அரசியல்தமிழகம்

அன்றும்.. இன்றும்…: தேமுதிக கடந்து வந்த பாதை

இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19-ஆம் தேதி தொடங்கி மார்ச் 26-ஆம் தேதி முடிவடைகிறது. மார்ச் 27-ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படும் இதற்கான தேர்தல் முடிவுகள் மே 23-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
அ.தி.மு.க கூட்டணியில் அ.தி.மு.க 20 தொகுதிகளிலும் , பா.ஜ.க. 5 தொகுதிகளிலும் , பா.ம.க. 7 தொகுதிகளிலும், தே.மு.தி.க. 4 தொகுதிகளிலும், த.மா.கா, புதிய தமிழகம், மற்றும் புதிய நீதிக்கட்சி, என்.ஆர்.காங்கிரஸ் தலா 1 தொகுதிகளிலும் ஒதுக்கப்பட்டுள்ளன.
தமிழக கூட்டணி அரசியலில் இதுவரை இல்லாத இழுபறியை தேமுதிக சந்தித்த நிலையையும், அந்தக் கட்சி கடந்து வந்த பாதையைப் பார்க்கலாம்.
புரட்சிக் கலைஞர், கேப்டன் என்ற பட்டப் பெயர்களுடன் தமிழ்த் திரையுலகில் பிரபல ஹீரோவாக இருந்த விஜயகாந்த், 2005 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி ‘தேசிய முற்போக்கு திராவிட கழகம்’ என்ற கட்சியை தொடங்கினார். 2006ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டது. விஜயகாந்த் விருத்தாசலம் தொகுதியில் வெற்றி பெற்றார்.
ஒரே ஒரு தொகுதியில்தான் வெற்றி என்றாலும் தேமுதிக 8.4 சதவிகித வாக்குகள் பெற்றது. இந்த வாக்கு சதவிகிதம் தமிழகத்தின் முக்கிய கட்சிகளில் ஒன்றாக தேமுதிகவை பார்க்க வைத்தது. 2009 நாடாளுமன்றத் தேர்தல்தான் தேமுதிக சந்தித்த அடுத்த தேர்தல். இந்த முறையும் பெரிய கட்சிகளான திமுக, அதிமுகவுடன் கூட்டணி அமைக்காமல் தனித்து தேர்தலை சந்திக்க முடிவு செய்தார் விஜயகாந்த். தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் போட்டியிட்டது தேமுதிக. ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. ஆனாலும், அது பெற்ற 10.3 சதவிகித வாக்குகள் மீண்டும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
தேமுதிக சந்தித்த மூன்றாவது தேர்தல் 2011ல் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தல். இந்தத் தேர்தலில் முதன்முறையாக அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது தேமுதிக. 41 இடங்களில் போட்டியிட்ட தேமுதிக 29 இடங்களில் வெற்றி பெற்றது. ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் வெற்றி பெற்று முதன்முறையாக தமிழக சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்தைப் பிடித்தார். இந்தத் தேர்தலில் தேமுதிக 7.9 சதவிகித வாக்குகளைப் பெற்றது.
நான்காவது முறையாக 2014 நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்தது தேமுதிக. இந்த முறை பாஜகவுடன் கூட்டணியில் இணைந்தது அக்கட்சி. 14 தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக இந்த முறை ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. அப்போது தேமுதிகவின் வாக்கு சதவிகிதம் 5.1.
2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக, விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, இடதுசாரிகள் அமைத்த மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தது. இரு திராவிடக் கட்சி‌ளுக்கு எதிராக அமைக்கப்பட்ட இந்த மக்கள் நலக் கூட்டணியில் ஒரு கட்சிக் கூட, ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை. 104 இடங்களில் போட்டியிட்ட தேமுதிகவின் வாக்கு சதவிகிதம் இந்த முறை கணிசமான சரிவை சந்தித்து 2.41% ஆனது. இந்தத் தேர்தலில் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் மூன்றாவது இடத்தை பிடித்து தோல்வியடைந்தார். தற்போது நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவை இணைப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளுக்கு இணையாக தங்களுக்கும் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என தேமுதிக கோரிக்கை வைத்ததால், கூட்டணிப் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்தது. ஒருபுறம் அதிமுகவுடன் கைகோர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வந்த தேமுதிக மறுபுறம், திமுகவிடமும் பேரம் பேசியது.
ஆனால், திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீடுகள் நிறைவு பெற்றுவிட்டதால், இனி தேமுதிகவுக்கு இடம் இல்லை என திமுக பொருளாளர் துரைமுருகன் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். இதன் காரணமாக அதிமுகவுடன் மட்டுமே கூட்டணி வாய்ப்பு அல்லது தனித்துப் போட்டி என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது தேமுதிக.
இந்நிலையில் தேமுதிக பொருளாளரான பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “திமுக, அதிமுக என இரு தரப்பினரிடமும் தேமுதிக பேசியதாக எழுப்பப்படும் கேள்வியே தவறானது. தேமுதிக கூட்டணி குறித்த அறிவிப்பு ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
திமுக என்றாலே தில்லு முல்லு கட்சிதான். துரைமுருகன், திமுகவின் கட்சித் தலைமை பற்றி சுதீஷிடம் என்ன சொன்னார் என்பதை அவர் முதலில் தெரிவிக்கட்டும். தற்போது வயது மூப்பு காரணமாக துரைமுருகன் உளறிக் கொண்டிருக்கிறார். நானும் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவள்தான். ஆனால் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த துரைமுருகன் இவ்வளவு மோசமாக அரசியல் செய்வார் என நான் நினைத்து பார்க்கவில்லை.தேமுதிகவை தொடர்ந்து பழிவாங்கும் நோக்கத்துடன் திமுக செயல்பட்டு வருகிறது.
எங்களுக்கு திருமணம் செய்து வைத்தவரே கருணாநிதிதான். அவர் உடல்நிலை சரியில்லாதபோது அவரை சந்திக்க முதல்முறையாக அனுமதி கேட்டதே விஜயகாந்த்தான். ஆனால் ஸ்டாலின் அதற்கு கடைசி வரை அனுமதி தரவில்லை. ஆனால் ரஜினிகாந்த், விஜயகாந்தை பார்த்து சென்ற உடனேயே, ஸ்டாலினிடம் இருந்து விஜயகாந்த்தை சந்திக்க வருவதாக அழைப்பு வந்தது. நாங்களும் ஏற்றுக்கொண்டோம். எது நாகரிகம், எது அநாகரிகம் என்பதை துரைமுருகன் முதலில் தெரிந்து கொள்ளட்டும்.


