உறுதியான வெற்றி..! : மகிழ்ச்சியில் உடுமலை ராதாகிருஷ்ணன்
உடுமலைப் பேட்டை சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் உடுமலை ராதாகிருஷ்ணன் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் தென்னரசு என்பவர் போட்டியிடுகிறார். மேலும் அமமுக, மக்கள் நீதி மையம், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சியினரும் போட்டியிடுகின்றனர். உடுமலைப்பேட்டை சட்டமன்ற தொகுதி நகர்புறங்களில் தொழிற்சாலைகள் அதிகமாக உள்ளது. இதனைச் சுற்றி விவசாயத் தொழில் பிரதானமாக காணப்படுகிறது. இந்தத் தொகுதியில் வெற்றி தோல்வி குறித்து நமது குழுவினர் அந்தப் பகுதியின் வாக்காளர்களிடம் கேட்டபோது, பெரும்பாலான மக்கள் உடுமலை இராதாகிருஷ்ணனுக்கே தங்களது ஆதரவு என்று தெரிவிக்கிறார்கள்.
தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி கட்சிகளுக்கே வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்துக் கணிப்புகள் வெளிவரும் நிலையில் அதிமுக வேட்பாளர் இராதாகிருஷ்ணன்தான் எங்கள் சட்டமன்ற உறுப்பினர் என்கிறீர்களே என்று கேட்டபோது, கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் உடுமலைப் பேட்டை சட்டமன்ற வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு அமைச்சராகவும் பதவி ஏற்றார். அன்றிலிருந்து இன்று வரை கட்சி வேறுபாடுகளோ, சமுதாய வேறுபாடுகளோ பார்க்காமல் அனைவருக்குமான சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி வருகிறார். தமிழக அமைச்சர்கள் பெரும்பாலானோர் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கி தங்களின் பெயரை கெடுத்துக் கொண்டார்கள். ஆனால் எங்கள் அமைச்சர் ஆடம்பரம் இல்லாமல் மிகவும் எளிமையாக அவரது துறை சார்ந்த பணிகளை துரிதமாக செய்து வந்தார். உடுமலை தொகுதி மக்களுக்கு இதுவரை யாரும் செய்யாத பல நன்மைகளை செய்திருக்கிறார்.
முதல் முறையாக கால்நடை மருத்துவக் கல்லூரியை உடுமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பண்ணைக் கிணற்றில் ரூபாய் 254 கோடி மதிப்பீட்டில் கொண்டு வந்து சரித்திர சாதனை படைத்திருக்கிறார். இந்தப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான அரசு கலைக்கல்லூரி வேண்டும் என்ற கோரிக்கையையும் நிறைவேற்றியுள்ளார். இவர் சாதாரண கேபிள் ஆபரேட்டராக இருந்து படிப்படியாக தனது உழைப்பால் உயர்ந்தவர். இதனால் ஜெயலலிதா இவருக்கு அரசு கேபிள் டிவி நிறுவனத்தை நிர்வகிக்கும் பொறுப்பை வழங்கினார். அந்தத் துறையிலும் சிறப்பாக பணியாற்றினார். இதுவரை 40 லட்சத்திற்கும் மேற்பட்ட செட்டாப் பாக்ஸ்களை கொடுத்து நவீனப்படுத்தியுள்ளார். இரண்டு கால்நடை மருத்துவமனைகள், ஏழு கால்நடை மருந்தகங்கள் 12 கால்நடைகள் நிலையங்கள், இரண்டு அம்மா ஆம்புலன்ஸ் வாகனங்கள் போன்ற பணிகளை 2.66 கோடி மதிப்பீட்டில் தொகுதியில் நிறைவேற்றியுள்ளார்.
கோவை மாவட்டத்தில் திருப்பூர் மாவட்டம் பிரிக்கப்பட்ட போது உடுமலை நகராட்சி திருப்பூர் மாவட்டத்தோடு சேர்க்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தின் முதல் நகராட்சி உடுமலை நகராட்சிதான். உடுமலைப் பேட்டை நகராட்சி மிகவும் பழமையான நூற்றாண்டு கண்ட நகராட்சியாக திகழ்கிறது. இந்த நகராட்சியின் நூற்றாண்டு கொண்டாட்டத்திற்கான மானியமாக 48.87 கோடி இந்த நகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.
பாதாள சாக்கடைத் திட்டம், நகராட்சி அலுவலக புதிய கட்டிடம், குடிநீர் அபிவிருத்தி மற்றும் சாலைகள் அபிவிருத்தி பணிகள் ரூபாய் 14.01.79 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 57 கிராம ஊராட்சிகளில் அனைத்துத் திட்டப்பணிகளும் 219.05 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுபோன்ற எண்ணற்ற பணிகள் கடந்த ஐந்தாண்டுகளில் உடுமலை ராதாகிருஷ்ணன் சட்டமன்ற உறுப்பினராக இருந்ததால் இந்த தொகுதிக்கு கிடைத்திருக்கிறது. உடுமலை ராதாகிருஷ்ணனைப் பொறுத்தவரை இந்தப் பகுதி மக்கள் கட்சி சார்பற்ற அனைத்து சமுதாயத்திற்குமான சட்டமன்ற உறுப்பினராகவே பார்க்கிறார்கள்.
உடுமலை சட்டமன்றத் தொகுதியில் திமுக வலுவான வாக்கு வங்கி இருந்தாலும் உடுமலை ராதாகிருஷ்ணனை எதிர்த்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தென்னரசு போட்டியிடுகிறார். இந்தப் பகுதியில் காங்கிரசுக்கு செல்வாக்கு மிகவும் குறைவாகவே உள்ளது. இதனால் திமுகவினர் தென்னரசுக்கு பெரிதாக ஒத்துழைப்பு வழங்கவில்லை. அதிமுக வேட்பாளர் உடுமலை ராதாகிருஷ்ணன் அளவுக்கு காங்கிரஸ் வேட்பாளர் தென்னரசுக்கு மக்கள் செல்வாக்கு இருப்பதாகவும் தெரியவில்லை. ஆகவே உடுமலை சட்டமன்ற தொகுதியில் மீண்டும் வெற்றி வாய்ப்பு உடுமலை ராதாகிருஷ்ணனுக்கே பிரகாசமாக உள்ளது.
– ஆனந்தகுமார்.