தமிழகம்

கொரோனா ஊரடங்கை மீறியவர்கள் மீதான 10 லட்சம் வழக்குகள் ரத்து… : பின்னணி என்ன?

உலகே ஊரடங்கில் இருந்த போது “கொரானோவை காட்டு நான் ஊரடங்கை கடைபிடிக்கின்றேன்” என்று அதீத ஆர்வகோளாரில் போலீசாரிடம் சண்டித்தனம் செய்த இளைஞரை யாரும் மறந்திருக்க முடியாது. மேலும் ஊரடங்கில் அத்துமீறல் செய்தவர்கள் மீது பதியப்பட்ட பத்துலட்சம் வழக்குகள் கைவிடப்பட்டுள்ளன.

கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த மத்திய, ,மாநில அரசுகள் கடந்த மார்ச் மாதம் 23 ஆம் தேதி முதல், கொரோனா ஊரடங்கை அமல்படுத்தின. ஆனால் அதன் பிறகு தான் நம் மக்கள் சாலையில் ஒன்றுகூடி அணிவகுப்பே நடத்த ஆரம்பித்தனர். அப்படி கும்பலாக சாலையில் சென்றவர்களை கொத்தாக பிடித்த போலீசார் தொற்றுநோய் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் முழு ஊரடங்கு நேரத்தில் ஹாயாக சுற்றிய இளைஞர்களை பிடித்த போலீசார் கொரோனா நோயாளி இருக்கும் ஆம்புலன்சில் ஏற்றுவதாக கொடுத்த அதிர்ச்சி வைத்தியம் புகழ் பெற்றது. போலீசாரிடம் சிக்கிய சிலரோ தேர்வு எழுதும் தண்டனை, தோப்புக்கரணம் முதல் பிரம்படி வரை வாங்கிய நிகழ்வுகளும் நடந்தன.

ஊரடங்கு நேரத்தில் கொரோனாவை பார்த்து இளைஞர்கள் அச்சப்பட்டார்களோ இல்லையோ ட்ரோனை பார்த்து ஓடி மறையாதவர்களே இல்லை. சரி சாலையில் சென்றால் தானே பிரம்படி என்று ஊரின் ஒதுக்குப்புறங்களில் ஒன்றுகூடி கேரம்போர்ட் விளையாடியவர்கள், லூங்கி டான்ஸ் ஆடிய காட்சிகள் என ஏராளமான நிகழ்வுகள் நடந்தேறின.

ஊரடங்கு காலத்தில் இதுபோன்று விதிமீறி ஒன்று கூடியவர்கள் மீது உள்ள வழக்குகளை மட்டும் கைவிடுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் போலீசாரிடம் வாக்குவாதம் செய்து பிரச்னை செய்தவர்கள் மீதுள்ள வழக்குகள் தொடரும் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இது ஒரு வகை என்றால் டிக்டாக் ஆர்வலர்களின் உலகம் வேறு வகை, கொரோனா காலகட்டத்தில் அவர்கள் உச்சத்தில் இருந்தனர். ஊரில் நண்பர்களுடன் பிரியாணி கிண்டி சாப்பிட்டவர்களுக்கு கூட வழக்கில் இருந்து விடுதலை கிடைக்கும் ஆனால் அத்துமீறி வனத்திற்குள் சென்று வனவிலங்குகளை வேட்டையாடி செய்த குற்ற வழக்குகள் ரத்தாகாது என்கிறது அரசின் செய்திக் குறிப்பு.

இவற்றையும் தாண்டி இந்த கொரோனா ஊரடங்கு, புதிய தொழில்நுட்பங்களை கண்டுப்பிடித்த அறிவியல் மேதைகளையும் இந்த உலகத்திற்கு காட்டியது. வீட்டிலேயே கேரட் பீர் தயாரித்தவர் கைது.. குடும்பத்துடன் குக்கர் பீர் தயாரித்தவர் கைது கபசுரகுடிநீருடன் சேர்த்து கள்ளச்சாராயம் காய்ச்சியவர் கைது என புதிது புதிதாக வீட்டிலேயே கண்டுபிடித்து மதுப் பிரியர்களின் விருப்பங்களை நிறைவேற்றியவர்களுக்கும் வழக்குகளில் இருந்து விடுவிப்பு இருக்காது எனக் கூறப்படுகிறது.

