அரசியல்தமிழகம்

அரசு சார்பில் இலவசமாக பணம் கொடுப்பது சரியா? : முன்னாள் முதல்வர் காமராஜர்

அரசு சார்பில் இலவசமாக பணம் கொடுக்கும் திட்டங்களைக் குறித்து கடந்த கால முதல்வர்கள் மூதறிஞர் ராஜாஜி, காமராஜர், ஓமந்தூரார், போன்ற ஆளுமைகள் ஏற்கவில்லை. மக்கள் உழைத்தால் நாடு வளம் பெறும். இலவசங்களும் அரசு கஜானாவில் இருந்து தேவையற்ற வகையில் அள்ளிக்கொடுப்பது ஆட்சிக்கு நல்லதல்ல.

கல்வி, சுகாதாரம், விவசாயத்திற்கு இலவச மானியங்கள் தரலாம். ஆனால் எல்லாவற்றிக்கும் மக்களை கவரவேண்டும் என்று அரசு கஜானாவில் இருந்து அள்ளிக்கொடுப்பது ஆட்சிக்கு நல்லதல்ல, நாட்டுக்கும் நல்லதல்ல. வாக்குவங்கிக்காக இப்படியான தவறான நிலைபாடுகளை எடுத்தால் கோளாறுகள் மட்டும் ஏற்படாமல் அமைப்பு ரீதியாக பல சிக்கல்கள் ஏற்பட்டு பாழாகிவிடும் என்று ஆட்சியாளர்கள் உணரவேண்டும்.

மாதம்தோறும் உழைக்காமலேயே அது ஏழை மக்கள் என்றாலும் இலவசமாக பணம் கொடுக்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தினால் என்னவாகும் ? என்று காமராஜர் அந்த காலத்திலேயே ஒரு நிகழ்ச்சியில் தெளிவாக பேசி உள்ளார்.

பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சராக இருந்த காலம். தஞ்சாவூர் வெண்ணாற்றங்கரை நீரேற்று நிலையத்தில் ஒரு நிகழ்ச்சி…

நிகழ்ச்சியில் படிக்காத மேதை காமராஜர் தனக்கே உரிய பாணியில் பேசியது…

“நாட்ல இருக்கிற எல்லாருக்கும் பணம் வேணும். ஏதாச்சும் இயலாமையை சொல்லி அரசாங்கம் பண உதவி பண்ணனும் என்று கேட்கிறாங்க. எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லை.

பண நோட்டு அடிக்கிற மிஷின் எங்க கிட்டேதான் இருக்கு. எவ்வளவு வேண்டுமானாலும் அச்சடிக்கலாம்னேன். அடிச்சு உங்கள் இஷ்டப்படியே ஆளுக்கு ஒரு மூட்டை பணம் கொடுத்துடுவோம்னேன்.

இப்போ பணம் இல்லாதவங்களே நாட்டிலே கிடையாது. கொஞ்ச நாள் கழிச்சு கடைத்தெரு போனீன்னா எல்லா கடையும் பூட்டி கெடக்கும். அரிசி பருப்பு உப்பு புளி, மொளகா, எண்ணெய்-ன்னு ஒன்னும் கெடைக்காது. விவசாய வேலைக்கு ஆள் வராது. ஒரு வேலைக்கும் ஒருத்தனும் வரமாட்டான். எப்படி வருவான்னேன்..?

பணம் வேணும்னு உழைக்கிறாங்க. கட்டு கட்டா பணம் இருக்கும் போது எவன்தான் வேலைக்கு வருவான்..? பணத்தை தலைமாட்டில் வச்சுக்கிட்டு வயித்துல ஈரத் துணியை போட்டு கிட்டு கெடக்க வேண்டியதுதான்…! ஊரே தூக்கம் வராம கெடக்கும்.

இப்போ அது மதிப்புள்ள பணம் காசு இல்லை. வெத்து பேப்பர்தான்னேன். உழைப்புதான் பணம்ன்னேன். பொருளாதாரத்திற்கு ஆதாரமே உழைப்புதான்.
உழைப்பு இல்லாமல் ஒன்னுமே கெடைக்காது. ஒன்னுமே கெடையாது. இப்ப தெரிஞ்சுதா…?

உழைப்பு இல்லாமல் கட்டு கட்டா பணம் குடுத்தால் நாட்டோட பொருளாதாரமே சீர்கெட்டு கதை கந்தலாகி போகும்னேன்…”

இது பொருளாதார படிப்பு படிக்காமல் நாட்டு நிலையையும் நாட்டு மக்கள் நாடித்துடிப்பையும் படிச்ச ஒரு மனுஷர் சொன்னது…..

கே.எஸ். இராதாகிருஷ்ணன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button