அரசியல்

இந்திய சட்ட வரலாற்றில் எனக்கு ஒரு இடம் கிடைத்துவிட்டது..! : வைகோ பெருமிதம்..!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனு ஏற்கப்பட நிலையில், அவர் தனது கருத்துக்களை செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, “தற்போது நான் தேசத்துரோகி என்று குற்றம் சாட்டப்பட்டு ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு இருக்கின்றேன். அதை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்ய இருக்கிறோம். தேசத்துரோக வழக்கில் விடுதலைக்கு பிறகு இந்தியாவில் முதன் முதலாக தண்டிக்கப்பட்டது நான் என்பது பெருமைதான். இதனால் இந்திய சட்ட வரலாற்றில் எனக்கு ஒரு இடம் கிடைத்துவிட்டது. மேல் முறையீட்டில் நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன்.

ம.தி.மு.க.வின் தொண்டர்களின் ஒப்புதலை பெற்றுத்தான் நடந்து முடிந்த தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தோம். நான் எனக்கு பதவி கேட்பவனா? 1998-ல் என்னை மந்திரி ஆக சொன்னார் வாஜ்பாய். 1999-லும் சொன்னார். 2 முறையும் நான் மறுத்து விட்டேன். அதற்கு முன்பு, 1989-ல் வி.பி.சிங் உயர்ந்த பதவி தருவதாகச் சொன்னார். அதையும் மறுத்து விட்டேன்.
நான் இது வரை என் சுயநலத்துக்காக எந்த முடிவும் எடுத்தது இல்லை. இந்த முறை உங்களை தவிர வேறு யாரை பற்றியும் யோசிக்கக்கூடாது என்று கட்சி முடிவு எடுத்தது. நீங்கள் (வைகோ) செல்வதாக இருந்தால் மாநிலங்கள் அவைக்கு ஒரு இடம் தருகின்றோம் என்று சொன்னார்கள். எனவே கட்சியின் ஒட்டுமொத்த கருத்தின்படியே இந்த முடிவு எடுக்கப்பட்டது.
எப்போதும் இந்த இயக்கத்தில் மற்றவர்கள் பதவிக்கு வர வேண்டும் என்பதை விரும்புகின்றவன் நான். அமைச்சர்களாக ஆக்கி மகிழ்ந்தவன் நான். எம்.பி.க்கள் ஆக்கி மகிழ்ந்தவன் நான்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்ற மாநிலங்கள் அவை தேர்தலுக்காக என்னுடைய வேட்பு மனு ஏற்கப்பட்டது என்றவுடன் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்தார். அதற்கு முன்பு என் மனு ஒருவேளை நிராகரிக்கப்படலாம் என்று நான் அவரிடம் கூறினேன். இல்லை. உங்கள் மனு கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளப்படும் என்று சொன்னார். ஒருவேளை நிராகரிக்கப்பட்டால், மாற்று ஏற்பாடு என்ன? என்று நான்தான் அவரிடம் கேட்டேன். அதன்படி அவர் ஒரு ஏற்பாடு செய்தார். எந்த பதவியையும் எதிர்பார்த்து நான் இல்லை. நான் வாங்குகின்ற மாத ஊதியத்தை முழுமையும் கட்சிக்கணக்கில் தான் வரவு வைக்கப்போகின்றேன். என்னுடைய உடல் நலம் எந்த அளவுக்கு ஒத்துழைக்கின்றதோ, அந்த அளவுக்கு இந்த கட்சிக்காக உழைப்பேன்.

