உள்ளாட்சி தேர்தல்-… : கட்சிகள் தீவிரம்..!
உள்ளாட்சித் தேர்தலில் பணியாற்றவுள்ள அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் பட்டியலை மாநில தேர்தல் ஆணையத்திடம் சென்னை மாநகராட்சி வழங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக, தமிழகம் முழுவதும் 92,771 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.
சென்னையில் 5,200 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றது. சென்னை மாநகராட்சிக்கு தேர்தல் நடத்தும் அதிகாரியாக மாநகராட்சி ஆணையர், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் 37 பேர் மற்றும் தேர்தல் பணியாளர்கள் 40 ஆயிரம் பேர் கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டு மாநில தேர்தல் ஆணையத்திடம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பதவியிடங்கள் இருப்பதால் 10 லட்சம் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்ப்பதாக தமிழக தேர்தல் அதிகாரியாக இருந்த பழனிசாமி தெரிவித்தார்.
தமிழகத்தில் டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகளில் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் தேர்தல் ஆணையர் பழனிசாமி தூத்துக்குடியில் நெல்லை, தூத்துக்குடி, மற்றும் கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்கள் அடங்கிய மண்டல அளவிலான தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான பயிற்சி மற்றும் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனைகள் வழங்கினார்.
இதில் பேசிய அவர், 1 லட்சத்திற்கு அதிகமான உள்ளாட்சி பதவிகளுக்கு, 10 மடங்கு வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்பதால், விதிமுறைகளை கண்டிப்பான முறையில் கடைபிடிக்கவேண்டும் என்றும், இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்காளர் பட்டியல் அடிப்படையிலே உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் காலையில் கிராம பஞ்சாயத்து தேர்தல் குறித்தும், மதியம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தல் குறித்தும் அவர் ஆலோசனை வழங்கினார். இதில் தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி, காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபால், நெல்லை ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், குமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் எம் வடநேரே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தேர்தலுக்கான ஆயத்த பணிகளை கட்சிகள் முடுக்கிவிட்டுள்ளன.
திமுக சார்பில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து விருப்ப மனு வாங்கும் பணி துவங்கியது. விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. சென்னை மேயர் பதவிக்கு திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட இளைஞர் அணியினர் விருப்ப மனு அளித்துள்ளனர்.
இதனிடையே, மாநில தலைமை தேர்தல் ஆணைய செயலாளர் எஸ்.பழனிசாமியை பணியிட மாற்றம் செய்துள்ள தமிழக அரசுக்கு திமுக தலைவர், மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். பணியிடமாற்றம் செய்யப்பட்டது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கும் நிகழ்ச்சி தமிழ் நாடு முழுவதும் மாவட்ட தலை நகரங்களில் இன்று தொடங்கியது. ஏராளமான அதிமுகவினர் ஆர்வத்துடன் விண்ணப்ப படிவங்களை பெற்றுவருகிறார்கள்.
தமிழகத்தின் உள்ளாட்சி தேர்தலை டிசம்பர் மாதம் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான விண்ணப்ப படிவங்கள் அந்தந்த மாவட்டங்களில் வழங்கப்படும் என்று அக்கட்சி அறிவித்து இருந்தது. அதன்படி கட்சி அமைப்பு ரீதியான மாவட்டங்களில் அந்தந்த பகுதியில் போட்டியிடுவதற்காக அதிமுக கட்சி நிர்வாகிகள் உரிய கட்டணம் செலுத்தி ஆர்வத்துடன் வந்து விண்ணப்பங்களை பெற்றுச்சென்றனர். இந்நிலையில் தமிழகத்தில் உள்ளாட்சித்தேர்தலை நடத்துவது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் தரப்பில் பதிலளிக்கப்பட்டது. அப்போது அனைத்து பணிகளும் முடிந்து உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை டிசம்பர் 2ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது.
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான விவரங்களை டிசம்பர் 13ம் தேதிக்குள் அறிக்கையாக தாக்கல் செய்வதாகவும் மாநில தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. இந்நிலையில், உச்சநீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக வழக்கறிஞரும் எம்பியுமான வில்சன், புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கும் எல்லை மறுவரையறை செய்த பிறகே உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என நீதிபதிகள் கூறியிருப்பதாக தெரிவித்தார்.
இதனிடையே உள்ளாட்சித் தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி, 10 மாவட்டங்களை சேர்ந்த ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
அதன்படி வரும் 20ம் தேதி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளக் கூட்டத்தில், காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
அதே போல் 22ம் தேதி திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெறும் கூட்டத்தில் பெரம்பலூர், கரூர், திருச்சி, அரியலூர் மாவட்ட ஆட்சியர்கள், அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 23ம் தேதி நடைபெறும் கூட்டத்தில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். ஏற்கனவே 10 தென் மாவட்டங்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடந்து முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.