தமிழகம்

பணத்திற்காக அண்ணனைக் கடத்தி.. சித்ரவதை செய்த தங்கை !

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் சொத்துக்கு ஆசைப்பட்டு சொந்த சகோதரியே ரியல் எஸ்டேட் அதிபருக்கு ஸ்கெட்ச் போட்டு கடத்தி கொடுமைப்படுத்தி பணம் நகைகளை பறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த தெக்கலூரில் வசித்து வருபவர் சிவக்குமார் (எ) தங்கத்துரை (52). கடந்த 2020 ஆம் ஆண்டு சாத்தூரை சேர்ந்த பெண் ஒருவருடன் திருமணமாகி விவாகரத்து பெற்றுள்ளார். இதனிடையே கடந்த 2007 ஆம் ஆண்டு தனது தந்தை மற்றும் 2017 ஆம் ஆண்டு தனது தாயாரும் இறந்து விட்ட நிலையில் அவர்களுக்கு கோடிக்கணக்கில் நிலங்கள் மற்றும் வீடு ஆகியவை பெருமாநல்லூர் மற்றும் சுல்தாண்பேட்டையிலும் உள்ளது.

இந்நிலையில் சிவக்குமாரின் சகோதரி அம்பிகா சேடபாளையம் அருகே வசித்து வருகிறார். இதனிடையே சகோதரி அம்பிகா சிவக்குமாருக்கு சேரவேண்டிய சொத்துக்களை தனது பெயருக்கு மாற்றித்தரும்படி அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதற்கு சிவக்குமார் மறுத்து வந்த நிலையில் கடந்த 25 ஆம் தேதி மதியம் அம்பிகா தனது கணவர் வேலுச்சாமி மற்றும் மகன் கோகுல் ஆகியோருடன் சேர்ந்து சிவக்குமாரை சேடபாளையத்தில் உள்ள வடிவேல் என்பவரது வீட்டில் இருந்தபோது கடுமையாக தாக்கி கை, கால்களை கட்டி காரில் கடத்தி அருகில் உள்ள வீட்டில் தொங்கவிட்டு கடுமையாக தாக்கியுள்ளனர். அடிதாங்க முடியாமல் உயிருக்கு பயந்து அம்பிகாவும் கணவர் வேலுச்சாமியும் கைகாட்டிய இடத்தில் எல்லாம் பத்திரத்தில் கையெழுத்து போட்டு கொடுத்துள்ளார்.

பின்னர் சிவக்குமார் அணிந்திருந்த 13 சவரன் நகை மற்றும் 1 லட்சத்து 60 ஆயிரம் ரொக்கப்பணத்தை பறித்துக்கொண்டு பின்னர் அங்கிருந்து கார் மூலமாக கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் காரில் வைத்து தாக்கியுள்ளனர். அதன்பிறகு கார் சேலம் நெடுஞ்சாலையில் உள்ள டோல் கேட் அருகே ஓரமாக நிறுத்தி சிவக்குமாரின் வாயில் புனலை வைத்து மதுவை ஊற்றியுள்ளனர். பின்னர் தொடர்ந்து தாக்கியதோடு சிவக்குமாரை காரில் கடத்திச்சென்று பெங்களூர் சென்று மதுவை வலுக்கட்டாயமாக வாயில் ஊற்றி அங்கிருந்த போதை மறு வாழ்வு மைய காப்பகத்தில் விட்டுவிட்டு திரும்பியுள்ளனர்.

இதனிடையே போதை தெளிந்த நிலையில் தனக்கு நேர்ந்த கொடுமையையும், தான் கடத்தப்பட்டது குறித்து உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். பின்னர் பெங்களூருவில் இருந்து மீட்கப்பட்ட சிவக்குமார் பல்லடம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சகோதரி அம்பிகாவின் மகன் கோகுல் கணவர் வேலுச்சாமி மற்றும் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த அருள்புரம் ரியாஸ்கான்(36), அறிவொளிநகரை சேர்ந்த சாகுல் அமீது(25), ஹஷ்ரப் அலி(25) ஆகிய 5 பேரை கைது செய்த பல்லடம் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் தலைமறைவான அம்பிகாவை வலை வீசி தேடி வருகின்றனர். சொத்துக்காக சொந்த சகோதரியே கணவர் மகன் மற்றும் அடியாட்களுடன் சகோதரனை கடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button