திருமணத்திற்குப் பெண் இருப்பதாகக் கூறி இளைஞர்களை வரவழைத்து பணம் பறிக்கும் கும்பல்
சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் காளிராஜன். இவர் ஹாத்வே நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். திருமணத்திற்கு நல்ல பெண் தேடி வந்தார். எதுவும் சரியாக அமையாததால் பிரபல தனியார் மேட்ரிமோனியல் இணையதளத்தில் தனது விவரங்களைப் பதிவு செய்து மணமகளைத் தேடி வந்தார்.
இந்நிலையில் கடந்த 20-ம் தேதி காளிராஜுக்கு ஒரு போன் கால் வந்தது. பெங்களூரிலிருந்து ஓர் இளம்பெண் பேசினார். அவர் காளிராஜன் குறித்த விவரங்களைப் பார்த்ததாகவும் அவரை தனக்குப் பிடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். உங்களைச் சந்திக்க வேண்டும் என்று அந்த இளம்பெண் கேட்க, சந்திக்கலாம் என்று காளிராஜன் கூறியுள்ளார்.
‘’சென்னையில் என் சித்தி வீடு உள்ளது. அங்கு வந்த பின் உங்களைச் சந்திக்கிறேன். என்னைப் பெண் பார்க்க வரலாம்‘’ என்று கூறியுள்ளார். இந்நிலையில் கடந்த 23-ம் தேதி மீண்டும் காளிராஜனுக்குப் போன் செய்த அப்பெண் தான் சென்னைக்கு சித்தி வீட்டுக்கு வந்துள்ளதாகக் கூறியுள்ளார். அவரைச் சந்திக்கும் ஆவலில் இருந்த காளிராஜன் உங்களைப் பார்க்க எங்கு வரவேண்டும் என்று கேட்டுள்ளார்.
சென்னை வடபழனி காவல் நிலையம் அருகில் உள்ள பொன்னம்மாள் தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டின் முகவரியைக் கூறி அங்கு வந்து என்னைப் பார்க்கலாம் என்று கூறியுள்ளார். இதையடுத்து காளிராஜன் நன்றாக தன்னை அலங்கரித்துக்கொண்டு, செயின், மோதிரம் போட்டுக்கொண்டு ஜம்மென்று போய் இறங்கியுள்ளார்.
‘’உள்ளே வாருங்கள்’’ என காளிராஜனை அழைத்து உட்காரச் சொல்லிவிட்டு திடீரென போனை எடுத்துப் பேசியுள்ளார். ‘’நான் சிபிஐ ஆஃபிஸர் பேசுகிறேன், ஆமாம் சார் அக்யூஸ்ட் இங்க தான் இருக்கிறார். பொறிவைத்து வரவழைத்து விட்டோம். எதிரில்தான் உட்கார்ந்து இருக்கிறார்’’ என்று பேச காளிராஜனுக்கு லேசாக பயம் தட்டியுள்ளது.
நம்மைப் பற்றித்தான் பேசுகிறார்களோ என்று யோசித்துள்ளார். அப்போது ஒருவர் திடீரென ‘’நான் சிபிஐ ஆஃபிஸர்’’ என்று காளிராஜனிடம் கூற, ‘’அப்படியா சார்’’ என்று காளிராஜன் வெள்ளந்தியாக கேட்டுள்ளார். ‘’என்ன அப்படியா? உன் மீது புகார் வந்துள்ளது. உன்னைக் கைது செய்ய உள்ளோம்‘’ என்று அவர் கூற, ‘’சார் நான் என்ன செய்தேன்’’ என்று காளிராஜன் பயந்தபடி கேட்டுள்ளார்.
‘’என்ன செய்தாயா? மேட்ரிமோனியல் மூலம் பெண் பார்ப்பதுபோல் பெண்களை வலைவீசி ஏமாற்றியுள்ளாய், இப்போதுகூட பெங்களூர் பெண்ணிடம் கண்டபடி பேசிய்யுள்ளாய்’’ என்று அந்த அதிகாரி எகிற, ‘’சார் இதெற்கெல்லாமா சிபிஐ’’ என்று காளிராஜன் பதற, கூட இருந்த இன்னொரு நபர், ‘’சார் நான் இவனைப் பார்த்துக் கொள்கிறேன்’’ என்று கூறி காளிராஜை தனியாக அழைத்துச் சென்றுள்ளார்.
தனியறையில் அமரவைத்த பிறகு, “அவர் சிபிஐ ஆஃபீஸர், முன்னாடி கோயம்பேட்டில் பெரிய போலீஸ் ஆஃபீஸர், நானும் கோயம்பேடு ஸ்டேஷன்தான். அந்தப்பெண்ணை நீ கண்டபடி பேசி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதாக புகார். அதனால் உன் மேல் நடவடிக்கை எடுக்க உத்தரவு’’ என்று அந்த நபர் சொல்ல காளிராஜ் மிரண்டு போயுள்ளார்.
