சேலம் சிறுமியை கொடூரமாக கழுத்தறுத்து கொன்ற இளைஞரை குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்காமல் காப்பாற்றும் முயற்சிதான் கொடூர குற்றத்திற்கு இந்த அரசு அளிக்கும் தண்டனையா? என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தளவாய்பட்டியைச் சேர்ந்தவர் சிறுமி ராஜலட்சுமி (13) கடந்த மாதம் 22-ம் தேதி பக்கத்து வீட்டில் வசிக்கும் தினேஷ்குமார் என்பவரால் தொடர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு, அவரது ஆசைக்கு இணங்க மறுத்ததால் தாய் எதிரிலேயே தினேஷ்குமாரால் கொடூரமான முறையில் தலையை வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இந்தப் படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட தினேஷ்குமார் தான் கொல்லவில்லை முனி என் உடம்பில் வந்து கொன்றது என கதையளக்க போலீஸார் அதை வைத்து அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்காமல் பாதுகாப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், கொலை செய்யப்பட்ட ராஜலட்சுமியின் குடும்பத்தினரை சமூக ஆர்வலர்கள் பலரும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். அந்தக் குடும்பத்தினரை சந்தித்தது தொடர்பாக பேசிய சமூக செயற்பாட்டாளர் எவிடன்ஸ் கதிர், “தன் மீதான பாலியல் சீண்டல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தினால் ராஜலட்சுமி கொல்லப்பட்டிருக்கிறார். ஏனெனில் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமையை வெளிப்படுத்தியிருக்கிறார். உண்மையில், இது பாலியல் மற்றும் சாதிய கொடுமை. இரண்டு வகையில் இது வெளிப்படுத்தப்பட வேண்டும்.
தினேஷ் குமார் அரிவாளுடன் வீட்டிற்குள் வந்த போது, ராஜலட்சுமியும் அவரது தாய் சின்னபொண்ணுவும் பூ கட்டிக் கொண்டிருந்தனர். சாதிய பெயர் சொல்லி தினேஷ் அவர்களை இழிவுபடுத்தியுள்ளார். தாய் சின்னபொண்ணு எதிர்ப்பையும் மீறி ராஜலட்சுமியின் கழுத்தை துண்டித்து தனது வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளார் தினேஷ். தலையை எங்கேயாவது கொண்டு சென்று போடுங்கள் என தினேஷ் மனைவி சாரதா கூறியுள்ளார். பின்னர், தினேஷ், அவரது மனைவி ஒன்றாக காவல்நிலையம் சென்றுள்ளனர். அங்கு தன்னுடைய கணவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று சாரதா கூறியுள்ளார். ஆனால், போலீசார் விசாரணையில் தினேஷ் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் நலமுடன் இருப்பதாக தெரியவந்துள்ளது.
ராஜலட்சுமியின் தந்தை சுடுகாட்டில் வேலை பார்க்கிறார். அதனால், இரவு நேரங்களில் அடிக்கடி வீட்டில் இருக்கமாட்டார். கொலை நடந்து மூன்று நாட்களுக்கு பிறகுதான் நாங்கள் அவர்களை சென்று பார்த்தோம். தினேஷ் அத்துமீறுவது குறித்து ராஜலட்சுமி தன்னுடைய பெற்றோர்களிடம் கூறியிருக்கிறார். ஆனால், அவரது குடும்பத்தினர் தொடர்ந்து மவுனம் காத்து வந்துள்ளனர்.
ஏனெனில், தினேஷ் குடும்பத்தினரை எதுவும் கேட்க முடியாது என்பதால். போலீசும், சமூகவும் இதனை வெறும் பாலியல் ரீதியாக கொலை என்றே பார்க்கிறது” என்று கூறினார்.
தினேஷை ஜாமீனில் வெளியே விடக் கூடாது என்றும் போஸ்கோ சட்டத்தின் கீழ் இந்த வழக்கை பதிவு செய்ய வேண்டும் என்றும் தங்களது புகாரில் தெரிவித்துள்ளதாக ராஜலட்சுமி மாமா ஜெகதீஷ் கூறியுள்ளார்.
மேலும், “என்ன நடந்தது என்பதை ராஜலட்சுமியின் தாயார் சொல்வது மிகவும் கடினம். சமூக செயற்பாட்டாளர் வளர்மதி உடன் நான் ராஜலட்சுமி குடும்பத்தினரை சென்று பார்த்த போது, ஊடகங்களைச் சேர்ந்தவர்கள் அவர்களிடம் அர்த்தமற்ற கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தார்கள். குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பில் இதுபோன்ற கேள்விகள் ஏன் கேட்கப்படவில்லை என்பது எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது” என்கிறார் சமூக செயல்பாட்டாளர் கவுசல்யா சங்கர்.
