மோடிக்கு சவால் விட்ட உதயநிதி
தமிழக தேர்தல் களத்தில் பிரசாரம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. இதையொட்டி, தமிழகம் வந்து தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தாராபுரத்தில் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, திமுக பட்டத்து இளவரசருக்காக அக்கட்சியில் முக்கிய தலைவர்கள் ஓரம் கட்டப்பட்டுள்ளனர். உதயநிதிக்காக கட்சியில் இருக்கும் மூத்த தலைவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு அவர்களது குடும்பம்தான் முக்கியம். அவர்களுக்கு வாரிசு அரசியல்தான் முக்கியம் என்று உதயநிதி ஸ்டாலினை கடுமையான விமர்சித்தார்.
இந்த நிலையில் அவிநாசி தொகுதியில் பிரசாரம் செய்த உதயநிதி ஸ்டாலின், மோடி என் மீது செம கோபத்தில் இருக்கிறார். நான் குறுக்கு வழியில் வந்தவன் என்று கூறுகிறார். நானா குறுக்கு வழியில் வந்தவன். மோடியை பார்த்து நான் பயப்பட மாட்டேன். உங்களை பார்த்து பயந்து கும்பிடு போட நான் ஒன்னும் எடப்பாடி பழனிசாமி இல்லை. நான் கலைஞரின் பேரன் என்றார்.
என்னை பார்த்து குறுக்கு வழியில் வந்தவன் என்று மோடி சொல்கிறார். குஜராத் முதல்வராக இருந்து குறுக்கு வழியில் பிரதமர் ஆனது யார் என கேள்வி எழுப்பிய உதயநிதி ஸ்டாலின், பாஜகவில் அத்வானி என்று ஒருத்தர் இருந்தார். ரதயாத்திரை எல்லாம் சென்றார். அத்வானி இப்போது எங்கே போனார். யஷ்வந்த் சின்காவை டார்ச்சர் செய்து அனுப்பிவிட்டார். வெங்கையா நாயுடு எங்கே போனார். இவர்களை எல்லாம் நீங்கள்தான் ஓரம் கட்டியது என்று சுட்டிக் காட்டினார்.
மேலும், பிரதமர் மோடிக்கு தைரியம் இருந்தால் தமிழ்நாட்டு மக்களை எதிர்கொள்ளாட்டும் பார்க்கலாம் என்றும் உதயநிதி ஸ்டாலின் மோடிக்கு சவால் விடுத்துள்ளார்.