தனியே.. தன்னந்தனியே… தர்ணா…! : அணி மாறுகிறாரா முன்னாள் அமைச்சர் மணிகண்டன்
இராமநாதபுரம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மணிகண்டன் அதிமுக அரசுக்கு எதிராக தன்னந்தனியாக தர்ணாவில் இறங்கினார். ஆளும்கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு ஆளும் அதிமுக அரசு நிர்வாகத்திற்கு எதிராக மணிகண்டன் ஏன் தர்ணாவில் இறங்கினார் என அதிமுகவினரிடம் விசாரிக்கையில்..
கடந்த ஐந்து வருடமாக மணிகண்டன்தான் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். இராமநாதபுரம் நகர் முழுவதும் பாதாளச் சாக்கடை நீர் நிரம்பி வழிகிறது. இதனால் கொசுக்கள் உருவாகி பொதுமக்கள் சுகாதார சீர்கேட்டால் அவதிப்பட்டு வருகிறார்கள். இவர் அமைச்சராக இருக்கும்போது இவருடைய வீடு இருக்கும் பகுதியில் அதிகாரிகள் முறையாக பராமரித்ததால் இவருக்கு கொசுத் தொல்லை இல்லாமல் இருந்தது. தற்போது இவருடைய வீட்டின் அருகில் சாக்கடை நீர் வெளியேறி துர்நாற்றம் எடுப்பதால் தர்ணாவில் இறங்கியிருக்கிறார்.
2016 சட்டமன்ற தேர்தலில் மறைந்த சசிகலாவின் கணவர் நடராஜன் தான் இவருக்கு சட்டமன்றத் தேர்தலில் வாய்ப்பு வாங்கி கொடுத்தார். அதன்பிறகு அமைச்சர் மாவட்டச் செயலாளர் என ஜெயலலிதா இவருக்கு பதவிகள் வழங்கினார். இவருடைய நடவடிக்கை சரியில்லாத காரணத்தால் சில மாதங்களிலேயே ஜெயலலிதா இவரிடம் இருந்த மாவட்டச் செயலாளர் பதவியை பறித்தார். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு எடப்பாடி தலைமையிலான அரசில் அமைச்சராக நீடித்தார். இங்கும் தனது வாய்ச்சவடாலை நிறுத்தாமல் தன்னை இராமநாதபுரம் மன்னராக மனதில் நினைத்துக் கொண்டு எடப்பாடி அரசுக்கு எதிராக சகஅமைச்சரை விமர்சனம் செய்ததால் பழனிச்சாமி மந்திரி பதவியையும் பறித்தார்.
அதன்பிறகு இருக்கும் இடம் தெரியாமல் அமைதியாக இருந்து கொண்டு மாவட்டச் செயலாளர் முனியசாமிக்கு எதிராக நிர்வாகிகளை தூண்டிவிட்டு புகார் கொடுக்க வைத்து இராமநாதபுரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து இராமநாதபுரம், திருவாடனை ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு தனக்கு மாவட்டச் செயலாளர் பதவி பெறுவதற்காக காய் நகர்த்தினார். அதுவும் தோல்வியில் முடிந்தது. வருகிற 27ஆம் தேதி சசிகலா விடுதலையாகி வர இருப்பதால் தற்சமயம் அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த குழப்பமான சந்தர்ப்பத்தை பயன்படுத்தி குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதைப் போல அரசுக்கும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் வேலுமணிக்கும் எதிராக நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தர்ணாவில் இறங்கினார். ஏற்கனவே அரசுக்கு எதிராக எதிர்கட்சிகள் தினசரி பல்வேறு போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் செய்து வருகிறது. அதிமுக எம்எல்ஏவாக இருந்து கொண்டு தனக்கு மாவட்டச் செயலாளர் பதவி வழங்காவிட்டால் அணி மாறிவிடுவேன் என மிரட்டும் வகையில் தனது சுயநலத்துக்காக அதிமுக அரசுக்கு எதிராக தர்ணாவில் இறங்கினார்.
அதிமுகவில் பழனிச்சாமியும், பன்னீர் செல்வமும் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகிறார்கள். தினகரன் தனிக்கட்சி துவங்கி தனிச்சின்னத்தில் போட்டியிட தயாராகிவிட்டார். இந்நிலையில் சசிகலா வருகைக்குப் பிறகு அதிமுகவில் மாற்றம் ஏற்படுமா? என்ற எதிர்பார்ப்பில் கட்சித் தொண்டர்கள் இருக்கிறார்கள்.
எடப்பாடி பழனிச்சாமி தனது அமைச்சர் பதவியை பறித்ததால் அவர்மீது கோபத்தில் இருந்து வந்த மணிகண்டன் 2021ல் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் சசிகலா தலைமையில் அதிமுக தேர்தலைச் சந்தித்தால் தனக்கு மீண்டும் இராமநாதபுரம் சட்டமன்றத்திற்கு நிற்க வாய்ப்பு கிடைக்கும் ஆகையால் கோகுல இந்திரா பாணியில் மணிகண்டனும் பழனிச்சாமி அரசுக்கு எதிராக குரல் கொடுக்கிறார்.
இவருக்கு இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வாய்ப்பு வழங்கினால் அது திமுகவிற்கு வழங்கப்பட்ட வாய்ப்பாகவே அமையும். இவரை எதிர்த்து போட்டியிடுபவர் தேர்தல் வேலை செய்யாமலேயே அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பாக அமையும் என்கிறார்கள்.
அதிமுகவில் தனக்கு வாய்ப்பு வழங்கவில்லை என்றால் பாரதிய ஜனதா கட்சிக்கு செல்லவும் தயாராக இருக்கிறார். இந்த தொகுதி இஸ்லாமியர்கள் நிரம்பிய தொகுதி இங்கு தாமரையில் மணிகண்டன் களமிறங்கினாலும் முடிவு எதிர்த்து நிற்பவருக்கே சாதகமாகும். இவர் கட்சி மாறினாலும் தனி ஆளாகததான் செல்ல வேண்டுமே தவிர கட்சிக்காரர்கள் யாரும் இவர் பின்னால் செல்ல தயாராக இல்லை. இன்றைய தர்ணாவிலும் தனியாக தர்ணா செய்தது குறிப்பிடத்தக்கது.
– சூரிகா