15 லட்சம் முதல் 30 லட்சம் வரை அதிமுக ஒன்றிய செயலாளர் பதவி

ஆளும் அஇஅதிமுக தமிழகம் முழுவதும் புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறது. ஏற்கனவே இருந்த மாவட்டங்களை இரண்டு சட்டமன்ற தொகுதி அல்லது மூன்று சட்டமன்ற தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளராகவும் ஏற்கனவே இருக்கும் ஒன்றிய, நகரங்களையும் இதேபோல் பிரித்து வருகிறார்கள். இதில் பெரும்பாலும் ஏற்கனவே பொறுப்பு வகிக்கும் நிர்வாகிகள் தங்கள் பகுதியை பிரிக்கும் போது தங்கள் சொல்படி நடக்கும் தனக்கு வேண்டியவர்களை டம்மியாக நியமித்துக் கொண்டு தாங்களே ஆதிக்கம் செலுத்தலாம் என்கிற எண்ணத்தில் இருக்கிறார்கள். தற்போது புதிய நிர்வாகிகள் நியமிப்பதில் பெரும்பாலான மாவட்டங்களில் பணம் பேசப்படுகிறது. இதில் சீனியர், ஜூனியர் என்கிற பஞ்சாயத்துக்களும் நடந்து வருகிறது.
இராமநாதபுர அதிமுகவில் ஒன்றிய செயலாளர் பதவிக்கு 15 லட்சம் முதல் 30 லட்சம் வரை கொடுத்து வாங்கியதாக கட்சி நிர்வாகிகள் பேசிக் கொள்ளும் ஆடியோ நமக்கு கிடைத்தது. அந்த ஆடியோவில் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கமுதி ஒன்றிய செயலாளராக காளிமுத்து என்பவர் 2016 ஆம் ஆண்டு முதல் இருந்து வருகிறார்.
எம்.ஏ முனியசாமி
மாவட்டச் செயலாளர்மணிகண்டன் சதன்பிரபாகர் அன்வர் ராஜா
இந்த ஒன்றியத்தை கிழக்கு, வடக்கு, தெற்கு என மூன்றாக பிரித்து இருப்பதாகவும், வடக்கு ஒன்றியத்திற்கு திருமூர்த்தி என்பவருக்கு பதினைந்து லட்ச ரூபாய் கொடுத்து வாங்கியதாக பேசுகிறார்கள். அதேபோல் கிழக்கு ஒன்றியத்திற்கு ரவிச்சந்திரன் என்பவரிடமும் இதேபோல் பணம் வசூல் செய்து ஒன்றியச் செயலாளர் பதவி வழங்க இருப்பதாகவும், ஏற்கனவே ஒன்றிய செயலாளராக இருக்கும் காளிமுத்துவிற்கு தெற்கு ஒன்றியம் ஒதுக்கப்பட்டதாம். இதனை அறிந்த காளிமுத்து ஒன்றியத்தை இரண்டாக பிரிப்பதற்குத் தான் நான் சம்மதித்தேன். மூன்றாக பிரிப்பதால் நான் சம்பாதிக்க முடியாது என பிரச்சனை செய்வதாகவும் அந்த ஆடியோவில் பேசிக் கொள்கிறார்கள்.
மேலும் இராமநாதபுரம் மாவட்டத்தில் நான்கு சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. அதில் இரண்டு சட்டமன்ற தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர் எனவும் பிரிக்க இருக்கிறார்கள். இராமநாதபுரம், திருவாடனை ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகள் இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் எனவும், பரமக்குடி, முதுகுளத்தூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் எனவும் பிரிக்கிறார்கள். இதில் ஏற்கனவே மாவட்டச் செயலாளராக இருக்கும் எம்.ஏ.முனியசாமி தனக்கு கிழக்கு, மேற்கு என எதை ஒதுக்கினாலும் நான் கட்சிப் பணியாற்ற தயார் என்று கூறிவிட்டாராம்.

இராமநாதபுரம் கிழக்கு மாவட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான மணிகண்டனும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜாவும், மாவட்டச் செயலாளர் பதவி கேட்டு தலைமையிடம் வலியுறுத்துகிறார்களாம். அதேபோல் இராமநாதபுரம் மேற்கு மாவட்டத்திற்கு முனனாள் மாவட்டச் செயலாளர் தர்மர், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன்பிரபாகர் இருவரும் தங்களுக்குத்தான் வேண்டும் என தலையடம் தனித்தனியாக லாபி செய்கிறார்களாம்.
