கோவைக்கு வேலைக்குச் சென்ற வாலிபர்… : பரமக்குடியில் மர்ம சாவு!
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள தட்டாந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராஜின் மகன் வினோத் (30). இவர் பரமக்குடி அருகே உள்ள பொதுவாக்குடியில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் ஒப்பந்த ஊழியராகப் பணியாற்றி வந்துள்ளார். கடந்த சில மாதங்களாக அந்த நிறுவனத்தில் போதிய பணி இல்லாததால் வினோத் வேலைக்குச் செல்லவில்லை.
இந்நிலையில் வினோத்துடன் வேலைபார்த்த டேவிட் என்பவர், கடந்த டிசம்பர் 7-ம் தேதி வினோத்தின் தந்தைக்குப் போன் செய்து கோயம்புத்தூரில் வேலை உள்ளதாகவும் அதற்கு வினோத்தை அனுப்பி வைக்கும்படியும் கூறியுள்ளார். இதையடுத்து மறுநாள் வினோத் கோயம்புத்தூருக்குக் கிளம்பியுள்ளார்.
கோவைக்குக் கிளம்பிய வினோத்திடமிருந்து குடும்பத்தாருடன் எந்தத் தொடர்பும் இல்லை. வினோத்தின் போனுக்கு அவர் தந்தை ஜெயராஜ் அழைத்தபோது, போன் ஸ்விட்ச் ஆப் ஆகியிருந்துள்ளது. இதையடுத்து வேலைக்கு அழைத்த டேவிட்டை தொடர்பு கொண்டபோது, பயணக் களைப்பில் வினோத் தூங்குவதாகவும் காலையில் பேசச் சொல்வதாகவும் கூறியுள்ளார். அடுத்த நாள் டிசம்பர்10-ம் தேதி காலை வினோத்தின் தந்தை ஜெயராஜை தொடர்புகொண்ட டேவிட், பரமக்குடி பொதுவாக்குடியில் உள்ள தனியார் கம்பெனி ரூமில் வினோத் இறந்துகிடப்பதாகக் கூறவும், வினோத்தின் பெற்றோர் அலறித்துடித்து பரமக்குடி சென்றுள்ளனர். அங்கு சிறு காயங்களுடன் வினோத் இறந்து கிடந்துள்ளார்.
கோவைக்குச் செல்வதாக சொல்லிச் சென்றவர் பரமக்குடியில் எப்படி இறந்தார், எதற்காக அங்கு சென்றார், இதுகுறித்து முதல்நாள் போனில் பேசிய டேவிட் சொல்ல மறுத்தது ஏன் என வினோத்தின் பெற்றோரும் உறவினர்களும் சந்தேகம் எழுப்புகின்றனர். வினோத் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் வேலைக்கு அழைத்த டேவிட் மீது சந்தேகம் இருப்பதாகவும் எமனேஸ்வரம் போலீஸாரிடம் புகார் செய்துள்ளனர்.
வினோத்தின் மரணத்தை சந்தேக மரணமாகப் புகார் பதிவு செய்த போலீஸார் மேற்கொண்டு விசாரணை நடத்தவில்லை என்று கூறப்படுகிறது. வினோத்தின் மரணம் தட்டாந்தோப்பு கிராமத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதோடு பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.