தமிழகம்

காரை வழிமறித்து ரேஷன் அரிசி பற்றி புகார் சொன்ன பெண் : புல்லட்டில் சென்று ஆய்வு செய்த அமைச்சர் செல்லூர் ராஜூ

மதுரையில் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று வீட்டிற்கு காரில் திரும்பி சென்று கொண்டிருந்த கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ காரை வழி மறித்த பெண் ஒருவர், தனக்கு எடை குறைவான தரமற்ற அரிசி வழங்கியதாக புகார் அளித்தார்.

உடனே அவர் காரை விட்டு இறங்கி கட்சிக்காரர் புல்லட்டில் அந்த ரேஷன் கடைக்கு சென்று முதல்வன் படம் பானியில் ஆய்வு செய்து அந்த ரேஷன் கடை ஊழியரை ‘சஸ்பெண்ட்’ செய்ததோடு உடன் இருந்த அங்கீகரிக்கப்படாத ஊழியர் ஒருவரை கைது செய்யவும் உத்தரவிட்டார்.

மதுரை பெத்தானியாபுரத்தில் மாநகர அதிமுக சார்பில் நடந்த கரோனா நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதன் பின் அவர் அங்கிருந்து காரில் வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த செல்வி என்ற பெண், அமைச்சர் காரை வழிமறித்து ‘‘தனக்கு ரேஷன் கடையில் வழங்கப்பட்ட 19 கிலோ அரிசி எடை குறைவாக உள்ளது. தரமற்று உள்ளது, ’’ என்று தனது ஆதங்கத்தை தெரிவித்தார். மேலும், ரேஷன் கடை ஊழியர் தராசில் எடை போடாமல் கையில் அரிசியை எடை போட்டு வழங்குவதாகவும் புகார் தெரிவித்தார்.

அந்தப் பெண்ணை சாமாதானம் செய்த அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, அருகில் கட்சித்தொண்டர் வைத்திருந்த புல்லட்டில் ஏறி பின்னால் அமர்ந்தபடி அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ரேஷன் கடைக்குச் சென்றார்.

புல்லட்டில் ஏறிச் சென்ற அமைச்சர் செல்லூர் ராஜுவை கட்சி நிர்வாகிகள், போலீஸார் பின்தொடர்ந்தனர். புகார் செய்த சம்பந்தப்பட்ட பெண்ணையும் அந்த ரேஷன் கடைக்கு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வரவழைத்தார்.

ரேஷன் கடையில் ஆய்வு செய்தபோது அங்கிருந்த ரேஷன் கடை ஊழியர் தர்மேந்திரன், தனக்கு உதவியாளராக அங்கீகரிக்கப்படாத பெரியசாமி என்பவரை வேலைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. உடனடியாக அவரை கைது செய்ய அமைச்சர் செல்லூர் ராஜு உத்தரவிட்டார்.

போலீஸார் அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர். தொடர்ந்து ரேஷன் கடை ஊழியர் தர்மேந்திரனிடம் விசாரணை நடத்தினார். அவர் எடைபோடாமல் பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கியது தெரியவந்தது.

அதிர்ச்சியடைந்த அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, தனது உதவியாளர் மூலம் கூட்டுறவுத்துறை அதிகாரிக்கு தகவல் தெரிவித்து உடனடியாக அவரை ‘சஸ்பெண்ட்’ செய்ய உத்தரவிட்டார்.

மதுரையில் ‘கொரோனா’ ஊரடங்கு ஆரம்பித்த முதலே ரேஷன் கடைகளில் தொடர்ந்து எடை குறைவான மற்றும் தரமற்ற அரிசி மற்றும் பொருட்கள் வினியோகிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

இந்த சூழலில் பெண் ஒருவர் தைரியமாக கூறிய புகாரால் அமைச்சர் முன்னிலையில் நடந்த ஆய்வில் பொதுமக்கள் குற்றச்சாட்டு வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
இதுபோன்ற இந்த குறைபாடுகளும், குற்றச்சாட்டும் இந்த ஒரு கடையில் மட்டுமே மதுரையில் பெரும்பாலான கடைகளில் நடப்பதாகவும், அமைச்சர் அனைத்து கடைகளிலும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

& வேலு

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button