மீண்டும் திமுக கோட்டையாகிறதா அரக்கோணம்…சிட்டிங் அதிமுக எம்.எல்.ஏ., சு.ரவிக்கு சரியும் செல்வாக்கு…!
தமிழகத்திலேயே மிக முக்கியமான ஒரு தொகுதி அரக்கோணம். தனித் தொகுதியான இந்த தொகுதியில் எந்த கட்சி வெற்றி பெறுகிறதோ அந்த கட்சிதான் ஆட்சியை பிடிக்கும் என்ற செண்டிமெண்ட் தமிழகத்தில் கடந்த 1951ம் ஆண்டு முதல் தொடங்கி கடந்த தேர்தல்வரை நடை பெற்றுள்ளது.
கடந்த 2011, 2016 என இரு தேர்தல்களிலும் அதிமுகவே வெற்றி பெற்று சு.ரவி தொடர்ச்சியாக எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். அருகில்பாடியை சேர்ந்த சு.ரவி இரு முறை எம்.எல்.ஏ.வாக இருந்தாலும் தொகுதியில் அடிப்படை பணிகளை கூட நிறைவேற்றாமல் “தன்னை” வளப்படுத்திக் கொள்வதிலேயே குறியாக இருந்துவிட்டதாக அவர் மீது அவர் சார்ந்த அதிமுகவினரே கடும் அதிருப்தியில் உள்ளனர்.
கட்சியினர் கடும் எதிர்ப்பு காரணமாக தொகுதி மாறலாமா என்றும் சு.ரவி யோசிப்பதாக கூறப்படுகிறது.
உங்கள் தொகுதியில் ஸ்டாலின் பிரசார கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலினும் “அமைச்சர்களுக்கு இணையாக அரக்கோணம் தொகுதியில் ஒருவர் சம்பாதித்து இருக்கிறார். அவர் தான் சு.ரவி. மணல் கடத்தல் தொடங்கி பலவகைகளில் மக்கள் பணம் கொள்ளை அடிக்கப்பட்டு இருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்ததும் தவறு செய்தவர்கள் சிறைக்கு செல்வார்கள்” என பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையில் அரக்கோணம் தொகுதியில் உள்ள செம்பேடு, சித்தம்பாடி, இச்சிபுத்தூர், கீழ்வனம், போளுர், உளியம்பாக்கம், கீலாந்தூர், பெருங்களத்தூர், கிருஷ்ணாபுரம், வளர்புரம், மூதூர், வேளுர், கொணலம், அணைப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஒரு சில கிராமங்களை தவிர மற்ற எல்லா கிராமத்திலும் சிட்டிங் எம்.எல்.ஏ. சு.ரவி மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்களாம்.
தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே சில கிராமங்களில் ஊர் கூட்டம் போட்டு தீர்மானம் நிறைவேற்றிக் கொண்டதாக கூறப்படுகிறது. அதே போல, அரக்கோணம் டவுன், நெமிலி மற்றும் தக்கோலம் பகுதிகளிலும் ஆளும் அதிமுக மீது எதிர்ப்பு ஏற்பட்டிருப்பதோடு, சிட்டிங் எம்.எல்.ஏ. சு.ரவி மீது கடும் அதிருப்தியும் நிலவுகிறது.
இதற்கு முக்கிய காரணம் சு.ரவி இரு முறை தொடர்ச்சியாக எம்.எல்.ஏ.வாக இருந்தாலும் தொகுதியின் அடிப்படை வேலைகளை கூட முடிக்காமல் மெத்தனமாக இருந்ததோடு, தன்னை “வளப்படுத்தி” கொண்டதுதான் காரணம். அதோடு, அரக்கோணம் தொகுதியில் சுமார் 20 முதல் 25 ஆயிரம் வாக்குகளை வைத்துள்ள வன்னியர்கள் கடந்த முறை தனியாக நின்றார்கள். இந்த முறை அதிமுக கூட்டணியில் அவர்கள் அங்கம் வகித்தாலும் சு.ரவி மீது கடும் கோபத்தில் இருக்கிறார்களாம்.
இதற்கு காரணம் அரக்கோணம் தொகுதியில் வன்னியர்களுக்கும், பட்டியல் இன மக்களுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம். ஏதாவது பிரச்சினை, அடிதடிகள் நடந்தாலும் வன்னிய இளைஞர்களுக்கு எதிராகவே சிட்டிங் எம்.எல்.ஏ. சு.ரவி நடந்து கொண்டதாகவும், ஒரு குற்றச்சாட்டும் தொகுதியில் வலம் வருகிறது.
