கொடைக்கானலுக்கு மாற்றுப்பாதை அமைக்கப்படுமா..? : பொதுமக்கள் கோரிக்கை
தொடர் விடுமுறை காலங்களில், கொடைக்கானல் நகருக்குள் நுழைய பயன்பாட்டில் உள்ள பெருமாள்மலை புலிச்சோலை சாலையில் ஏற்படும் போக்குவரத்தை குறைக்க மாற்று சாலை வேண்டி பொதுமக்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில், தொடர் விடுமுறை மற்றும் கோடை பருவ காலங்களில் மலையேறி வரும் வாகனங்கள் பெருமாள்மலை வரை நெரிசல் இல்லாமல் வரும் சூழல் உள்ளது. மேற்கு மாவட்டங்கள் வழியாக பழனி சாலையில் வரும் பயணிகள் சந்திக்கும் இடமாகவும், தென் மாவட்டங்கள் வழியாக அடுக்கம் சாலையில் வரும் பயணிகள் சந்திக்கும் இடமாகவும், மத்திய மாவட்டங்கள் வழியாக வத்தலக்குண்டு சாலையில் வரும் பயணிகள் சந்திக்கும் இடமாக, மூன்று நெடுஞ்சாலைகள் சந்திக்கும் இடமாக பெருமாள் மலை உள்ளது.
பெருமாள் மலையில் இருந்து புலிச்சோலை சாலை வழியாக, மூன்று சாலைகளில் வரும் வாகனங்கள் ஒன்று சேர்ந்து, கொடைக்கானல் வெள்ளி நீர் வீழ்ச்சி வரை அரசு அதிகாரிகள், பொதுமக்கள், விவசாயிகள், சுற்றுலா பயணிகள் என அனைத்து தரப்பினரும், கடும் வாகன நெரிசலுக்கு இடையே, அடி அடியாக நகரும் அவதியான நிலை உள்ளது.
இதற்கு மாற்றாக கொடைக்கானல் வில்பட்டி, கோவில்பட்டி, வழியாக பாரதி அண்ணாநகர் வரை உள்ள மண் சாலையை தார் சாலையாக மேம்படுத்தி, பேத்துபாறை சாலையோடு இணைத்து, பெருமாள் மலையை அடைய திட்டமிட்டால், பாதியளவிற்கு வாகனங்களை அந்த வழியே செல்ல திட்டமிட முடியும் என்றும், இதனால் வில்பட்டி, பள்ளங்கி, அட்டுவம்பட்டி, கோம்பை உள்ளிட்ட கிராம மக்கள் பயன்படுத்தும் வாகனங்களும் நகருக்குள் வராமல், சந்தைப்படுத்தும் விவசாய பொருட்களை பழனிக்கோ, மதுரைக்கோ எடுத்து செல்ல முடியும் என்று கூறுகின்றனர்.
கடும் நெரிசல் காலங்களில் இந்த மாற்று சாலையை ஒருவழிப்பாதையாகவும் அனுமதிக்கும் பட்சத்தில் வாகனங்கள் நிற்காமல் செல்லமுடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது குறித்து நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை, வட்டார வளார்ச்சித்துறை அதிகாரிகள் உரிய ஆய்வு மேற்கொண்டு மாற்று சாலையை அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.
– A.முகமது ஆரிப்