அரசியல்

எடப்பாடியை எச்சரித்த செந்தில்பாலாஜி

அ.ம.மு.க-வின் அமைப்புச் செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி டி.டி.வி.தினகரனோடு எற்பட்ட பிணக்கு காரணமாக கடந்த 14-ம் தேதி தி.மு.கவில் ஐக்கியமானார். இந்த நிலையில், கரூரில் ஸ்டாலினை அழைத்து வந்து பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடத்தி 30,425 பேரை தி.மு.க-வில் இணைத்திருக்கிறார்.

கோவை பைபாஸ் ரவுண்டானாவில் ஸ்டாலினுக்கு பூரண கும்ப மரியாதையும், பெண்கள் மாவிளக்கு எடுத்து வரவேற்பும் கொடுத்தனர். இதைத்தவிர, மயிலாட்டம், ஒயிலாட்டம், டிரம்ஸ் என்று என்று ஸ்டாலினை ஐந்து இடங்களில் வரவேற்கத் தடபுடல் ஏற்பாட்டைச் செய்திருந்தார். ஒரு லட்சம் பேரை இணைப்பதற்குத்தான் செந்தில்பாலாஜி முயற்சி செய்தாராம். ஆனால், அதற்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் பல்வேறு வகையில் முட்டுக்கட்டை போட்டதால், இப்போதைக்கு 30,425 பேரை மட்டும் இணைத்திருப்பதாகவும், போகப் போக செந்தில்பாலாஜி சொன்ன இலக்கில் ஆள்களை தி.மு.க-வில் சேர்ப்பார் என்று அவர் தரப்பில் சொல்லப்பட்டது.

இந்த நிலையில், இந்தப் பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், “இது பொதுக்கூட்டமா, இல்லை மாவட்ட மாநாடா, அதைவிட மாநில மாநாடா என்று வியக்கும் அளவுக்கு இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறார் செந்தில்பாலாஜி. மேடையில் என்னை விட்டுத் தள்ளிப் போட்டு சேரில் அமர்ந்திருந்தார். நான்தான், ‘தி.மு.க-வுக்கு வந்திட்டீங்க. அப்புறம் என்ன தூரம்… நெருங்கி வாங்க’ன்னு பக்கத்தில் வரச் சொன்னேன். நீங்கள் யாரும் கூச்சப்பட வேண்டியதில்லை. தாய்க்கழகத்துக்கு மறுபடியும் திரும்பியிருக்கிறீர்கள். கடுமையாக உழையுங்கள். அப்படி நீங்கள் உழைக்கும் உழைப்புக்கான பலனை உரிய நேரத்தில் பெறுவீர்கள்.

அதாவது, வரப்போகிற தேர்தலுக்கு கடுமையாக  உழையுங்கள் என்று சொல்கிறேன். நீங்க லேட்டா வந்தாலும், லேட்டஸ்டா தி.மு.கவுக்கு வந்திருக்கிறீர்கள். 4 மாநில தேர்தல் முடிவுகள் உலகம் சுற்றும் பிரதமரான மோடியை வீட்டுக்கு அனுப்பக்கூடிய எச்சரிக்கையைத் தந்திருக்கிறது. காங்கிரஸ் வென்று, புதிய ஆட்சி அமையும் நம்பிக்கை பிறந்திருக்கிறது. மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் வரப்போகிறது. எடப்பாடிக்கு சேகர் ரெட்டி மாதிரியான ஆள்களுக்கு ஆட்சி நடத்தினால் போதும் என்ற நினைப்பு. மோடிக்கு நாடுகளைச் சுற்றினால் போதும்ங்கிற ஆசை. இந்த இரண்டு பிறவிகளையும் நாம் நடத்தும் ஜனநாயக போர் மூலம் வீட்டுக்கு அனுப்புவோம். மத்திய அரசிடம் தமிழகத்துக்கு உரிய உரிமைகளைப் பெற திராணியற்ற அரசாக எடப்பாடி அரசு இருக்கிறது. இங்கு இருக்கும் அமைச்சரவையைப் பற்றி ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால், இரு கிரிமினல் கேபினட்.