இதனால் அதிமுக-&பாமக கூட்டணி ஏற்பட்டாலும் பாமகவின் ஆதரவு குறிப்பாக வன்னிய இளைஞர்கள் ஆதரவு சு.ரவிக்கு கிடைப்பது சந்தேகமே. அதே நேரம் கடந்த முறை போல இல்லாமல் இந்த முறை எப்படியும் தொகுதியை கைப்பற்றிவிட வேண்டும் என அரக்கோணம் தொகுதி திமுகவினருக்கு மாவட்ட செயலாளர் காந்தி எம்.எல்.ஏ. உத்தவிட்டிருக்கிறாராம்.
இதற்கு வசதியாக ஒன்றியங்களை பிரித்து புதியவர்கள் ஒன்றிய பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் அவரவர் ஒன்றியங்களில் குறைந்தது 2 முதல் 5 ஆயிரம் வாக்குகளை எதிர்த்து போட்டியிடுபவர்களை விட கூடுதலாக வாங்க வேண்டும் என உத்தரவாம்.
திமுக தலைவரின் தனிப் பார்வையிலேயே அரக்கோணம் தொகுதி வந்து விட்டதால் வேட்பாளர் தேர்விலும் திமுக தனி கவனம் செலுத்துகிறது. தொகுதியில் பலர் விருப்பமனு தாக்கல் செய்தாலும் வேட்பாளர் ரேசில் இருந்தது பவானி வடிவேலு, ராஜ்குமார், வக்கீல் எழில் இனியன். இதில் கடந்த முறை அறிவிக்கப்பட்டு மாற்றப்பட்ட பவானி வடிவேலுவின் சிக்கலே பவானி பட்டியல் இனத்தை சேர்ந்தவர், அவர் கணவர் வடிவேலு வன்னியர். இதன் காரணமாக தான் கடந்த தேர்தலில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டு வேட்பாளர் மாற்றப்பட்டார். தனித் தொகுதியில் முழுமையான பட்டியல் இனத்தை சேர்ந்தவரைத்தான் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை பலமாக எதிரொலிக்கிறது.
மாற்றப்பட்ட வேட்பாளர் ராஜ்குமார் பல கிராமங்களில் கட்சியினரை அரவணைத்து செல்லாமல் விட்டதோடு, அதிமுக வேட்பாளர் சு.ரவியுடன் ரகசிய டீல் வைத்துக் கொண்டதால்தான் கடந்த முறை தோல்வியை தழுவியதாக கூறப்படுகிறது. அடுத்ததாக வக்கீல் எழில் இனியன் மாவட்ட வழக்கறிஞர் அணியில் துணை அமைப்பாளராக இருக்கிறார். ஏற்கனவே 3 முறை சீட் கேட்டு விருப்பமனு கொடுத்தவராம். 4வது முறையாக இந்த முறையும் முயற்கிறாராம்.
திமுகவின் சார்பில் ஐபேக் டீம், முன்னாள் மூத்த அமைச்சரின் ரகசிய டீம் ஆகியவை தொகுதியில் எடுத்த சர்வே எல்லாவற்றிலும் வக்கீல் எழில் இனியனுக்கு வாய்ப்பு உள்ளதாகவே கூறியிருக்கிறார்களாம். அதோடு, புதியவர்களுக்கு வாய்ப்பு தரலாம் என்ற சர்வே பரிந்துரையும் கவனிக்கப்படுகிறது.
கூடுதலாக திமுக சட்டத்துறை சார்பிலும் சில தொகுதிகள் ஒதுக்கும்படி தலைமையில் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளதாம். அதில் ஒரு தொகுதியாக அரக்கோணம் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம் சிட்டிங் எம்.எல்.ஏ.ரவி ஒரு வழக்கறிஞர் என்பதும், ஆளுங்கட்சியாகவே 10 ஆண்டுகள் பதவியில் இருப்பதால் பண பலமும் அதிகம் இருக்கும், அவருக்கு ஈடு கொடுக்கும் வகையில் பண பலமும், தொகுதியில் கட்சி செல்வாக்கும் பெற்ற வழக்கறிஞர் ஒருவரையே எதிர்த்து களம் இறக்கலாம் என்பதால்தான் சட்டத்துறையும் அரக்கோணம் தொகுதியை கேட்டிருக்கிறதாம்.
இந்த வகையில் பார்க்கும் போது மாவட்ட வழக்கறிஞர் எழில் இனியனுக்கு வாய்ப்புகள் மிக பிரகாசமாக இருக்கிறது. இதன் காரணமாக அரக்கோணம் தொகுதி மீண்டும் திமுக கோட்டை ஆகலாம் என்று கூறப்படுகிறது.
– நமது நிருபர்