அரசியல்சினிமா

‘வாழ்த்துகள் சூர்யா, அன்புடன் தேவா’ மம்மூட்டியின் ஸ்பெஷல் வாழ்த்து!

ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது! தேர்தல் அரசியலா..?

நடிகர் ரஜினிகாந்திற்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்படும் என தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.

இந்திய சினிமாவில் ஒரு கலைஞருக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த கௌரவமாக கருதப்படும் இந்த விருது, தங்க தாமரை (கோல்டன் லோட்டஸ்) பதக்கம், ஒரு சால்வை மற்றும், 10,00,000 ரொக்கப் பரிசை உள்ளடக்கியது. இது 2018-ல் நடிகர் அமிதாப் பச்சனுக்கு வழங்கப்பட்டது.

”இந்திய சினிமா வரலாற்றில் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான ரஜினிகாந்த்க்கு இந்த ஆண்டு தாதாசாகேப் பால்கே விருதை அறிவிப்பதில் மகிழ்ச்சி. நடிகர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் என அவரது பங்களிப்பு ஐகானிக்காக உள்ளது” என்று ஜவடேகர் ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார். இந்த விருதுக்கு ரஜினிகாந்தை தேர்வு செய்த நடுவர் மன்றத்தில் பாடகர்கள் ஆஷா போஸ்லே மற்றும் சங்கர் மகாதேவன், நடிகர்கள் மோகன்லால் மற்றும் பிஸ்வாஜீத் மற்றும் திரைப்பட இயக்குநர் சுபாஷ் காய் ஆகியோர் இருந்தனர்.

ரஜினிகாந்த் 1975-ஆம் ஆண்டில் வெளியான தமிழ் திரைப்படமான ’அபூர்வ ராகங்கள்’ படத்தின் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். இதையடுத்து பாட்ஷா, தளபதி, அண்ணாமலை, முத்து, சிவாஜி, சந்திரமுகி, மற்றும் எந்திரன் போன்ற பிளாக்பஸ்டர் படங்களில் பணியாற்றினார். ரஜினிகாந்தின் கடைசி படம் 2020-ஆம் ஆண்டில் வெளியான தர்பார். தற்போது ‘அண்ணாத்த’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். சினிமாவில் சிறப்பாக பணியாற்றியதற்காக பத்ம பூஷண் மற்றும் பத்ம விபூஷன் விருதுகளையும் ரஜினிகாந்த் பெற்றுள்ளார்.

இந்த விருது அறிவிப்புக்கும், தேர்தலுக்கும் சம்பந்தம் இல்லை என்றும் பிரகாஷ் ஜவடேகர் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், ரஜினிக்கு தாதாசாகேப் பால்கே விருதுக்கு அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம், தேர்வுக்குழுவினரின் பரிந்துரையின் பேரில் இந்த விருது அளிக்கப்படுகிறது.இந்திய திரைத்துறையில் 50 ஆண்டுகளாக ரஜினி உள்ளார். திரைத்துறையில் அளிக்கப்படும் விருதுக்கும், தேர்தலுக்கும் தொடர்பில்லை என பதில் அளித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”இனிய நண்பரும், தன்னிகரற்ற கலைஞனுமாகிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தாதா சாஹேப் பால்கே விருது, கிடைத்திருப்பதை அறிந்து மகிழ்கிறேன். தாமதம் என்றாலும் வரவேற்புக்குரியது! நடிப்புக்கும், நட்புக்கும் இலக்கணமான நண்பர் ரஜினி அவர்களின் கலைப்பயணம் என்றென்றும் இனிதே தொடர வாழ்த்துகள்!” என தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். ”தலைமுறைகள் கடந்து பிரபலமாக இருப்பது, ஒரு சிலருக்கு பெருமை சேர்க்கலாம், மாறுபட்ட பாத்திரங்கள் மற்றும் அன்பான ஆளுமை … அது தான் ரஜினிகாந்த் ஜி. தலைவருக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு வாழ்த்துக்கள்” என அவர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

கமல் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: “உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது உச்ச நட்சத்திரமும் என் மனதிற்கு இனிய நண்பருமான ரஜினிகாந்திற்கு அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்வளிக்கிறது. திரையில் தோன்றுவதன் மூலமே ரசிகர்களை வென்றெடுத்துவிட முடியும் என்பதை நிரூபித்த ரஜினிக்கு இந்த விருது 100% பொருத்தம்“. இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.

நடிகர் மம்மூட்டியும் ரஜினிக்கு தனது அன்பான வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் அவர், “தாதாசாகேப் பால்கே விருது பெரும் சூர்யாவுக்கு வாழ்த்துக்கள். அன்புடன் தேவா” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது, “இந்திய திரையுலகின் மிக உயரிய தாதா சாகேப் பால்கே விருது எனக்கு வழங்கிய மத்திய அரசிற்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னில் இருந்த நடிப்புத் திறமையை கண்டுபிடித்து என்னை ஊக்குவித்த என்னுடைய பேருந்து ஓட்டுனரான நண்பன் ராஜ் பகதூருக்கும், வறுமையில் வாடும் போதும் என்னை நடிகனாக்க பல தியாகங்கள் செய்த என் அண்ணன் சத்யநாராயணா கெய்க்வாட்டுக்கும் என்னை திரையுலகிற்கு அறிமுகம் செய்து இந்த ரஜினிகாந்தை உருவாக்கிய எனது குருநாதர் கே.பாலச்சந்தருக்கும், திரையுலக தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாகர்கள், ஊடகங்கள் மற்றும் என்னை வாழ வைத்த தமிழ் மக்களுக்கும், உலகெங்கிலும் உள்ள எனது ரசிக பெருமக்களுக்கும் இந்த விருதினை சமர்ப்பிக்கிறேன்.

என்னை மனமார்ந்து வாழ்த்திய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், நண்பர் கமல், மத்திய, மாநில அரசியல் தலைவர்களுக்கும், நண்பர்களுக்கும், திரையுலக நண்பர்களுக்கும் என்னுடைய நலம் விரும்பிகளுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ராபர்ட் ராஜ்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button