அரசியல்

என்னைவிட என் தொகுதி மக்களுக்குதான் வேதனை..! அ.தி.மு.க தலைமைக்கு தோப்பு வெங்கடாச்சலம் கோரிக்கை…

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டது. 171 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் போட்டியிடும் தொகுதி ஆகிய விவரங்களை அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி வெளியிட்டனர். இந்த வேட்பாளர் பட்டியலில் பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாச்சலம் பெயர் இல்லை. 2011, 2016 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் பெருந்துறை தொகுதியில் போட்டியிட்ட தோப்பு வெங்கடாசலம் அங்கு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வானார். வரும் சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் பெருந்துறை தொகுதியை தோப்பு வெங்கடாச்சலம் கேட்டிருந்தார்.

பெருந்துறை தொகுதி கிடைக்காத நிலையில் தோப்பு வெங்கடாச்சலம் செய்தியாளர்களை சந்தித்தார். “ஜெயலலிதாவுக்கு எப்படி கட்டுப்பட்டு கட்சிபணிகளை மேற்கொண்டு வந்தோமே அதேபோல்தான் அவரது மறைவுக்கு பின்னர் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இருவருக்கும் கட்டுப்பட்டு கடந்த 4 ஆண்டுகளாக இயக்க பணிகளை செய்து வருகிறோம். ஜெயலலிதா இருந்தபோது எவ்வளவு ராணுவக்கட்டுப்பாட்டோடு ஒரு தொகுதியில் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் ஒழுக்க சிந்தனையோடு பணியாற்ற வேண்டும் என எங்களை வழிநடத்தினார். அந்த ஒழுக்க சிந்தனையை அப்படியே மனதில் வைத்துக்கொண்டு ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்பும் தொகுதிகளுக்கான எங்களது பணிகளை நாங்கள் மேற்கொண்டு வந்தோம்.

ஜெயலலிதாவை நேசித்த தொகுதி மக்களுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தோம். பெருந்துறை தொகுதி என்பது ஒரு வறட்சியான பகுதி. அத்திகடவு -& அவிநாசி எனும் மாபெரும் திட்டத்தை கடந்த 50 ஆண்டுகளாக யாரும் நிறைவேற்றவில்லை. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா தான் இந்த திட்டத்துக்கு பிள்ளையார் சுழிப் போட்டார். இந்த திட்டத்துக்காக சிறு நிதியும் ஒதுக்கினார். அவரின் மறைவுக்கு பின்னர் முதல்வர் மற்றும் துணை முதல்வர் அவிநாசி – அத்திகடவு திட்டத்தை நிறைவேற்றினர். தற்போது 50 சதவிகித பணிகள் நிறைவு பெற்றுள்ளது. மக்கள் மனதில் தண்ணீர் கிடைத்துவிடும், குளங்கள் நிறைந்துவிடும் என்ற மகிழ்ச்சியை விதைத்துள்ளோம்.

எனது தொகுதியை பொறுத்தவரையில் நான் கடமை கண்ணியம் கட்டுப்பாடுடன் பணியாற்றியுள்ளேன். இதுதொகுதி மக்களுக்கு நன்றாக தெரியும். தொகுதிக்கான திட்டங்களை சில நேரங்களில் போராடிக்கூட பெற்றிருக்கிறேன். இதனால் சிலரின் மனசங்கடங்களுக்கு ஆளாகின்ற சூழல் கூட இருந்திருக்கிறது. ஈரோடு தொகுதியில் கொடிவேரி திட்டத்தை செயல்படுத்தும்போது அதில் சில முட்டுக்கட்டைகள் இருந்தது. அதிமுக வேட்பாளர் பட்டியலில் என்னுடைய பெயர் அறிவிக்கப்படவில்லை. இது என்னைவிட என் தொகுதி மக்களுக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது. வேட்பாளர் பட்டியலில் இடம்பெற வேண்டும் என எல்லோருக்கும் ஆசை இருக்கிறது. மக்களுக்கு இன்னும் சேவை செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.

உளவுத்துறை மற்றும் தனியார் உளவுத்துறை மூலமாக கட்சி தலைமை சில பட்டியலை எடுத்திருக்கிறார்கள். பெருந்துறை தொகுதியில் நான் நன்றாக பணியாற்றுகிறேன். மக்களுக்கு தேவையான திட்டங்களை நல்ல முறையில் கொண்டு சேர்த்திருக்கிறேன் என்ற தகவல் அவர்களுக்கு வந்திருப்பதாகதான் என்னிடம் கூறினார்கள். நான் அ.தி.மு.க-வில் தான் இருக்கிறேன் இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

கூட்டணி கட்சியினர் இந்த தொகுதியை கேட்டிருந்தால் நாம் ஒன்றும் செய்ய முடியாது. கூட்டணியில் யாரும் இதனை கேட்கவில்லை. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதியில் அதிக வாக்குகளை பெற்றுத்தந்திருக்கிறேன். என்னுடைய தொகுதியில் நான் அதிக வாக்குகளை பெற்றுத்தந்திருக்கிறேன். முதல்வரே என்னை நேரில் அழைத்து பாராட்டினார்.

நான் ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவன். எனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது என்பதால் சேற்றை வாரி வீச தயாராக இல்லை. எங்களுக்கு மனவருத்தம் இருக்கிறது. எதன் அடிப்படையில் இந்த வேட்பாளர் தேர்வு நடைபெற்றிருக்கிறது என்ற கருத்தை நான் முதல்வரிடம் எடுத்துச்சென்றிருக்கிறேன். வேட்பாளர் தேர்வை பொருத்தவரையில் எங்கள் தொகுதி தொண்டர்கள் மனநிறைவாக இல்லை.

தொகுதியில் என் பெயரில் எந்தவிதமான குற்றச்சாட்டும் இல்லை. எனக்கும் டிடிவி தினகரனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் அந்த அணியை சார்ந்தவன் என்ற கருத்தே தவறானது.

அமைச்சர்கள் என்னை தனிப்பட்ட முறையில் பார்க்கக்கூடாது. இந்த இயக்கத்துக்கு என்ன செய்திருக்கிறேன் இயக்கத்தின் பிரதிநிதியாகதான் அவர்கள் என்னைப் பார்க்க வேண்டும். நானும் அமைச்சராக இருந்துள்ளேன். நல்ல தொண்டனை, மக்கள் பிரதிநிதியை தடுக்க கூடிய வகையில் எந்த அமைச்சர் செயல்பட்டாலும் அதுதவறுதான்.

தலைமை பெருந்துறை தொகுதிக்கு வேட்பாளரை அறிவித்துள்ளது. எனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கு என்ன காரணம். என்னை வெற்றி பெற வைத்தது என்னுடைய மக்கள். என்னைப்போன்ற உண்மையான தொண்டர்களின் உணர்வை தலைமை பரிசீலிக்க வேண்டும் என்பதே என்னுடைய வேண்டுகோளாகும்” என்றார்.

– சௌந்திரராஜன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button