போலீஸ் ஸ்டேஷனிலேயே கணவருடன் திருடிய பெண் போலீஸ்

நெல்லை மாவட்டம் கூடங்குளம் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் காணாமல் போன விவகாத்தில் திடீர் திருப்பமாக காவல்நிலையத்தில் பணியாற்றிய பெண் காவலரை அவரது கணவருடன் போலீசார் கைது செய்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் பணகுடியைச் சேர்ந்தவர் மதன்ராஜ். தீபாவளி பண்டிகையை கொண்டாட நாங்குநேரியில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது தகராறு ஒன்றில் சிக்கியதால் இவரது செல்போனையும், புதிய இருசக்கர வாகனத்தையும் கூடங்குளம் ஆய்வாளர் ஜெகதா பறிமுதல் செய்துள்ளார். ஒரு வாரத்திற்கு பிறகு வாகனத்தை மீட்க மதன்ராஜ் தனது வழக்கறிஞருடன் கூடங்குளம் காவல்நிலையம் வந்துள்ளார்.
ஆனால் ஆய்வாளர் ஜெகதா வேறு காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டிருந்தார். அதனால் பணியில் இருந்த காவலர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் பற்றி கேட்டுள்ளார் மதன்ராஜ். ஆனால் காவல்நிலையத்தில் இருசக்கர வாகனமும் செல்போனும் இல்லாதது தெரியவந்துள்ளது.
காவல்நிலையத்தின் எழுத்தர் திரவியத்திடம் விபரம் கேட்டதற்கு அதிகாரிகள் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் அவர்களிடம் விபரம் கேட்டு சொல்கிறேன் என்று சொல்லியுள்ளார் . தொடர்ந்து ஒரு மாதத்திற்கு மேல் அழைந்தும் காணாமல் போன வாகனங்கள் பற்றி எந்த தகவலும் இல்லை. வாகனமும் செல்போனும் இல்லாததால் ஒரு மாதத்திற்கு மேலாக வேலைக்கும் செல்லாமல் மன உளைச்சலில் இருந்துள்ளார் மதன்.
இதை தொடர்ந்து சம்பவம் தொடர்பாக நெல்லை மாவட்ட கண்காணிப்பாளர் கைபேசிக்கு மதன் புகார் ஒன்றை மனுவாக அனுப்பிவைத்துள்ளார். புகாரை தொடர்ந்து காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் கூடங்குளம் காவல்நிலையத்தில் விசாரணை நடத்தப்பட்டது. வாகனங்களின் சாவியும் காணாமல் போனதால் காவல்நிலையத்தில் உள்ள யாரோதான் திருட்டில் ஈடுப்பட்டிருக்க வேண்டும் என்பது உறுதியானது. மேலும் காவல் நிலையத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை பெற்று ஆய்வு செய்யப்பட்டது. கிரேசியா என்ற இரண்டாம் நிலை காவலர் இரவு பாரா பணியில் இருக்கும் போது இருசக்கர வாகனங்களை திருடுவது அதில் பதிவாகி இருந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் கிரேசியாவும், தனது கணவர் அன்புமணியும் சேர்ந்து காவல்நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் செல்போன்கள் மற்றும் வெள்ளி பொருட்களை திருடியது தெரியவந்தது.
இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து மூன்று இருசக்கர வாகனங்கள் மொபைல் போன்கள் வெள்ளி கொடி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இது போன்று எத்தனை வாகனங்கள் திருடப்பட்டுள்ளது? வேறு காவல் நிலையங்களில் இது போன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது? என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வேலியே பயிரை மேய்ந்த கதையாய் காவல்துறையைச் சேர்ந்தவரே திருட்டில் ஈடுபட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
– நமது நிருபர்