பாஜக – மக்கள் நீதி மய்யம் : வேட்பாளர்களின் அநாகரிக அரசியல்!
தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் கட்சிகளாக வளர்ந்து நிற்கும் திமுக, அதிமுக ஆகியவற்றிற்கு ஆணி வேராக திகழ்ந்தது திராவிட இயக்கம். இதன் வளர்ச்சியில் முக்கியமானது மேடைப் பேச்சு. காங்கிரஸ் ஆட்சியை அகற்றி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி அமைவதற்கு அண்ணா, கருணாநிதி, நெடுஞ்செழியன், அன்பழகன் போன்ற ஒப்பற்ற தலைவர்கள் பேச்சு முக்கிய காரணமாக இருந்தது. அப்போதெல்லாம் திராவிட இயக்கத் தலைவர்களின் பேச்சைக் கேட்க டிக்கெட் வாங்கிக் கொண்டு தமிழக மக்கள் ஆர்வத்துடன் சென்றிருக்கின்றனர். இத்தகைய தலைவர்களால் தமிழக மக்களின் மனங்களில் திராவிட சிந்தனை வேறூன்றியது. தமிழ் மொழி, தமிழர் நாகரிகம், தமிழ் கலாச்சாரம் என தமிழர்கள் நலன் சார்ந்த விஷயங்கள் மேடை பேச்சால் அறிவாக புகட்டப்பட்டன.
தொடக்க காலங்களில் திமுக நடத்திய மாநாடுகள் 4 முதல் 5 நாட்கள் வரை நடைபெற்றன. இதற்காக வண்டி கட்டிக் கொண்டு வந்து தங்கி கண்டு ரசித்து சென்றுள்ளனர். அந்தளவிற்கு திராவிடத் தலைவர்களின் பேச்சால் தமிழக மக்கள் ஈர்க்கப்பட்டிருந்தனர். பின்னர் காலப்போக்கில் திமுகவின் மாநாடு ஒரே நாளாக சுருங்கிவிட்டது. இதைப் போல தமிழகத் தலைவர்களின் நாகரிகமும் இன்று சுருங்கிவிட்டது என்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது. அதிலும் 2021 தமிழக சட்டமன்ற தேர்தல் களம் அநாகரிகப் பேச்சிற்கு பஞ்சமின்றி சென்று கொண்டிருக்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் பற்றி திமுக எம்.பி ஆ.ராசா பேசியதாக வெளியான வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தேர்தல் ஆணையம் வரை சென்றுள்ளது.
இந்த விஷயத்தை அடிப்படையாகக் கொண்டு திமுக கூட்டணியை அதிமுக கூட்டணி தரப்பில் இருந்து பலரும் கண்டித்து வருகின்றனர்.
அதில் முதல்வர் கண்கலங்கியது உருக்கமான நிகழ்வாகிப் போனது. இதையடுத்து லியோனி, தயாநிதி உள்ளிட்டோரின் அநாகரிகப் பேச்சைத் தொடர்ந்து சமீபத்திய சர்ச்சையில் சிக்கியிருப்பவர்கள் கமல் ஹாசனும், வானதி சீனிவாசனும். இவர்கள் இருவரும்
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகின்றனர். கடந்த 27ஆம் தேதி கோவையில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது, பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் உடன் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு மக்கள் நீதி மய்யம் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் சி.கே.குமாரவேல் வெளியிட்ட அறிக்கையில், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோருடன் கமல்ஹாசன் விவாதித்துவிட்டு, கடைசியாக வானதி சீனிவாசன் போன்ற ‘துக்கடா’ தலைவர்களுடன் விவாதம் வைத்துக் கொள்வார். எந்த ஆளுமையும் இல்லாத வானதி சீனிவாசனோடு விவாதிக்க எங்கள் மாணவர் அணியினர் போதும் என்று கூறப்பட்டிருந்தது. இதையடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்ட வானதி சீனிவாசன், என்னை பார்த்து துக்கடா அரசியல்வாதி என்று கூறினால், பெண்களுக்கு அவர்கள் கொடுக்கும் மரியாதை இதுதானா? ஒவ்வொரு பெண்ணும் கஷ்டப்பட்டு தான் வாழ்க்கையில் முன்னேறி வருகின்றனர்.