அ.தி.மு.க-வுக்கு 103 எம்.எல்.ஏ-க்கள்தான் இருக்கிறார்கள். ஆட்சியமைக்க 117 எம்.எல்.ஏ-க்கள் தேவை. ஆனால், இந்த ஆட்சியை மோடி காப்பாற்றுகிறார். ஏனென்றால், வரும் எம்.பி தேர்தலில் அ.தி.மு.கவோடு கூட்டணி வைத்து தமிழகத்தில் நான்கு அல்லது ஐந்து இடங்களைப் பெற்றுவிடலாம் என்று கனவு காண்கிறார். மோடியாச்சும் தன்னை ஒரு மன்னனாகத்தான் நினைக்கிறார். ஆனால், எடப்பாடி தன்னை ஒரு கடவுளாக நினைத்துச் செயல்படுகிறார். ஆனால், அவர் மக்களைக் காப்பாற்றும் சாமி இல்லை. மக்களை ஏமாற்றும் சாதாரண ஆசாமிதான். பா.ஜ.கவும் அ.தி.மு.கவும் மறுபடியும் ஆட்சிக்கு மட்டுமல்ல, இங்கே ஓட்டுகூட கேட்டு வரமுடியாது. நாம் இப்போது ஒரு சபதத்தை எடுத்துக்கொள்வோம். அது என்னவென்றால், நாடும் நமதே; நாற்பதும் நமதே!” என்று முடித்தபோது,பெருத்த ஆரவாரம். செந்தில்பாலாஜியின் முகத்திலோ மகிழ்ச்சி தாண்டவமாடியது.

இந்தப் பொதுக்கூட்டத்தில் பேசிய செந்தில் பாலாஜி, “தி.மு.க-வின் தளபதியாக இருந்த ஸ்டாலின் இனிமேல் மக்களின் தளபதியாக மாறுவார். இடைத்தேர்தல் நடந்தால், 18 தொகுதிகளிலும் ஜெயித்து அவரை முதல்வர் நாற்காலியில் அமர வைப்போம். அதற்கு பக்கபலமாக, தி.மு.க-வில் இன்றைக்கு 30,425 பேர்களை இணைத்திருக்கிறோம். கரூர் எம்.பி தொகுதியில் 5 ஆண்டுகளாக தம்பிதுரை எம்.பியாக இருக்கிறார். மோடி ஒருவேளை நாடாளுமன்றத்துக்கு வந்தால், தம்பிதுரையைப் பார்த்து எழுந்து நிற்ககூடிய அளவுக்கான பவரான துணை சபாநாயகர் பதவியை வகிக்கிறார். ஆனால், இந்தத் தொகுதிக்கு என்ன திட்டங்களைக் கொண்டு வந்தார்? எதையும் செய்யவில்லை. அவருக்கு 2014 எம்.பி தேர்தல்தான் கடைசி தேர்தல். வரும் 2019 எம்.பி தேர்தலில் அவர் மண்ணைக் கவ்வுவார்.

கரூர் தொகுதியில் தளபதி அறிவிக்கும் வேட்பாளரை அமோகமாக வெற்றிபெற வைப்போம். அதேபோல், மாவட்டத்தில் உள்ள 4 எம்.எல்.ஏ தொகுதிகளிலும் தி.மு.க வேட்பாளர்களையே ஜெயிக்க வைப்போம். எடப்பாடி பழனிசாமி நான் துரோகம் செய்துவிட்டதாக சொல்கிறார். அவர் நான்கு முறை எம்.எல்.ஏ-வாக வேண்டுமானால் ஆகி இருக்கலாம். ஆனால், இருவரும் ஒரே நேரத்தில்தான் அமைச்சரானோம். கூவத்தூரில் முட்டிப் போட்டு சி.எம் ஆனவர் அவர். நான் உள்ளிட்ட நான்கைந்து பேர் ஓட்டு போடலன்னா, அவர் சி.எம் ஆகி இருக்கமுடியாது. நாளையே நீங்க சி.எம் பதவியை ராஜினாமா பண்ணிட்டு, போட்டியிட்டு ஜெயித்து சி.எம் ஆகுங்கள். நான் அரசியலை விட்டே போய்விடுகிறேன். இல்லை என்றால், நீங்கள் அரசியலை விட்டுப் போகத் தயாரா?.

குறுக்கு வழியில் முட்டிபோட்டு சி.எம் ஆயிட்டு, இப்படி பேசக்கூடாது. வரும் 2019-ல் எம்.பி, எம்.எல்.ஏ தேர்தல்கள் ரெண்டும் ஒரே நேரத்தில் வரும். அப்போது, நீங்கள் மட்டுமல்ல, ஓ.பி.எஸ், தங்கமணி, வேலுமணி, தம்பிதுரையின் கைத்தடி (அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை சொல்கிறார்) எல்லோரும் திருச்சி, சேலம் மத்திய சிறைகளுக்கும், சென்னை புழல் சிறையிலும் கம்பி எண்ணப் போகிறீர்கள். 234 தொகுதிகளிலும் தி.மு.க அமோக வெற்றி பெறும். ஏழரை கோடி மக்களின் உணர்வை மதிக்கிற, 3 கோடி இளைஞர்களின் எண்ணத்தை ஈடேற்றுகிற ஆட்சியை ஸ்டாலின் வழங்குவார். அதற்கு, மேற்கு மண்டலம் ஸ்டாலினுக்குக் கோட்டையாக இருக்கும்“ என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button