வாக்கு எண்ணும் மையத்தில் வட்டாட்சியர் நுழைந்த விவகாரம் : மதுரை மாவட்ட ஆட்சியரை மாற்றிய உயர்நீதிமன்றம்
தமிழகத்தில் கடந்த 18ம் தேதி மக்களவை தேர்தல் மற்றும் காலியாகவுள்ள 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் மதுரை மண்டலத்தில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் மூன்று அடுக்கு பாதுகாப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கடந்த 20ம் தேதி மாலை சம்பூரணம் என்ற வட்டாட்சியர் வாக்குப்பதிவு ஆவணங்கள் இருந்த அறைக்குள் சென்றுள்ளார். மேலும் அவர் அங்கு இருந்து ஆவணங்கள் சிலவற்றை நகல் எடுத்துச் சென்றுள்ளார். இந்த விவகாரம் அந்த தொகுதி வேட்பாளர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து பெண் அதிகாரி சம்பூரணம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. சம்பூர்ணத்துடன் உதவியாக சென்ற மேலும் 3 அலுவலர்களான கலால் வரியின் ஆவணப்பதிவு எழுத்தாளர் சீனிவாசன், மதுரை மாநகராட்சி மண்டல அதிகாரிகள், ராஜ பிரகாஷ், சூரிய பிரகாஷ் ஆகிய மூவரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் நடராஜன் உத்தரவிட்டார்.
இந்நிலையில், அவண அறைக்குள் பெண் வட்டாட்சியர் நுழைந்ததை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசன் முறையிட்டார். காவல்துறை விசாரணை நேர்மையாக இல்லை என்பதால் உயர்மட்டக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
இது தொடர்பாக தாக்கல் செய்யப்படும் மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென்றும், அவரது வழக்கறிஞர் வலியுறுத்தினார். இதுதொடர்பான மனு ஏற்றுக்கொள்ளப்பட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மனுதாரர் தரப்பில் ஆஜாரான வழக்கறிஞர், வாக்குப்பதிவு குறித்த ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்குள் வட்டாட்சியர் நுழைந்து ஆவணங்களை எடுத்துச் சென்றது தேர்தல் விதி மீறிய செயலாகும். வட்டாட்சியர் யார் உத்தரவின் பேரில் அங்கு சென்றார் என்பது குறித்து இதுவரை அவர் விளக்கம் அளிக்கவில்லை என்று தெரிவித்தனர்.
தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான நிரஞ்சன் என்பவர் அதற்கு பதிலளித்தார். மதுரை மக்களவை தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் சில பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தன என்பதை தேர்தல் ஆணையம் ஒப்புக்கொண்டது. மேலும், ஆட்சியர் உதவியாளர் அறிவுறுத்தலின் பேரில் வட்டாட்சியர் வாக்கும் எண்ணும் மையத்திற்குள் சென்றதாக தெரிவித்தார். தற்போது சம்பூர்ணம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மாவட்ட ஆட்சியரின் உதவியாளர் யாருடைய உத்தரவின் பேரில் வட்டாட்சியருக்கு இந்த உத்தரவை பிறப்பித்தார் என்பது தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய நீதிபதிகள், இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அவரது உதவியாளர் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு தேர்தல் ஆணையம் தரப்பில், தலைமை தேர்தல் அதிகாரி போஸ்ட்மேன் போலத்தான் செயல்பட்டுள்ளார். தலைமை தேர்தல் அதிகாரியால் யார் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டது. இந்த பதிலை கேட்டு நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்தனர். எல்லா அரசு அதிகாரிகளும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றனர். அப்படியிருக்கும் போது அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை என்று எப்படி கூறமுடிகிறது என அதிர்ச்சி கேள்வி எழுப்பினர்.
வாக்கு எண்ணும் மையத்தில் வட்டாட்சியர் நுழைந்த விவகாரத்தில் மதுரை மாவட்ட ஆட்சியரை இட மாற்றம் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் உதவி தேர்தல் அதிகாரியும் மாற்றம் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் பேசிய நீதிபதிகள், தன்னாட்சி பெற்ற தேர்தல் ஆணைய நடைமுறையில் தலையிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டதாகவும் கவலை தெரிவித்தனர்.
இந்நிலையில் தனது கட்சியை சேர்ந்த தொண்டர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், ஜனநாயகத்தைப் பாதுகாத்து, எதிர்காலத்திற்கு ஏந்திச்செல்லும் போர்க்களமாக மாறிவிட்ட தேர்தல் களத்தில், பாசிச சக்திகளை அடியோடு வீழ்த்திடவும், அடிமைக் கூட்டத்தை அறவே அகற்றிடவும் தி.மு.க. வின் தலைமையிலான மத சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர் அயராமல் அரும்பாடு பட்டதற்கு உரிய பலனை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
திமுக உறுப்பினர்கள், நிர்வாகிகள், கூட்டணிக் கட்சிகள், போட்டியிட வாய்ப்பு அமையாத சூழல் ஏற்பட்ட போதும் திமுகவின் வெற்றிக்காக செயலாற்றிய கட்சிகள் மற்றும் அமைப்புகளுக்கு இதயமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.
அயராத உழைப்பிற்கும், மக்கள் தந்த ஆதரவிற்கும் முழுமையான வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை திடமாக உள்ளதாக குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், “மக்களின் தீர்ப்பு நன்றாக அமையும் நாளாக மே 23 விடியும்.
எனினும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் திமுக தொண்டர்களும் ,கூட்டணி கட்சியினரும் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம்.
வாக்குப்பதிவு நடந்த தொகுதிகளில் அயராது உழைத்தவர்களுக்கும், மே19-ல் வாக்குப்பதிவு நடக்க உள்ள நான்கு தொகுதிகளில் கடுமையாக உழைத்து கொண்டிருப்போருக்கும் மனமார்ந்த நன்றி. உங்கள் உழைப்பின் வியர்வை, மக்களின் வாக்குகளாக மாறி, உறுதியாகட்டும் வெற்றி என ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.