பொது வாழ்க்கைக்கு வரக்கூடிய பெண்களுக்கு இவர்கள் வைக்கும் விமர்சனம் இது தான் என்றால், பெண்களை இவர்கள் காப்பாற்றுவார்களா? அவர்களின் நலனில் அக்கறை செலுத்துவார்களா? கமல் ஹாசன் இதற்கு பதில் கூறட்டும் என்று தெரிவித்திருந்தார். இதேபோல் பாஜக தமிழகப் பொறுப்பாளர் சி.டி.ரவி பேசுகையில், கமல் ஹாசனின் அரசியல் பக்குவம் அவ்வளவு தான் என்றார். இந்நிலையில் சொர்ணாம்பிகை லே-அவுட் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட வானதி சீனிவாசன், என்னைப் பார்த்து துக்கடா அரசியல்வாதி என்று மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கூறுகின்றனர். அந்த நடிகரைப் பார்த்து கேட்கிறேன். இதுவரை நீங்கள் லிப் சர்வீஸ் மட்டுமே செய்து வருபவர். இதற்கு இரண்டு அர்த்தங்கள் கூறலாம். ஒன்று உதட்டளவில் சேவை செய்வது.
இன்னொன்று உதட்டுக்கு மட்டும் சேவை செய்வது. இதை மட்டுமே செய்யும் நீங்கள் என்னைப் பார்த்து துக்கடா அரசியலாதி என்பதா? மக்கள் தங்களுடைய வாக்குகள் மூலம் கமல் ஹாசனுக்கு பதில் சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதில் கமல் ஹாசன் தரப்பு அநாகரிகமான அறிக்கை ஒன்றை வெளியிட்டது என்று விமர்சித்தால், வானதி சீனிவாசன் பேச்சை என்ன சொல்வது? பாஜகவின் அகில இந்திய மகளிர் அணியின் தலைவர் இப்படியொரு விமர்சனத்தை முன்வைக்கலாமா? அரசியல் ரீதியாக ஒரு கட்சியையோ அல்லது தலைவரையோ விமர்சிக்க ஆயிரம் விஷயங்கள் இருக்கின்றன. சித்தாந்த ரீதியாக, அரசியல் செயல்பாடுகள் அடிப்படையில் நாகரிகமான முறையில் விமர்சிப்பதில் தவறில்லை.
ஆனால் தனிப்பட்ட ரீதியில் தரம் தாழ்ந்து இறங்குவது எந்தவொரு அரசியல் தலைவருக்கும் அழகல்ல. தேர்தல் களத்தில் மக்களின் வாக்குகளை கவர நேர்மையான அரசியல் செயல்பாடுகளை முன்வைத்து பேசலாமே? நேர்மையற்ற செயல்பாடுகளை விமர்சிக்கலாமே? வாக்கு அரசியலுக்காக இவ்வளவு அநாகரிகமாக பேசும் தலைவர்கள், நாளை வேறு விஷயங்களில் அநாகரிகமாக செயல்பட மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? மிகப்பெரும் இளைஞர் சக்தியை கொண்டுள்ள தமிழகத்தில், தலைவர்களின் முற்போக்கான, அறிவுப்பூர்வமான, தொலைநோக்கு பார்வை கொண்ட அரசியல் கருத்துக்களை கேட்டு வளர்வதே அவர்களின் எதிர்காலத்திற்கும் மட்டுமல்ல. தமிழகத்தின் எதிர்காலத்திற்கும் சிறப்பானதாக இருக்கும் என்கின்றனர்.
– அருண்