தற்காப்பு கலை கராத்தே விளையாட்டு குறித்து சமீப காலங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் தற்போது கராத்தே விளையாட்டு தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க பட்டியலில் சேர்கப்படாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விளையாட்டுத்துறையை ஒருங்கிணைத்து மாணவர்களின் திறமையை வெளிப்படுத்தும் விதமாக தமிழக அரசு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு போட்டிகளை நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் அரசு வேலைவாய்ப்பில் வெற்றி பெற்றவர்களுக்கு இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு வகையில் விளையாட்டுத்துறையை தமிழக அரசு ஊக்குவித்து வருகிறது.
இந்நிலையில் மற்ற விளையாட்டை காட்டிலும் அதிக வீரர்களை கொண்ட விளையாட்டாக கராத்தே விளையாட்டு திகழ்ந்துவருகிறது. ஆரம்பத்தில் தற்காப்பு கலையாக மட்டுமே பயிற்றுவந்த கராத்தே கட்டுப்பாடுகளின்றி செயல்பட்டுவந்தது. உதாரணத்திற்கு கராத்தே போட்டிகளை தனியாக நடத்தும் கராத்தே பயிற்சியாளர்கள் லட்சக்கணக்கில் போட்டிக்கட்டணமாக வசூலித்துள்ளனர். இந்நிலையில் பணம்.கொழிக்கும் விளையாட்டாக மாறிய கராத்தே ஆடம்பர விளையாட்டாக கருதும் சூழலுக்கு தள்ளப்பட்டது. இந்நிலையில் தற்காப்பு கலையான கராத்தே சங்கங்களின் கட்டுப்பாட்டின் கீழ் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
இங்குதான் ஆரம்பித்தது சதுரங்க வேட்டை. கோட், சூட், டை, பேட்ஜ், சான்றிதழ் என ஆயிரக்கணக்கில் சங்கங்கள் வசூலித்துவருவதாக தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்திற்கு புகார் மனுக்கள் குவிந்தன. ஒரு கட்டத்தில் கராத்தே போட்டியில் வீரர்களின் எண்ணிக்கையை விட கோட் சூட் போட்ட நடுவர்கள் எண்ணிக்கை அதிக அளவில் காணப்பட்டது. இந்நிலையில் கராத்தே சங்கத்திற்கான தேர்தலை நடத்த இந்திய ஒலிம்பிக் சங்கம் உத்தரவுட்டிருந்த நிலையில் எந்த ஒரு முடிவும் எட்டப்படாத நிலையில் இந்திய ஒலிம்பிக் சங்கம் கராத்தே விளையாட்டிற்கான அங்கீகாரத்தை ரத்து செய்தது.
மேலும் இளைஞர் விளையாட்டு மேம்பாடு ஆணையமும் தனது அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் பட்டியலில் கராத்தே விளையாட்டை சேர்க்காதது கராத்தே விளையாட்டு வீரர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒலிம்பிக் சங்கமே கராத்தே விளையாட்டில் கோடிக்கணக்கில் மோசடி நடந்திருப்பதாகவும், சி.பி.ஐ விசாரணைக்கும் பரிந்துரை செய்திருக்கிறது. மேலும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கராத்தே விளையாட்டிற்கு அங்கீகாரம் இல்லை என தெரிவித்துள்ளது. எனவே தனியார் அமைப்புக்கள் லட்சக்கணக்கில் கட்டணத்தை வசூலித்து போட்டிகளை நடத்துவதை அரசு தடை செய்வதோடு தமிழகத்தை சேர்ந்த லட்சக்கணக்கான வீரர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு தவறு செய்த நிர்வாகிகளை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுத்து கராத்தே விளையாட்டை ஒழுங்கு முறைப்படுத்தி அரசின் கட்டுப்பாடின் கீழ் கொண்டுவர வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
- நமது நிருபர்