எத்தனை வழக்குகள் போட்டாலும், சவால் விட்ட தொடர் ரேஷன் அரிசி கடத்தல் குற்றவாளி !
ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுவோர் மற்றும் பதுக்குவோர் மீது, தடுப்பு காவல் சட்டத்தின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை உயர் அதிகாரிகள் தொடர்ந்து எச்சரிக்கைவிடுத்து வருகின்றனர். ஆனாலும் ரேஷன் அரிசி கடத்தல் தொழிலை நீண்ட காலமாக செய்துவரும் கடத்தல் மாஃபியா கும்பல், போலீசாருக்கு சவால்விடும் வகையில் அவர்களும் தொடர்ந்து ரேஷன் அரிசியை வெளிமாநிலங்களுக்கு கடத்தி கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு ( தெற்கு ) ஆய்வாளர் தாம்சன் சேவியர் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, ஆய்வாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், போரூர் ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த துளசி ராமன் என்கிற ராமாபுரம் சதீஷ் என்பவர் 3 டன் ரேஷன் அரிசியை வேனில் ஏற்றிக்கொண்டு ஆந்திராவிற்கு சென்றுள்ளார். அப்போது மடக்கிப்பிடித்து சோதனை நடத்தியபோது, வாகனத்தில் 3 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பின்னர் அவரை கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அவர் மீது ஏற்கனவே ரேஷன் அரிசி கடத்தியதாக பத்திற்திற்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த 2015 ஆண்டு முதல் இவரை சரித்திர பதிவேடு குற்றவாளியாக காவல்துறையினரின் தொடர் கண்காணிப்பில் இருந்துள்ளார். அதன்பிறகு கடந்த 2021- 2023 ஆண்டுகளில் கள்ளச்சந்தை தடுப்பு காவலில் சிறையில் இருந்துள்ளார்.
மேலும் தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டதால் இந்த ஆண்டு மட்டும் இவர்மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து தொடர் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டதால் ராமாபுரம் சதீஷை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் ஐபிஎஸ் உத்தரவிட்டதின் அடிப்படையில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
-கே.எம்.எஸ்