மருத்துவர்கள் இல்லாத நிலையில் செவிலியர்கள் பிரசவம் பார்த்ததால் இறந்து பிறந்த குழந்தை !: ஆபத்தான நிலையில் தாய்
விழுப்புரம் மாவட்டம் கெடாரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட சித்தாமூர் பகுதியைச் சேர்ந்த கிரிஜா என்ற பெண்ணுக்கு செவிலியர்களே பிரசவம் பார்த்த சம்பவத்தால் குழந்தை இறந்து பிறந்தது. செவிலியர்களின் அலட்சியம் மற்றும் தவறான சிகிச்சையின் காரணமாக, 22 வயதேயான இளம்பெண் கிரிஜாவின் கர்ப்பப்பை அகற்றப்பட்டுவிட்டது. தற்போது, உயிருக்கு ஆபத்தான நிலையில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
”காலை 6 மணிக்கு ஆண் குழந்தை இறந்து பிறந்தது என சொன்னார்கள். பிறகு தொப்புள் கொடியை வெட்டி எடுத்துள்ளனர். இதனால் என் மனைவிக்கு இரத்தப் போக்கு வெளியேறிக் கொண்டே இருந்ததாக சொன்னார்கள். பின்னர், இரத்தப் போக்கு நிற்காததால் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். அங்கு இரத்தப் போக்கு நிற்க வேண்டுமென்றால் கர்ப்பப்பையை எடுத்தாகவேண்டும்; இல்லையெனில் உன் மனைவியின் உயிருக்கு ஆபத்து என்றார்கள். படிப்பறிவோ, மருத்துவ அறிவோ எதுவும் தெரியாத என்னிடம், ஆலோசனை கேட்கக்கூட அருகில் யாரும் இல்லாத நெருக்கடியான நிலையில் சுய விருப்பம் இல்லாத நிலையில் கையெழுத்துப் போட்டு கொடுத்தேன். செவிலியர்கள் அளித்த தவறான சிகிச்சையின் காரணமாக எங்களின் எதிர்கால கனவான குழந்தையை கொன்றதுடன்; இளம் மனைவியின் கர்ப்பப்பையையே அகற்றி எதிர்காலத்தில் குழந்தைப் பேறுக்கும் வழியில்லாமல் செய்துவிட்டனரே’’ என்று அழுது புலம்புகிறார் கிரிஜாவின் கணவர், சந்திரசேகர்.
‘’இந்தப் பிரச்சனையின் அடிப்படையான காரணம் சம்மந்தப்பட்ட கெடார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாததே. ஆனால், விழுப்புரம் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் பாலு அவர்கள் இந்த பிரச்னை குறித்து பத்திரிக்கைகளுக்கு அளித்துள்ள பேட்டியில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலை ஒன்பது மணி முதல் மாலை நான்கு மணிவரை தான் மருத்துவர்கள் பணியில் இருப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.
பிரசவ வலி ஏற்பட்டு நள்ளிரவு ஒரு மணிக்கு கிரிஜாவை கெடார் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றிருக்கின்றனர். மருத்துவர்கள் இல்லாத நிலையில் அவரை பிரசவத்திற்காக எப்படி அனுமதித்தார்கள்? மருத்துவர்களே இல்லாத நிலையில் செவிலியர்கள் மட்டுமே காலை ஆறு மணிவரை அப்பெண்ணுக்கு சிகிச்சையை எவ்வாறு மேற்கொண்டனர்?” எனக் கேள்வி எழுப்புகிறார், மக்கள் அதிகாரம் அமைப்பின் விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன்ராஜ்.
மேலும், ”இது முழுக்க முழுக்க மருத்துவ துறை தவறினால் நடந்துள்ள பிரச்சினை என்பதுதான் வெளிப்படையான உண்மை. கெடார் மட்டுமல்ல மாவட்டத்தின் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இதுதான் நிலையாக நீடிக்கிறது. பெரும்பாலான அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவனைகளில் பணிபுரிகின்றனர். இதை முதலில் தடை செய்ய வேண்டும். ஆகப் பெரும்பான்மையான ஏழைகள் அரசு மருத்துமனைகளை நம்பியே உள்ளனர். இந்தச் சூழலில் மாவட்ட ஆட்சியர் இதில் உடனடியாக தலையிட்டு இருபத்து நான்கு மணிநேரமும் மருத்துவர்கள் இரண்டு ஷிப்ட்களில் ஆரம்ப சுகாதார நிலையயங்களில் பணிபுரிவதை உத்தரவாதப் படுத்தவேண்டும். மேலும், அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரிவதை சட்டவிரோதம் என அறிவித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்கிறார், அவர்.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரான சந்திரசேகர் மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் மோகன்ராஜ் ஆகியோர் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிட்டுள்ளனர்.