எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 5 ஆண்டுகள் இடைவெளி ஏன்? பேரம் நடக்கிறதா?- : திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி

மதுரை தோப்பூரில் 1264 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 224.24 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளதாக 2018 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்று, 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நவம்பர் மாதம் தொடங்கியது. பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்நிலையில் மதுரை எய்ம்ஸ்க்கான நிலத்தை இன்னும் மாநில அரசு ஒப்படைக்க வில்லை என மத்திய சுகாதர துறை மற்றும் குடும்ப நல அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிக்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆகியும் நிலம் வழங்கப்படவில்லை என்ற விவரம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவமனை அமைப்பது தொடர்பாக ஜிக்கா நிறுவனத்துடன் கடன் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு அதுவும் கையெழுத்து ஆகவில்லை என்பது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ள அவர், அரசு இந்த திட்டத்தின் மூலம் கமிஷன் பெற காத்திருப்பதாக சாடியுள்ளார்.




