கோவையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.
கோவை துடியலூர் அருகே ஏழு வயது சிறுமி கடந்த வாரம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். பொள்ளாச்சி பாலியல் வழக்கின் பாதிப்பு அடங்குவதற்குள் நடந்த இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. கிட்டத்தட்ட 10 தனிப்படைகள் அமைத்தும், ஆறு நாள்களுக்கு ஒருவர்கூட கைது செய்யப்படாமல் இருந்தனர். இதற்கு காரணமானவர்களை கடுமையாகத் தண்டிக்க வேண்டும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. கடந்த வாரம் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் சிறுமியின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருந்தார்.
இதனிடையே, இந்த வழக்கில் சந்தோஷ்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், தேர்தல் பிரசாரத்துக்காக மு.க.ஸ்டாலின் கோவை வந்தார். கோவை விமான நிலையத்திலிருந்து, அவர் நேரடியாகச் சிறுமியின் வீட்டுக்குச் சென்று, அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். மேலும், சிறுமியின் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். மு.க.ஸ்டாலினும், முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி தொகுதி தி.மு.க வேட்பாளருமான ஆ.ராசா உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.