ஏரி குளங்களுக்கு பதிலாக கஜானாவை தூர்வாரி விட்டார்கள் – : டிடிவி தினகரன்
ஆளுங்கட்சியினர் ஆறு, ஏரி மற்றும் குளங்களைத் தூர்வாருவதற்குப் பதிலாக கஜானாவை தூர்வாரி விட்டார்கள் என்றும், உங்களை எல்லாம் விலைக்கு வாங்க ஆளும் கட்சியினரும் எதிர்க் கட்சியினரும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர் எனவும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறினார்.
இது தொடர்பாக திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் அமமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தினகரன் பேசுகையில், “அதிமுகவினர் தொண்டர்களையோ, கூட்டணியையோ அல்லது மக்களையோ நம்பாமல் காந்தித் தாத்தாவை மட்டுமே நம்பியுள்ளனர். பணத்தை கொடுத்து உங்களையெல்லாம் சந்தையில் வாங்குவது போல, ஆடு மாடுகளைப்போல விலைக்கு வாங்கி விடலாம் என்று நினைக்கின்றனர். அவர்களுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்.
அமமுக கூட்டணி ஆட்சிக்கு வந்தால்தான் தமிழ்நாட்டிலுள்ள ஊழல் ஆட்சியை ஒழிக்க முடியும். மக்கள் விரோத ஆட்சியை ஒழிக்க முடியும். இவர்களால் முதியோர் உதவித்தொகையை முறையாகக் கொடுக்க முடியவில்லை.
அதிமுகவினர் அறிவித்துள்ள இலவசங்களை கொடுக்க வேண்டும் என்றால் மாதத்திற்கு 4 ஆயிரம் கோடி ரூபாயும், வருடத்திற்கு 50 ஆயிரம் கோடி ரூபாயும் தேவைப்படும். ஏற்கனவே ஆறு, ஏரி குளங்களைத் தூர் வாருவதற்குப் பதிலாக கஜானாவை தூர் வாரி விட்டார்.” என்றார்.
இதேபோல திண்டுக்கல்லில் தினகரன் பேசுகையில், “அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மாற்றி மாற்றி பேசுகிறார். காமெடி பீஸாகிவிட்டார். என்ன பேசுகிறார் என அவருக்கும் தெரியவில்லை. அவர் பேசுவது யாருக்கும் புரியவில்லை. பேரன் பேத்திகளுடன் விளையாட அவருக்கு ஓய்வு கொடுப்பது தான் நல்லது.” என்று கூறி குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரும், செய்தி தொடர்பாளருமான சி.ஆர்.சரஸ்வதி கோவில்பட்டி நகரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில் ஆங்கிலேயர்களை வெளியேற்ற நமது முன்னோர்கள் போராடினர். தற்போது மக்கள் பணத்தினை கொள்ளை அடிப்பவர்களை வெளியேற்ற போராடிக் கொண்டிருக்கிறோம்.
சுதந்திரப் போராட்டத்தில் எப்படி வெற்றி கிடைத்ததோ அதை போன்று கடந்த நான்கு ஆண்டுகளாக மக்களின் வரிபணத்தினை கொள்ளையடித்து கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து வைத்திருக்கும் இபிஎஸ், ஓபிஎஸ்&ஐ வெளியேற்ற மக்கள் பலமாக இருப்பார்கள் என்ற நம்பிக்கை உண்டு. ஆர்.கே நகரில் கேட்ட குக்கர் விசில் சத்தம் அதை விட கோவில்பட்டியில் சத்தமாக கேட்கும் என்ற நம்பிக்கை உண்டு. துரோகிகளிடம் அதிமுக மற்றும் இரட்டை இலையும் கொடுத்து விட்டோம். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் கஷ்டப்பட்டு அதிமுக ஆட்சியை நிலை நிறுத்தியவர் சசிகலா. அதனால் தான் இபிஎஸ் முதல்வர், ஓபிஎஸ் துணை முதல்வர், எல்லோருக்கும் மாண்புமிகு அமைச்சர் என்று கிடைத்தது.
ஆனால் அவர்கள் நன்றி மறந்து விட்டனர். ஜெயலலிதா கை காட்டினார். இவர்கள் வெற்றி பெற்றனர். அதன் பின்னர் சசிகலா, டிடிவிதினகரன் கை காட்டியதால் இந்த ஆட்சி இருக்கிறது.ஜெயிக்கிற வரைக்கும் கூட இருந்து விட்டு, பாஜகவுடன் கை கோர்த்து அவர்கள் தயவில் ஆட்சி நடத்தி வருகின்றனர். வெற்றி நடைபோடும் தமிழகமே என்று மனசு கூசாமல் பேசுகின்றனர்.
தமிழகம் வெற்றி நடை போட வில்லை வேதனையில் தான் நடை போட்டுக் கொண்டிருக்கிறது. மக்கள் வரிப்பணத்தில் ரூ2500 கொடுத்து விட்டு, உங்ககிட்ட ஓட்டு வாங்கி மறுபடியும் பல லட்சம் கோடி சம்பாதிக்கலாம் என்று நினைக்கின்றனர். அது இனிமேல் நடக்கக்கூடாது என்றும், ஜெயலலிதா இருக்கும்போது அமைச்சர்கள் இதுபோன்று பேச முடியுமா?
ஸ்டெர்லைட் வேண்டாம் என்று போராடியவர்களை தீவிரவாதிகள் போன்று இந்த அரசு சுட்டுக் கொலை செய்தது. இதுபற்றி முதல்வரிடம் கேட்டால் தொலைக்காட்சியை பார்த்து தெரிந்து கொண்டதாகக் கூறுகிறார். காவல்துறை முதல்வர் பொறுப்பில் தான் இருக்கிறது. மக்களைச் சுட போவது முதல்வருக்கு தெரியாதா? அப்பாவி மக்களை சுட்டுக் கொள்வது தான் வெற்றி நடைபோடும் தமிழகமா? மக்களுக்கு எல்லா விஷயங்களும் தெரிவது மகிழ்ச்சியாக இருக்கிறது. எத்தனை சூட்கேஸ்கள் அமைச்சர்கள் வாங்கி இருக்கிறார்கள் என்று மக்கள் தெளிவாக சொல்லும்போது குக்கர் விசில் அடிக்கமால் வேற எந்த சின்னமும் ஜெயிக்காது குக்கர் தான் ஜெயிக்கும்.ஜெயலலிதாவுடன் 34 ஆண்டுகள் வாழ்ந்த சசிகலாவை, ஜெயலலிதா நினைவிடத்திற்கு கூட செல்ல விடாமல் தடுத்துள்ளதாக தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் காரைக்குடி சட்டமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டியை ஆதரித்து பிரச்சாரம் செய்தார் டிடிவி தினகரன்.
அப்போது அவர் பேசுகையில், “ஆளுங்கட்சி தலைமையிலான கூட்டணி, பணத்தை மட்டும் நம்பியே தேர்தலை சந்திக்கிறது. துரோகி என்று சொன்னதற்கு என் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். பழனிச்சாமியை பல்லி, பாம்பு இல்லை. நீங்கள் பச்சோந்தி என்றும், மேலும் பழனிசாமி எனது பெயர் பழனிசாமி இல்லை பொய் சாமி என்றும் கூட கூறுவார் என விமர்சித்தார். பணம் படுத்தும் பாடு இருக்கே பதவி, அதிகார மமதையால் என் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆறு ஏரி குளங்களை தூர்வாரினார்களோ? இல்லையோ? தமிழ்நாட்டு கஜானாவை காலி செய்து விட்டனர் என விமர்சித்தார்.
– சிவக்குமார்