செம்மலர் ஜெபராஜ் கூறுகையில், “பட்டியலின பெண்கள் மற்ற பிரிவினரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதை #WhyOnlyMe என்ற ஹேஷ்டேக்கில் நாம் வெளிப்படுத்த வேண்டும். வெறும் #MeToo என்பதில், வன்கொடுமையில் இருந்து தலித் பெண்கள் தனித்துவிடப்படுகிறார்கள். பொதுச் சமூகமானது செவிடன் காதில் ஊதிய சங்கைப் போல் அமைதியாக இருக்கிறது. முற்போக்கு பேசும் தலைவர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகள் அமைதியாக இருக்கிறார்கள். ஊடகங்களும் அமைதியாக இருக்கிறது. நாங்கள் இந்த மவுனத்தை கலைக்க விரும்புகிறோம்.
பட்டியலினப் பெண் தனது சொந்த வீட்டில் கூட பாதுகாப்பாக இருக்க முடியவில்லை. இது ஒரு ஆணவக் கொலைதான். தினேஷ் கொலை மட்டும் செய்யவில்லை. தலையை துண்டித்து எடுத்துச் சென்றுள்ளார். இதுதான் சாதியத்தின் கொடூரம் எப்படி இருக்கிறது என்பதை காட்டுகிறது. இதில், பட்டியலின செயற்பாட்டாளர்கள் மட்டுமல்லாது, எல்லோரது குரல்களும் வேண்டும். இதுபோன்ற குற்றங்களை தடுத்து நிறுத்துவதோடு, சாதியையும் அறவே ஒழிக்க வேண்டும்” என்கிறார்.
இந்தக் கொடுமைக்கு எதிராக சமூக ஆர்வலர் அல்போன்ஸ் ரத்னா என்பவர் ஒரு விழிப்புணர்வு பாடலை பாடியுள்ளார். இதுகுறித்து ரத்னா கூறுகையில், “ஐஏஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என கனவோடு இருந்த 13 வயது பட்டியலினச் சிறுமிக்கு இப்படி அவலமான நிலை ஏற்பட்டுள்ளது. இந்தச் சமூகத்தில் நாம் வாழ்வதற்கு வெட்கப்பட வேண்டும். அதனை இது நடந்த பிறகும் எல்லோரும் மவுனமாக இருப்பது அதனைவிட வெட்கக் கேடானது” என்றார்.
கொலை சம்பவத்தை அனைத்து அரசியல் கட்சித்தலைவர்கள், சமூக இயக்கங்கள் கடுமையாக கண்டித்துவரும் நிலையில் சேலம் மாவட்ட ஆட்சியரோ, காவல்துறை எஸ்.பி.,யோ சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு பெற்றோரால் வைக்கப்பட்டது. இதையடுத்து 9 நாட்கள் கழித்து மாவட்ட ஆட்சியர் ரோகினி நேரில் சென்று பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
இந்தப் படுகொலை குற்றவாளியான தினேஷ் குமாருக்கு வழக்கு முடியும் வரை பிணை கொடுக்கக் கூடாது. அவரால் படுகொலை செய்யப்பட்ட ராஜலட்சுமி குடும்பத்தினருக்கு ஆபத்து உள்ளது. மீண்டும் 3 நபர்களை வெட்டுவேன் என்று தெரிவித்துள்ளார். எனவே, குற்றவாளியைக் கடுமையாக தண்டிக்கவேண்டும். ராஜலட்சுமி குடும்பத்தினருக்கு இழப்பீடும் ஒருவருக்கு அரசு பணியும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் படுகொலைக்கு காரணமான கொலைக்குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்காமல் பாதுகாக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது ட்விட்டர் பதிவு:
“சேலத்தில் 13வயது ராஜலட்சுமியை பாலியல் வன்கொடுமைசெய்து,தலையை துண்டித்த அரக்கனை குண்டர் சட்டத்தில் சிறைக்குள் தள்ளாமல், மனநிலை சரியில்லாதவர் என்று சித்தரிப்பதாக தெரிகிறது. முதலமைச்சர் மாவட்டத்தில் கொடுங்குற்றத்திற்கு நீதி வழங்கும் லட்சணம் இதுதானா? இரும்புக்கரத்தால் அடக்க வேண்டும்.” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.