முத்தையா
ஒன்றிய செயலாளர்காளிமுத்து
ஒன்றிய செயலாளர்
பரமக்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரமக்குடி ஒன்றியத்தை மூன்றாக பிரிக்க திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. இந்த ஒன்றியத்தின் செயலாளராக முத்தையா என்பவர் நீண்டகாலமாக இருந்து வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இவரது மனைவி ஒன்றிய குழு உறுப்பினராக வெற்றி பெற்றதால் அவரை பரமக்குடி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவராக ஆக்கியிருக்கிறார்கள் அதிமுகவினர். ஒன்றிய துணைத் தலைவர் பதவிக்கு இரண்டு பேர் போட்டியிட்டு இருக்கிறார்கள். இருவருமே அதிமுகவினர் என்பதால் இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு முத்தையா சமுதாயத்தைச் சேர்ந்தவரையே துணைத்தலைவராக தேர்வு செய்து இருக்கிறார்கள். அப்போது போட்டியிட்ட மற்றொரு கவுன்சிலருக்கு ஒன்றிய செயலாளர் பதவி தருவதாக மாவட்டச் செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில் பேசி முடிவாகி இருந்ததாம்.
இப்போது பரமக்குடி ஒன்றிய அதிமுகவில் ஒன்றிய செயலாளர் பதவி சாதிரீதியாக அவரவர் எங்கள் சாதிக்குத்தான் ஒதுக்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி போஸ்டர் அடித்து ஒட்ட ஆரம்பித்து விட்டார்கள். தங்கள் சமுதாயத்திற்கு ஒன்றியச் செயலாளர் பதவி வழங்க மறுத்தால் அதிமுகவை விட்டு வெளியேறுவோம் என்று மாவட்டச் செயலாளர் முனியசாமிக்கு கோரிக்கை வைத்து சமூக வலைதளத்திலும் பதிவிட்டு இருக்கிறார் அதிமுக அண்ணா தொழிற்சங்க பேரவை நிர்வாகி.
பரமக்குடி சட்டமன்றத்திற்கு உட்பட்ட பகுதிகளில் புதிய நிர்வாகிகள் பட்டியலை பரமக்கடி சட்டமன்ற உறுப்பினர் சதன்பிரபாகரும், இராமநாதபுரம் சட்டமன்றத்திற்கு உட்பட்ட நிர்வாகிகள் பட்டியலை இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் மணிகண்டனும் மாவட்டச் செயலாளர் முனியசாமியிடம் கொடுத்திருக்கிறார்களாம். எஞ்சிய சட்டமன்ற தொகுதிகளான முதுகுளத்தூர், திருவாடனை ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளில் மட்டுமே புதிய நிர்வாகிகளை மாவட்டச் செயலாளர் முனியசாமி தேர்வு செய்வதாக தகவல்.
அதிமுகவில் எளிய தொண்டனும் முதல்வராகலாம். அதற்கு நானே சாட்சி என்று அடிக்கடி மார்தட்டி பேசிக்கொள்ளும் எடப்பாடி பழனிச்சாமி இராமநாதபுரம் மாவட்டத்தில் நடக்கும் இந்த கூத்துக்களை பார்த்துக்கொண்டு இருக்கப் போகிறாரா? அல்லது நடவடிக்கை எடுக்கப் போகிறாரா?
இதேநேரத்தில் புரட்சித்தலைவி அம்மா இருந்திருந்தால் சாதி அரசியல் செய்வோரையும், பதவிக்கு பணம் வசூல் செய்வோரையும் இதே சமயம் களை எடுத்திருக்க மாட்டாரா? என்றும் அந்த அதிமுக நிர்வாகிகள் ஆடியோவில் பேசிக்கொள்கிறார்கள்.
எது எப்படியோ இன்றைய சூழ்நிலையில் ஏற்கனவே அதிமுகவில் இருந்தவர்கள் பிரிந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருக்கிறார்கள். தற்போது தஙகளுக்கு ஒன்றிய செயலாளர் பதவி கிடைக்காவிட்டால் கட்சியில் இருந்து வெளியேறுவோம் என்று சாதிரீதியாக போஸ்டர் போராட்டம் வேறு. இதே நிலை தொடர்ந்தால் இராமநாதபுரம் மாவட்டத்தில் 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் வெற்றி கேள்விக்குறிதான். இன்றைய பிரச்சனைகளை சாமர்த்தியமாக சமாளிப்பாரா? மாவட்டச் செயலாளர் முனியசாமி என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் அதிமுக தொண்டர்கள்.
- நமது நிருபர்