்கு தண்ணீரைத் தர கர்நாடகா மறுக்கிறபோது ஆணைய முடிவை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு இருக்கிறது. அதை நிறைவேற்ற மத்திய அரசு மறுக்கிறது. இந்த நிலையில் உபரிநீரையும் தடுத்து மேக்கேதாட்டூ அணை கட்டுவதற்கு கர்நாடக முயல்கிறது. அதற்கு மறைமுகமாக மத்திய அரசு துணைபோகிறது. இதன் மூலம் தமிழ்நாட்டில் 3.5 லட்சம் ஏக்கரில் குறுவை, கதிர் வரும் நிலையில் கருகத் தொடங்கியிருக்கிறது. சுமார் 15 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடியைத் தொடங்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
ஆகவே, இனி தமிழக அரசின் மீது குறை சொல்ல முடியாது. ஏற்கெனவே, கர்நாடகாவில் தமிழகத்துக்கு நீர் திறக்கக் கூடாது என விவாசயிகள் போராடத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், தமிழக அரசுடன் கைகோர்த்து அனைத்து அமைப்புகளும் ஒன்றாக கர்நாடகாவுக்கும், தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கும் எதிராகத்தான் போராட வேண்டும்.
கர்நாடக ஆளும் காங்கிரஸ் அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும் நடத்தி, `தமிழகத்துக்குத் தண்ணீர் தர மாட்டோம்’ எனத் திட்டவட்டமாகக் கூறுகிறது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
இது குறித்து அதிகாரிகள் வட்டாரங்களிடம் கேட்டபோது, ”குறுவைப் பயிர்கள் கருகியது தொடர்பாக இன்னும் கணக்கெடுப்புப் பணிகள் முடியவில்லை. மேலும், மேட்டூர் அணையில் நீரளவு மிகவும் குறைந்திருக்கிறது. இதனால், ஆய்வின்போது காயாத சிறிய பயிர்களும் சில நாள்களில் காய்ந்துவிடும். எனவே, அதையும் கணக்கெடுத்து நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். எனவே, மீண்டும் கணக்கெடுக்கும் பணி முடிந்த பின்னர் நிவாரணம் குறித்த அறிவிப்பு வரும்” என்றனர்.
– சிவா