அரசியல்

விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கொலை..!

சென்னை பனையூரில் தொழில் அதிபர் வீட்டில் சொகுசு காரில் பதுக்கி வைத்திருந்த 1 கோடியே 30 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த வழக்கில் கைதான விடுதலை சிறுத்தை பிரமுகர் தலை சிதைத்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அடுத்த சூனாம்பேடு கடப்பாக்கம் செல்லும் சாலையில் குளக்கரையில் புல்வெளியில் தலை சிதைக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அவரது இரு கால்களும் நடக்க முடியாதபடி வெட்டி சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
காவல்துறையினரின் விசாரணையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டவர் விடுதலை சிறுத்தை கட்சியின் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட துணை செயலாளர் ஹைட் வேலு என்பது தெரியவந்தது. மதுராந்தகம் அடுத்த சூனாம் பேடு காலனியில் வசித்து வந்த வேலு மனைவியிடம் வெளியில் சென்று வருவதாக கூறி விட்டு சென்ற நிலையில் கடத்தி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

வேலு மீது பிரபல தொழில் அதிபர் ஒருவரின் பணத்தை கொள்ளையடித்த வழக்கு ஒன்று நிலுவையில் இருந்தது. கடந்த ஆண்டு சென்னை பனையூரில் தொழில் அதிபர் தனது பெண் தோழியின் காரில் வைத்திருந்த 1 கோடி ரூபாய் ரொக்கப் பணத்தையும் 30 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர் பணத்தையும் வேலு தனது கூட்டாளிகளுடன் சேர்த்து திட்டமிட்டு காரின் கண்ணாடியை உடைத்து கொள்ளையடித்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.

கைது செய்யப்பட்ட வேலுவிடம் இருந்து 35 லட்சம் ரூபாய் மட்டுமே கைப்பற்ற முடிந்த நிலையில் ஜெயிலுக்கு சென்று விட்டு வந்த பின்னர். வேலு அந்த பகுதியில் உப்பை பாக்கெட்டில் அடைத்து விற்கும் நிறுவனத்தை ஒப்பந்தத்திற்கு எடுத்து நடத்தி வந்தார். இந்த நிலையில் வேலு கொல்லப்பட்டிருப்பதால் கொள்ளையடித்த பணத்தை பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என்று கூறப்படுகின்றது.

அதே நேரத்தில் கொள்ளையடித்து சென்ற பணத்தில் பெரும்பகுதியை வைத்துக் கொண்டு வசதியாக வாழ்ந்துவரும் ஹைட் வேலு மீது உண்டான ஆத்திரத்தில் பழிக்குபழியாக கூலிப்படையை ஏவி கொல்லப்பட்டாரா? என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
அதோடில்லாமல் பங்கு பிரிப்பதில் தகராறு என்றால் இந்த அளவுக்கு சித்ரவதை செய்து கொலை செய்யப்பட வாய்ப்பில்லை என்று கூறப்படுகின்றது. இரு சக்கர வாகனத்தில் சென்ற வேலுவை கடத்திச்சென்ற கும்பல் அவரை கட்டிபோட்டு இரு கால்களின் முட்டு பகுதிகளில் நரம்புகளை துண்டாக வெட்டி நடக்க விடாமல் செய்துள்ளது. பின்னர் அவரது தலை மற்றும் முகத்தை அரிவாளால் கொத்துக்கறி போல சரமாரியாக வெட்டி சிதைத்து அருகில் உள்ள குளத்தில் வீசியுள்ளனர்.

சில மணி நேரம் குளத்தில் போட்டு ஊறவைத்து உடலில் இருந்து ரத்தம் வழிந்த பின்னர் குளக்கரையில் தூக்கிபோட்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். அவர் சட்டைப்பையில் வைத்திருந்த பணத்தை கூட எடுக்கவில்லை என்பதால் கொள்ளையடித்த மீதி பணம் எங்கு உள்ளது என்று கேட்டு சித்ரவதை செய்து கொல்லப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

அந்த கொள்ளை சம்பவத்தில் கைதான வேலுவின் கூட்டாளிகள் குறித்தும், கொள்ளை சம்பவத்தில் பணத்தை பறிகொடுத்த தொழில் அதிபரின் பெண் தோழியின் பின்னணி குறித்தும் காவல்துறையினர் விரிவான விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
அரசியல் கட்சிக்குள் அடைகலம் புகுந்து கொண்டு அத்துமீறலில் ஈடுபட்டால் இறுதியில் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு சான்றாக மாறி இருக்கின்றது இந்த கொடூர கொலை சம்பவம்.

  • நமது நிருபர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button