ஆனால் கொரோனா ஊரடங்கை மீறி சாலையில் சென்றதற்கு எல்லாமா கேஸ் போடுவாங்க எனக் கேள்வி கேட்டவர்கள் இனி நிம்மதிப் பெருமூச்சு விடலாம்.

சிஏஏ எதிர்ப்பு போராட்ட வழக்குகள் ரத்து செய்யப்படும் என்கிற தமிழக முதல்வரின் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்துள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, அனைத்து அறவழி போராட்ட வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து பாப்புலர் ஃப்ரண்ட் மாநில பொதுச்செயலாளர் முகைதீன் அப்துல் காதர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்தில் கடந்த காலங்களில் அரசியல் சாசனத்திற்கு எதிரான  சிஏஏ வுக்கு எதிராகவும், மக்கள் நலனுக்காகவும் நடைபெற்ற அனைத்து அறவழி போராட்டங்களில் ஈடுபட்டோர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட்   தமிழக அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்திருந்தது. 

இது குறித்து தமிழக அமைச்சர்களை நேரில் சந்தித்து மனுவும் கொடுக்கப்பட்டது.  இந்நிலையில் தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த தமிழக முதல்வர், மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடியவர்கள் மீதான வழக்குகள் மற்றும் கொரோனா கால விதிமுறைகளை மீறியதாக தொடரப்பட்ட வழக்குகள் கைவிடப்படும் என்று தெரிவித்துள்ளார். இ-பாஸ் முறைகேடு, காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தது, வன்முறையில் ஈடுபட்டோர் மீதான வழக்குகளை தவிர மற்றவை ரத்து செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

வழக்குகள் ரத்து செய்யப்படும் என்கிற தமிழக முதல்வரின் அறிவிப்பை பாப்புலர் ஃப்ரண்ட்  ஆஃப் இந்தியா வரவேற்கின்றது. அதே சமயத்தில் காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்த குற்றத்தை ரத்து செய்ய முடியாது என்று தெரிவித்திருப்பது தவறான முன்னுதாரனமாக அமைந்து விடும்.  இது அதிகாரத்தை  தவறாக பயன்படுத்துவதற்கு வழி வகுக்கும். நியாயமான கோரிக்கைகளை முன் வைத்து தான் ஜனநாயக அறவழி போராட்டங்களை மக்கள் நடத்துகின்றனர்.வேறு எந்தவிதமான தீய  நோக்கங்களும் இல்லை. தங்களின் உரிமைகள் மறுக்கபடுவதாக மக்கள் கருதும்போது ஜனநாயக போரட்டங்களின் வாயிலாகத்தான் தங்களது கோரிக்கைகளை அரசுக்கு தெரிவிக்கமுடியும்.

ஆனால் இத்தகைய அறப்போராட்டங்களில் கலந்து கொண்டவர்கள் மீதும், தலைவர்கள் மீதும் தேசதுரோக வழக்குகளும், காவல்துறையை பணி செய்யவிடாமல் தடுத்த பிரிவிலும் காவல்துறையால் வழக்குகள் பதிவு செய்ய ப்பட்டுள்ளன. இது ஜனநாயக அறவழி போராட்டங்களை அச்சுறுத்தும் வகையில் அமைத்துள்ளதாக பாப்புலர் ஃப்ரண்ட்  கருதுகிறது.

அதேபோல் கொரோனா காலகட்டத்தில் இ-பாஸ் முறைகேடு வழக்குகள் ரத்து செய்யப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. கொரோனா காலத்தில் இருந்த முழு ஊரடங்கில் சொல்லொண்ணா துயரத்தை  மக்கள்  அனுபவித்தனர். பயணம் மேற்கொள்ள இ -பாஸ் விதிமுறையை  நடைமுறைப்படுத்தியது தமிழக அரசு. ஆனால் அதிகாரிகளின் அலட்சிய போக்கினால் பொதுமக்கள் மிக தாமதமாக   இ -பாஸ்  பெற்றதும்,  அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு இ – பாஸ் வழங்கியதும் சாமானிய மக்களால் எளிதாக இ-பாஸ் பெறமுடியாத  நிலை ஏற்பட்டது. தற்பொழுது அவ்வழக்குகளை ரத்து செய்ய முன்வராதது ஏமாற்றம் அளிக்கிறது.

எனவே குடியுரிமை வழக்குகளை ரத்து செய்தது போன்று, அனைத்து அரசியல் வழக்குகளையும், கொரோனா காலத்தில் போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்ப பெற வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக  தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

நமது நிருபர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button