எம்ஜிஆர் நினைவு நாளில் கலைஞர் நூற்றாண்டு விழா ! அதிருப்தியில் திரையுலகம் ! முதல்வருக்கு கோரிக்கை !
தமிழ் திரையுலகம் சார்பில் வருகிற 24.12.2023 அன்று முத்தமிழ் அறிஞர் கலைஞருக்கு நூற்றாண்டு விழா கொண்டாட திட்டமிட்டு, அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக எண்ணிலடங்கா திட்டங்களை கொண்டுவந்தவர் கலைஞர். அவருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடுவதில் யாருக்கும் எந்தவித ஆட்சேபனையும் இல்லை. ஆனால் திரையுலகம் சார்பில் நூற்றாண்டு விழா கொண்டாட திட்டமிட்ட தேதி தமிழக மக்களால் புரட்சித்தலைவர் என்று அழைக்கப்படும் எம்ஜிஆர் நினைவு தினம். அன்றைய நாளில் பொதுமக்கள் மட்டுமின்றி அதிமுகவினரும் தமிழகம் முழுவதும் எம்ஜிஆர் நினைவை போற்றும் வகையில் அவரது புகைப்படங்களுக்கு மரியாதை செலுத்துவது வழக்கம். அன்றையதினம் முழுவதும் நடைபெறும் நிகழ்வுகளுக்கு தொலைக்காட்சிகளும், செய்தித்தாள் நிறுவனங்களும் முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிடுவார்கள்.
ஆளும் திமுக அரசுக்கு தமிழ் திரையுலக சங்கங்கங்களின் நிர்வாகிகள் விசுவாசமாக இருப்பதுபோல் காட்டிக் கொள்வதற்காக எம்ஜிஆரின் புகழக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், அவரது நினைவு நாளில் கலைஞருக்கு நூற்றாண்டு விழா கொண்டாட திட்டமிட்டுள்ளனர். ஏன் அந்த நாளில் தான் கொண்டாட வேண்டுமா ? வேறொரு நாளில் கொண்டாடினால் என்ன ? என்கிறார்கள்.
இது சம்பந்தமாக திரையுலக பிரபலங்கள் நம்மிடம் கூறுகையில்… தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், செய்தித்துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்து பேசி கலைஞர் நூற்றாண்டு விழா தேதியை வேறொரு தேதியில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அதேபோல் புரட்சித்தலைவர் எம்ஜிஆரை பெரியப்பா என்று அன்போடு அழைக்கும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின், எம்ஜிஆர் நினைவுதினத்தில் கலைஞருக்கு நூற்றாண்டு விழா நடைபெற உள்ள தேதியை மாற்ற வலியுறுத்த வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.