‘’சார், என்னைப் பெண் பார்க்கத்தான் அந்தப் பெண் வரச்சொல்லுச்சு’’ என்று கூற, ‘’அது உன்னைப் பிடிக்க நாங்க விரித்த வலை’’ என்று அந்த நபர் கூறினார். மேலும், ‘உன் மீது உள்ள புகாரில் நீ பல வருஷம் கம்பி எண்ண வேண்டும் என்று அவர் மிரட்டியுள்ளார்.
பயந்துபோன காளிராஜ், ‘’சார் நான் இப்ப என்னதான் பண்ண வேண்டும்‘’ என்று கேட்க, ‘’அப்படி வா வழிக்கு எவ்வளவு பணம் வைத்திருக்கிறாய்?’’ என்று கேட்டுள்ளார் அந்த அதிகாரி.
‘’சார், 30 ஆயிரம் ரூபாய் வைத்திருக்கிறேன்’’ என்று காளிராஜ் சொல்ல, ‘’அய்யோ பத்தாதே’’ என்று கூறிய அவர் சரி கையிலுள்ள பிரேஸ்லெட், செயின், மோதிரம் அனைத்தையும் கழற்று என்று மிரட்டியுள்ளார். ‘’இதையெல்லாம் நான் ஏன் சார் தரணும்‘’ என்று காளிராஜ் கேட்க, ‘’அய்யா ரொம்ப கோபக்காரர் கேஸ் சிபிஐ லெவலுக்கு போயிடுச்சு ஸ்டேஷனில் பணம் கொடுத்து சரி பண்ணனும், சிபிஐ அதிகாரிக்கு கொடுக்கணும். அதற்குத்தான்’’ என்று அவர் கூறியுள்ளார்.
‘’என்ன யோசிக்கிற எல்லாவற்றையும் கழற்றி பணத்தைக் கொண்டுவந்து கொடுத்துட்டு நகைகளை ஸ்டேஷனில் வந்து வாங்கிக்கொள்’’ என்று நகை, பணம், கிரெடிட் கார்டுகளை பிடுங்கி அனுப்பி விட்டனர். இதையடுத்து காளிராஜ் வடபழனி காவல் நிலையத்தில் தான் ஏமாற்றப்பட்டது குறித்து புகார் அளித்தார்.
உடனடியாக சம்பவம் நடந்த வீட்டுக்குச் சென்றபோது அந்த வீடு பூட்டிக் கிடந்தது. உடனடியாக அங்கிருந்த செக்யூரிட்டியைப் பிடித்து விசாரித்தபோது, ‘’அவர் இந்த வீட்டில் ஒருநாள் மட்டும் தங்க ரூ.2000 கொடுத்தார்கள். காலியாக இருந்ததால் தங்க வைத்தேன்’’ என்று கூறியுள்ளார்.
இதையடுத்து போலீஸார் அங்குள்ள கண்காணிப்பு கேமரா மற்றும் அந்தப் பெண் பேசிய செல்போன் எண் ஆகியவற்றைச் சேகரித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கொச்சியைச் சேர்ந்த சாவித்திரி, கோடம்பாக்கத்தைச் சேர்ந்த சிவா, மாதவரத்தைச் சேர்ந்த கோகுலகிருஷ்ணன் ஆகிய 3 பேர் சிக்கினர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இதேபோல மேலும் பலரிடம் கொள்ளையடித்திருப்பது தெரியவந்தது. 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 2 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களையும் போலீஸார் தேடி வருகின்றனர்.
சிக்கிய 3 பேரிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் முதலில் வேறு தொழில் செய்து வந்ததாகவும் அதில் போலீஸ் பிரச்சினை ஏற்பட்டதால் பின்னர் இதுபோன்ற ஏமாற்றும் தொழிலில் இறங்கியுள்ளனர். இதுவரை 10-க்கும் மேற்பட்டவர்களிடம் அவர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
அதில் பலரிடம் போலீஸ் என மிரட்டியும், சிலரை அறையில் உள்ளே தள்ளி உருட்டுக்கட்டையால் அடித்தும் பணம், நகைகளை பறித்துச் சென்றுள்ளனர். பலரும் அவமானம் காரணமாக புகார் அளிக்கவில்லை. ஆனால் பல இடங்களில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் இதற்கு முன்னர் மூன்று முறை சிக்கியுள்ளனர். தற்போது 4-வது முறையாக சிக்கியுள்ளனர்.