வீட்டில் மணப்பெண் இருந்தால் 10 பேர் பெண் கேட்கத்தான் செய்வர்; தேர்தலும் அதுபோலதான். தேமுதிகவின் கூட்டணிக்காக பலபேர் தொடர்பு கொண்டனர். கிழியாத சட்டையை கிழித்து, வாங்க வாங்க என்று போட்டோ எடுக்கும் கட்சி தேமுதிக இல்லை. ராணுவக் கட்டுக்கோப்புடன் செயல்படும் கட்சி தேமுதிக. மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிட தேமுதிகவிற்கு எந்தப் பயமும் இல்லை. ஆக்கப் பொறுத்துவிட்டீர்கள். ஆறப்பொறுங்கள். இரண்டு நாளில் அதிகாரப்பூர்வமாக முடிவு அறிக்கப்படும்.” என்றார்.
இதனிடையே செய்தியாளர்கள் சந்திப்பில், மரியாதை குறைவாக நீ, வா, போ எனச் செய்தியாளர்களை பார்த்து பிரேமலதா விஜயகாந்த் பேசினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அரசியல் பேரத்தில் எவ்வளவு கிடைக்கும் என்று நினைத்திருந்த கனவு பாழாகிவிட்டதால் தேமுதிக பொருளாளர் பிரேமலதா ஆத்திரத்தில் வெடிப்பதாக ‌திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி விமர்சித்துள்ளது.
எது வேண்டுமானாலும் கேளுங்கள் என்று சொல்லிவிட்டு கேள்வி கேட்க ஆரம்பித்த உடன் ஏக வசனத்தில் பேசியதையும், வெளிறிய முகத்தையும் அனைவரும் பார்த்தார்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தங்களிடம் தொகுதிகள் இல்லை என்று கூறிய துரைமுருகன் மீது பிரேமலதா, சுதீஷ் கொதிப்படைய என்ன இருக்கிறது எனவும் முரசொலி கேள்வி எழுப்பியுள்ளது.
அரசியல் பேரத்தில் எவ்வளவு கிடைக்கும் என்றெல்லாம் கனவுலகில் சஞ்சரித்து கொண்டிருந்ததை திமுக பாழடித்துவிட்டதே என்பதை நினைக்கும் போது ஆத்திரம் வெடிக்கத்தானே செய்யும் என்றும் குறிப்பிட்டுள்ளது. அதனால் தான் பிரேமலதா திமுக மீது பாய்கிறார், அதிமுக மீது கோபத்தை கொப்பளித்து துப்புகிறார், பாஜகவை சாடுகிறார், செய்தியாளர்கள் மீது சீறிப்பாய்ந்து பிராண்டுகிறார் என முரசொலி விமர்சனம் செய்துள்ளது.
ஒரே நாளில் குபேரபுரியை எட்டிவிடலாம் என்று கனவு கொண்டு இருந்தவர்களின் எண்ணத்தில் துரைமுருகன் மண் விழச் செய்துவிட்டார் என்ற கொதிப்பு பிரேமலதாவின் பேட்டியில் தெரிந்தது என முரசொலி தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button