நான் மாநிலங்கள் அவைக்கு சென்று 23 ஆண்டுகள், மக்கள் அவைக்கு சென்று, 17 ஆண்டுகள் ஆகின்றன. இப்போது உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலும் எனக்கு அறிமுகம் இல்லை. பழக்கம் கிடையாது. இப்போது அங்கே நான் ஒரு புது ஆள். அதுவும் ஒரு கட்சியின் ஒரேயொரு உறுப்பினர். எனவே எல்லா விவாதங்களிலும் பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்காது. கிடைத்தாலும், கடைசியாக இரண்டு முதல் ஐந்து நிமிடங்கள்தான் கிடைக்கும்.ஆகவே, தோழர்கள் எதிர்பார்ப்பது, சாதி, மதம், கட்சி எல்லைகளை கடந்து எல்லோருடைய எதிர்பார்ப்பையும் எப்படி நிறைவேற்றுவது என்ற திகைப்பில் கவலையில் இருக்கிறேன்.
7 பேர் விடுதலை தாமதம் ஆவதற்கு தமிழக அரசுதான் பொறுப்பு. தமிழ்நாட்டின் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்க வேண்டும். கருத்து உரிமை, பேச்சு உரிமையை காக்க வேண்டும். சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அரணாக திகழவேண்டும். தமிழ் ஈழம் அமைவதற்குக் குரல் கொடுக்கவேண்டும்.ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தியும், அணுக்கழிவுகளை கூடங்குளம் அணு மின் நிலைய வளாகத்திற்குள் புதைக்கக் கூடாது. நியூட்ரினோ திட்டம் கூடாது. மேகதாது அணை கட்ட அனுமதிக்கக்கூடாது. அதை நிறுத்தவேண்டும் என்ற வகையில் நான் குரல் கொடுப்பேன்” என்றார்.
வைகோவிற்கு தண்டனை வழங்கியிருப்பது ஏற்கனவே வழங்கப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை அவமதிக்கின்ற செயல் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “இந்திய வல்லாதிக்கமும், சிங்களப் பேரினவாதமும் சேர்ந்து ஈழ மண்ணில் நிகழ்த்திய இனப்படுகொலையைக் கண்டித்து, கடந்த 2009ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற ‘நான் குற்றஞ்சாட்டுகிறேன்’ எனும் நூல் வெளியீட்டு விழாவில் மன்மோகன் சிங் தலைமையிலான அப்போதைய காங்கிரஸ் அரசுதான் ஈழப்போரை நடத்தி மக்களைக் கொன்று குவிக்கிறது எனக் குற்றஞ்சுமத்தி பேசியதற்காக அப்போதைய திமுக அரசு, வைகோ மீது தேசத்துரோக வழக்கைப் பாய்ச்சியது. இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாகச் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் பத்தாண்டுகளாக நடைபெற்ற இவ்வழக்கில் தற்போது வைகோ குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருப்பது என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கிற கருத்துரிமையின் மீதான தாக்குதலாகவே நான் கருதுகிறேன்.
இலங்கை அரசுக்குப் பணமும், ஆயுதமும் கொடுத்து ஈழப்போரைப் பின்நின்று நடத்தி திட்டமிட்ட இனப்படுகொலையை நிகழ்த்த முழுக்க முழுக்கத் துணைநின்றது அன்றைய காங்கிரஸ்– திமுக கூட்டணி அரசு என்பதை உலகறியும். ‘இந்தியா விரும்பியே போரை நடத்தினோம்’ என இனப்படுகொலையாளன் ராஜபக்சேவும், அவனது சகோதரர்களும் இன்றைக்கு ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். இந்த மகத்தான உண்மையைத்தான், அன்றைக்கு உலகுக்கு உரத்துக் கூறியிருக்கிறார் வைகோ. அதற்காகத் தற்போது அவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை அளித்திருப்பதை சனநாயகத்தின் மீது பற்றுறுதி கொண்ட எவராலும் ஏற்க முடியாது.
‘தடைசெய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்துப் பேசுவது ஒருபோதும் குற்றமாகாது’ என ஏற்கனவே உச்ச நீதிமன்றம் வழக்கொன்றில் தெளிவுப்படுத்தியிருக்கிற சூழலில், தற்போது விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக அண்ணன் வைகோவிற்கு தண்டனை வழங்கியிருப்பது ஏற்கனவே வழங்கப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை அவமதிக்கின்ற செயல். தங்கள் மீது இனப்படுகொலையின் குற்றச்சாட்டு வந்துவிடக் கூடாது,அது வரலாற்றின் ஏடுகளில் இருந்து மறைக்கப்பட வேண்டும் என்ற காரணங்களுக்காக அன்றைய காங்கிரஸ் ஆதரவு திமுக அரசு வைகோ மீது தேசத்துரோக வழக்கினை பதிவு செய்தது.தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதிக்கு எதிராக, லட்சக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட இனப்படுகொலைக்கு எதிராக, குரல்கொடுக்க, உள்ளத்து உணர்வுகளை வெளிக்காட்டப் பேசுவது எப்படி இந்த நாட்டிற்கு எதிரான தேசத்துரோக குற்றமாகும் என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும்.
இன்னும் சில நாட்களில் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்க இருக்கிற நிலையில் பல நாட்கள் நிலுவையில் இருந்த இவ்வழக்கில் திடீரென வைகோவைக் குற்றவாளி எனத் தீர்ப்பளிப்பது என்பது நீதித்துறையின் செயல்பாடுகள் மீதான சந்தேகங்களையும் வினாக்களையும் எழுப்புகிறது . ஈழத் தாயகத்தின் விடுதலைக்காக இறுதிவரை களத்தில் நின்று போராடிய விடுதலைப்புலிகளை ஆதரித்ததற்காக தேசத்துரோகி எனப்பழி சுமத்தப்பட்டுத் தண்டனைப் பெற்றுள்ள வைகோ அவர்களுக்கு மேல்முறையீட்டில் நீதி கிடைக்க அவரது கருத்துரிமை சார்ந்த போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி உடனிருக்கும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button