தமிழகம்

டெங்கு, பன்றி காய்ச்சல் தொடரும்… உயிரிழப்புகள்

தமிழகத்தில் டெங்கு, பன்றி காய்ச்சலுக்கு ஒரே நாளில் 8 பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்தில், கடந்த இரு மாதங்களில், டெங்கு காய்ச்சலுக்கு, 2,000க்கும் அதிகமானோரும், பன்றிக்காய்ச்சலுக்கு, 1,500க்கு அதிகமானோரும் பாதிக்கப்பட்டனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 50 ஐ நெருங்கிக் கொண்டு உள்ளது.
உயிரிழப்பு அதிகளவில் உள்ள நிலையில், அரசு அதை மறைப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சலுக்கு மேலும் இருவர் பலியாகினர்.
சிவகங்கை மாவட்டம் அரியக்குடியை சேர்ந்தவர் வெங்கடாச்சலம் மனைவி சித்ரா,54. விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் முத்துலட்சுமி,45. இவர்களுக்கு மர்ம காய்ச்சல் இருந்தது.
இருவரும் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ரத்தப் பரி சோதனையில் பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. சிறப்பு வார்டில் அனுமதிக்கப் பட்டனர். இருவரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
காரைக்குடி அருகே கோட்டையூர் அழகாபுரியை சேர்ந்த வாசு மகள் மதி, 14. தாய் இறந்து விட்டார். கோட்டையூரில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு காய்ச்சல் வந்துஉள்ளது. அப்பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுஉள்ளார். காய்ச்சல் அதிகரித்ததால் காரைக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சிவகங்கை செல்லும் வழியில் இறந்தார்.
திருப்பூரைச் சேர்ந்த, வசந்தா, 63. காய்ச்சல் பாதிப்புக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவருக்கு பரிசோதனையில், பன்றிக்காய்ச்சல் இருப்பது தெரிந்தது. இதையடுத்து கடந்த, 31 ம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட, திருப்பூர் மங்கலம் கணபதிபாளையத்தை சேர்ந்த கணேசன், 57, பன்றிக்காய்ச்சலுக்கும், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட, கோவையை சேர்ந்த ஆறுமுகம் மகன் அமுதன், 5, டெங்கு காய்ச்சலுக்கும், நீலகிரி மாவட்டம், குன்னூர் சுமித்ரா, 35 நிமோனியா காய்ச்சலுக்கும் உயிரிழந்தனர்.
தொடர்ந்து இரண்டாவது நாளாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூவர், தனியார் மருத்துவமனையில் ஒருவர் உயிரிழந்தது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம், அஸ்தம்பட்டயைச் சேர்ந்தவர் கண்ணன். இவரின் இரண்டாவது மகன் ஸ்ரீசாந்த், 4, நான்கு நாட்களாக, காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தான். இரவு, சேலம் அரசு மருத்துவமனைக்கு, பெற்றோர் தூக்கிச்சென்றனர். அங்கு சிகிச்சையளிக்கும் முன்பே, ஸ்ரீசாந்த் இறந்துவிட்டான்.
தமிழகம் முழுவதும் டெங்கு, பன்றி காய்ச்சலால் ஒரே நாளில் 8 பேர் பலி யாகியுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button