சத்துணவுத்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, முன்னாள் அமைச்சர் சரோஜா சுமார் 77 லட்ச ரூபாய் வசூலித்து மோசடி செய்திருப்பதாக அவரது உறவினரே புகார் செய்துள்ளார்.
அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் ஒவ்வொருவராக ஒவ்வொரு புகாரில் சிக்கி வருகின்றனர். அந்த வரிசையில் சத்துணவுத்துறை முன்னாள் அமைச்சர் சரோஜா மோசடி புகாரில் சிக்கியிருக்கிறார். 15 பேரிடம் 76 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மோசடி செய்ததாக அவரது உறவினரே புகார் அளித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்தவர் 64 வயதான குணசீலன் இவர் கூட்டுறவுத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் தற்போது பத்திர எழுத்தராகப் பணியாற்றி வருகிறார். மேலும் இவர், முன்னாள் அமைச்சர் சரோஜாவின் அண்ணன் மருமகன் ஆவார். ஆகஸ்ட் 28ம் தேதி ராசிபுரம் காவல்நிலையத்தில், முன்னாள் அமைச்சர் சரோஜா மீது பரபரப்பான புகார் அளித்திருக்கிறார்
அதில், 2016ம் ஆண்டு அதிமுக வெற்றி பெற்று சமூக நலம் மற்றும் சத்துணவுத் துறை அமைச்சராக சரோஜா பொறுப்பேற்ற பின்னர் தன்னையும் தனது மனைவியையும் அழைத்ததாக புகாரில் குறிப்பிட்டுள்ளார். சத்துணவுத் துறையில் அமைப்பாளர், உதவியாளர், சமையலர் ஆகிய பிரிவுகளில் பணியாளர்கள் நியமிக்க உள்ளதாகவும் விருப்பம் உள்ளவர்களிடம் பணம் வாங்கித் தந்தால் வேலையில் சேர்த்து விடுவதாக சரோஜா கூறியதாகவும் புகாரில் கூறியுள்ளார்
அதன்படி ராசிபுரம் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 15 பேரிடம் குறைந்த பட்சம் மூன்றரை லட்சம் ரூபாய் முதல் அதிகபட்சம் 5 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 76 லட்சத்து 50 ஆயிரம் வசூலித்ததாகவும் தனது புகாரில் குணசீலன் குறிப்பிட்டுள்ளார்
2017ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி சரோஜாவிடம் முதல் தவணையாக 50 லட்சம் ரூபாயைத் தான் வழங்கியதாகவும் அப்போது அவருடன் அவரது கணவர் லோகரஞ்சன் இருந்தார் எனவும் புகார் மனுவில் தெரிவித்துள்ளார்பின்னர், பாக்கி இருந்த 26 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை லோகரஞ்சனிடம் கொடுத்ததாகவும் அப்போது முன்னாள் அமைச்சர் சரோஜா உடனிருந்ததாகவும் குணசீலன் கூறியுள்ளார். தான் கொடுத்த பணத்தில்தான் தற்போது அவர்கள் ராசிபுரத்தில் வசிக்கும் புதிய வீட்டை வாங்கியதாகவும் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
ஆனால், சொன்னபடி சரோஜா வேலையும் வாங்கித் தரவில்லை, பணத்தையும் திருப்பித் தரவில்லை என்று குற்றம்சாட்டுகிறார் குணசீலன். சம்பவம் நடந்து, 4 ஆண்டுகள் முடியப் போகும் நிலையில் தன்னிடம் பணம் கொடுத்தவர்கள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருவதால் பணத்தை மீட்டுத் தரும்படியும் தனது குடும்பத்திற்குப் பாதுகாப்பு அளிக்கும்படியும் புகாரில் கோரியுள்ளார் குணசீலன்.
அவரது புகாரைப் பெற்றுக் கொண்ட ராசிபுரம் போலீசார், அதன் மீது சமூகப் பதிவேடு ரசீது மட்டும் கொடுத்துள்ளனர். மேலும், இந்த மோசடியில் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் 15 பேரையும் காவல்நிலையத்திற்கு தனித்தனியாக அழைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
– கார்வேந்தன்