தமிழகம்

கடலுக்கு மீன்பிடிக்க செல்ல விதிக்கப்பட்ட தடையால் தூத்துக்குடி – வேம்பார் பகுதி விசைப்படகு மீனவர்கள் தவிப்பு

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பார் மீனவ கிராம மீனவர்கள் சுமார் 60 விசைப்படகுகளை கொண்டு மீன் பிடித்து வருகின்றனர். கீழ வைப்பார், சிப்பிகுளம், தருவைகுளம் உள்ளிட்ட பகுதிகளில் நாட்டுப்படகு மீனவர்கள் ஏராளமாக உள்ளனர். நாட்டுப்படகு மீனவர்களும், விசைப்படகு மீனவர்களும் மீன் பிடிக்கும் போது ஓரிடத்தில் சந்தித்துக்கொள்ளும் போது வலைகள் சேதமாவது உள்ளிட்ட பிரச்னைகள் எழுவது வழக்கம். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வேம்பார் விசைப்படகு மீனவர்களுக்கும் நாட்டுப்படகு மீனவர்களுக்கும் நடுக்கடலில் பிரச்னை ஏற்பட்டது.

அப்போது சமரசம் பேசப்பட்டு இருதரப்பினரும் மீன் பிடிக்க அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால் தற்போது மீண்டும் நாட்டுப்படகு மீனவர்கள் இழப்பீடு கேட்டு முறையிட்டிருக்கின்றனர். இதனால் இழப்பீடு வழங்கும் வரை கடலுக்கு செல்லக் கூடாது என விசைப்படகு மீனவர்களுக்கு மீன்வளத்துறை அதிகாரிகள் தடை விதித்திருக்கின்றனர். இந்த பிரச்னையில் கடந்த 40 நாட்களாக விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.

தமிழகத்தின் பிற மீனவ கிராமங்களில் உள்ள நாட்டுப்படகு மீனவர்களுக்கும், விசைப்படகு மீனவர்களுக்கும் பிரச்னை வராது இருக்க இரு தரப்பினரும் வாரத்தில் தலா 3 நாட்கள் மட்டும் கடலுக்கு செல்லலாம் என்ற நடைமுறை உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்வளத்துறை அதிகாரிகள் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த மறுப்பதாக குற்றம் சாட்டுகின்றனர்.

இது குறித்து மீன்வளத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, 1983 ஆம் ஆண்டு சட்டப்படியே தாங்கள் செயல்பட முடியும் எனவும், தனித்தனி நாட்கள் இருதரப்பினருக்கும் பிரித்து கொடுக்க முடியாது எனக் கூறுகின்றனர். கட்டப்பஞ்சாயத்து செய்வதையே நோக்கமாக கொள்ளாமல் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கொண்டு வரவேண்டும் என்பதே விசைப்படகு மீனவர்களில் கோரிக்கையாக உள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button