அரசியல்

‘பத்திரிகைச் சுதந்திரத்தை நசுக்கக் கூடாது’’ : சட்டமன்றத்தில் முரசொலி செல்வம்

முரசொலி பத்திரிகையின் ஆசிரியராக, இதழியல் துறையின் நட்சத்திரமாக பரிணமித்த முரசொலி செல்வம் மறைந்துவிட்டார். மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் அக்காள் மகன், இந்நாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மைத்துனர் என்கிற அடையாளங்களையெல்லாம் தாண்டி, பத்திரிகை துறையில் தனக்கென ஒரு பாணியை கட்டமைத்துக்கொண்டு, தி.மு.க-வினர் மத்தியில் தனிச்செல்வாக்கை வளர்த்துக்கொண்டவர் முரசொலி செல்வம்.

1963-ல் சட்டப்படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு, தி.மு.க-வின் அதிகாரபூர்வ பத்திரிகையான முரசொலியில் பணியாளராக சேர்ந்ததிலிருந்தே செல்வத்தின் பத்திரிகைப் பணி தொடங்கிவிட்டது. தி.மு.க தலைவர் கருணாநிதி சூட்டிய பன்னீர்செல்வம் என்கிற பெயர் மங்கிப்போய், ‘முரசொலி’ செல்வம் என்கிற அடைமொழியோடு வலம் வரத் தொடங்கினார். தொடக்கத்தில், முரசொலியில் வெளியாகும் பாக்ஸ் செய்திகளுக்கான பொறுப்பு அவரிடம்தான் அளிக்கப்பட்டிருந்தது. எம்.ஜி.ஆர் ஆட்சியில், திருச்செந்தூர் கோவில் அறங்காவல்துறை அதிகாரியாக இருந்த சுப்பிரமணிய பிள்ளை, கோவில் விடுதியில் மர்மமான முறையில் இறந்துகிடந்தது பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. அவர் கொல்லப்பட்டதாகப் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் கருணாநிதி.

சுப்பிரமணிய பிள்ளையின் மர்ம மரணத்தை விசாரிக்க ஓய்வுப்பெற்ற நீதிபதி சி.ஜே.ஆர்.பால் தலைமையில் ஒருநபர் கமிஷனும் அமைக்கப்பட்டது. அந்த கமிஷனின் அறிக்கை அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரிடம் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அறிக்கையின் நகல் ஒன்று கருணாநிதி வசம் கிடைத்தது. அறிக்கையிலுள்ள தகவல்களை பொதுவெளியில் வெளியிட்டார் அவர். அந்தச் சமயத்தில், ‘மிரட்டாதே முக்காடு போட்டுக்கொள்!’ என முரசொலியில் வெளியான செய்தியும், எம்.ஜி.ஆரைக் கூண்டில் ஏற்றியிருப்பதுபோல வெளியான கார்டூனும் பரபரப்பாகப் பேசப்பட்டன. அந்தப் பரபரப்பை தன் எழுத்தின் மூலமாக முரசொலியில் கிளப்பியவர்தான் முரசொலி செல்வம். வி.பி.சிங்கின் ஆட்சியில் முரசொலி மாறன் மத்திய அமைச்சரானதைத் தொடர்ந்து, முரசொலியின் முழுநேர ஆசிரியராகவும் மாறிப்போனார் செல்வம்.

1992-ல், மறைந்த அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது, முரசொலிக்கும் அரசுக்கும் இடையே தினம்தோறும் ரகளைக் களைக்கட்டியது. அப்போது தி.மு.க எம்.எல்.ஏ-வாக இருந்த பரிதி இளம்வழுதி தமிழ்நாடு வீட்டுவசதி குடியிருப்பு தொடர்பாக மன்றத்தில் பேசியதை, அவைக்குறிப்பிலிருந்து நீக்கினார் அப்போதைய சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா. அவர் நீக்குவதற்கு முன்னதாகவே, வெளியூர்களுக்குச் செல்லும் முரசொலியிலும் மாலைப் பத்திரிகைகளிலும் அச்செய்தி பிரசுரமாகி வெளிவந்துவிட்டது. உடனடியாக வெகுண்டெழுந்த ஜெ., அரசு, முரசொலி செல்வத்தின் மீது உரிமை மீறல் பிரச்னையைக் கொண்டுவந்தது. சட்டமன்றத்தின் உரிமைக்குழு முன்னிலையில் ஆஜரான முரசொலி செல்வம், தன் தரப்பு விளக்கத்தைக் கொடுத்தார். அதை ஏற்காத உரிமைக்குழு உறுப்பினர்கள் சிலர், “நீங்கள் மன்னிப்பு கேட்டுவிட்டால் இந்தப் பிரச்னையை இத்தோடு விட்டுவிடலாம்” என்றனர். கோபமடைந்த முரசொலி செல்வம், “நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும். தவறே செய்யாதபோது எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்…” எனக் கடுமையாக வாதிட்டார். ‘பத்திரிகைச் சுதந்திரத்தை நசுக்கக் கூடாது’ என சட்டமன்றத்திலும் விவாதம் அனல் பறந்தது. அதன் பின்னர், அவரை சட்டமன்றத்தில் கூண்டில் ஏற்றி, அவருக்கு எதிராகக் கண்டன தீர்மானம் நிறைவேற்றியதெல்லாம் வரலாறு.

முரசொலி பத்திரிகையிலேயே தன் வாழ்நாளின் பெரும்பகுதியைக் கழித்துவிட்ட முரசொலி செல்வம், சிலந்தி என்கிற புனைப்பெயரிலும், தன்னுடைய இயற்பெயரிலும் கட்டுரைகள் எழுதுவதை வழக்கமாக்கியிருந்தார். கடைசியாக, கடந்த அக்டோபர் 8-ம் தேதி வெளிவந்த முரசொலியில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கடுமையாக விமர்சித்து ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். அதுதான் அவருடைய கடைசி கட்டுரையாகவும் ஆகிப்போனது. தன்னுடைய அடுத்த கட்டுரைக்காக அவர் எழுதிக் கொண்டிருந்தபோதே, அவர் உயிர் மாரடைப்பால் பிரிந்திருக்கிறது. முதல்வர் தொடங்கி, அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் அவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button