தமிழகம்

நம் இலக்கு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்..?

மனதளவில் உளசோர்வு ஏற்படும் போது… புத்தகங்கள், பழைய நினைவுகள், பிடித்த இடங்களின் புகைபடங்கள், பழைய திரையிசை பாடல்கள் என்று, கவனத்தை திசை திருப்பினால் தன்னம்பிக்கை வருகிறது.

மனிதனுக்கும் அவனது மனதிற்கும் இடையே எப்போதும் போராட்டம் ஏற்படுகிறது.நமது மனதில் இரண்டு மையங்கள் உள்ளன. ஒரு மையத்தில் எளிமை, விவேகம் உள்ளது இதுதான் நல்லறிவு.

இன்னொரு மையம் விபரீத மையம். இது இயங்கினால் எல்லாமே தவறான தோற்றத்தைத் தரும். இதில் நாம் நமது மனதின் சரியான மையத்தைக் கண்டு கொள்ள வேண்டும்.

அழுத்தங்கள், மனசோர்வுகள், வரும்போது புத்தக உலகங்கள்தான் மருந்து. ஜே.கிருஷ்ணமூர்த்தியின் கருத்துக்கள் தெம்பை உண்டாக்குகின்றன.


உளசோர்வு ஏற்படுவதற்கு, நம்மை சுற்றியுள்ள சூழல்தான் காரணம். அதை பெரிதுபடுத்தாமல் கடந்து செல்ல வேண்டும். ஆனால், அதற்கான மனநிலை இல்லாமல் இருப்பதுதான் கடினமான நிலைப்பாடு ஆகும்.

சூழ்நிலைக்கேற்றவாறு வளைந்து செல்ல வேண்டும் என்பார்கள். செல்லலாம், அதில் சில நியாயங்களும் காரணங்களும் இருக்க வேண்டும்.

ஒரு சிலருக்கு நம்பிக்கையில் இடமளித்துவிட்டு, அது தவறான நம்பிக்கை என்று பிற்காலத்தில் தெரிந்தால், பாழ்படபோவது நாம்தான். நமது உடலிலும், மனதிலும் வலிமையும், தெம்பும் அவசியம். எப்படி ஒரு தவளையை கொதி நீரில் போட்டால், அந்த வெப்ப நிலைகு ஏற்றவாறு தன் உடலை பாதுகாத்து கொள்கிறதோ, அதைப்போல நாம், நம்முடைய நலம், நேர்மை, பொதுவாழ்வு நோக்கத்தின் முக்கியத்தை அறிந்து நடைபோடுவதே நமக்கும் நல்லது, சமுதாயத்திற்கும் நல்லது.

இதோடு நம்முடைய முயற்சிகள், நமக்கும் பொதுவெளிக்கும்தான் இருக்க வேண்டுமே தவிர, அந்த முயற்சிகள் வேறு ஒருவரின் சுய லாபத்துக்கு துணை போகக் கூடாது. சிலவற்றை அனுசரித்து செல்லலாம், எல்லாவற்றிலும் அனுசரித்து போக வேண்டிய நிலை என்றால், நமக்கான கம்பீரமும், மினுக்கும் இல்லாமல் போய்விடும்.

கப்பலை எப்படி தண்ணீர் புகுந்து கவிழ்த்து விடுமோ, அதுபோல நாமும் எல்லாவற்றிலும் அனுசரித்து போனால், கவிழ்ந்துவிடுவோம். எப்போதும் கப்பலுக்கு வெளியேதான் தண்ணீர் இருக்க வேண்டும், அதுதான் இயற்கையின் நியதி.

இந்த நிலையில், காலத்துக்கு ஏற்ற மாற்றங்களும் வேண்டும், அந்த மாற்றங்களை எதிர்கொள்ள நாமும் தயாராக இருக்க வேண்டும். தனிப்பட்ட அனுபவம், தனிப்பட்ட இலக்கு, அதனால் சமுதாயத்திற்கு ஏற்படுகிற பயன்பாட்டை மனதில் கொண்டு நம்முடைய நடை, நம்முடைய போக்கு, அணுகுமுறை இருக்க வேண்டும்.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button