அதிகரிக்கும் கொரோனா தொற்று..!
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை மெல்ல மெல்ல தொடங்கி வருகிறது. தொற்று உறுதியாபவர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. பல வாரங்களாக 500-க்கும் கீழ் ஒரு நாளின் தொற்றாளர்கள் எண்ணிக்கை இருந்து வந்த நிலையில், தற்போது 650க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்படுகிறது.
அதிலும் குறிப்பாக ஏழு மாவட்டங்களில் பாதிப்பு வேகமாக அதிகரிப்பதாக சுகாதாரத்துறை கண்டறிந்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருவள்ளூர், தஞ்சாவூர், காஞ்சிபுரம், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது.
குறிப்பாக சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. சென்னையில் பிப்ரவரி 25ம் தேதி முதல் மார்ச் 3ம் தேதி வரை 1,239 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆனால் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 33% பாதிப்பு அதிகமாகி 1650 பேருக்கு மேல் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அதே போன்று காஞ்சிபுரம் மாவட்டத்த கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் 119 ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு வாரத்தில் 34% அதிகரித்து 160 ஆக உயர்ந்துள்ளது. கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் 26.1 சதவீதமும் திருப்பூரில் 31.7 சதவீதமும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தொற்று உறுதியாகும் விகிதமும் ( 100 பேர் பரிசோதனை செய்தால் எத்தனை பேருக்கு தொற்று) அதிகரித்துள்ளது. சென்னையில் பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் 1.4% என இருந்தது தற்போது 2% ஆக உயர்ந்துள்ளது. அதே போல் கோவையில் 1.5% லிருந்து 2.1% ஆக உயர்ந்துள்ளது. செங்கல்பட்டில் 1.4% முதல் 1.8% ஆக தற்போது உயர்ந்துள்ளது.
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கொரோனா தடுப்பு பணிகளை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த மூன்று வாரங்களாக தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் குறையாமல் இருப்பது வேதனையளிப்பதாகக் கூறினார்.
சுபநிகழ்ச்சிகள் போன்றவற்றில் மக்கள் அதிகளவில் கூடுவது, பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் அலட்சியமாக செல்வதால், கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியாது. தாம்பரம், எழும்பூர், சென்ட்ரல் ஆகிய இடங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் தேர்தல் பறக்கும் படை போன்று சுகாதாரத்துறை, காவல்துறையும் இணைந்து கொரோனா தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ள சூழலில், நோய் தொற்று எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
– நமது நிருபர்