பணம் இல்லாமல் உள்ளே வராதே : அடாவடி வட்டாட்சியர்
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பாலாற்றில் டிராக்டர்களிலும், மாட்டுவண்டிகளிலும் தினந்தோறும் இரவு நேரங்களில் மணல் திருட்டு நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகின்றனர். மணல் திருட்டை தடுத்து நிறுத்துமாறு கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், வட்டாட்சியர் ஆகியோருக்கு தகவல் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதியினர் புலம்புகிறார்கள்.
இது சம்பந்தமாக வட்டாட்சியர் அலுவலக வட்டாரத்தில் விசாரித்த போது.. வாணியம்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் பட்டா வழங்குதல், பட்டா பெயர் மாற்றம், வாரிசு சான்றிதழ், பறம்போக்கு குடியிருப்பு பகுதிகளில் மின் இணைப்புக்கு சான்றிதழ், வழங்க என சான்றிதழுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு சான்றிதழுக்கும் தனித்தனியாக புரோக்கர்களை நியமனம் செய்துள்ளார். மேலும் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் மூலம் பணத்தைப் பெற்றுக் கொண்டுதான் சான்றிதழ் வழங்குகிறாராம். வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சம்பத் வட்டாட்சியராக வந்ததிலிருந்து எந்த வேலை நடைபெற வேண்டும் என்றாலும் பணம் கொடுத்தால் மட்டுமே வேலையை முடித்துக் கொடுப்பார் என வட்டாட்சியர் அலுவலக வட்டாரத்தில் கூறுகிறார்கள்.
மேலும் வட்டாட்சியர் சம்பத் பெரும்பாலான நேரங்களில் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வருவதே கிடையாதாம். ஆளும் கட்சி அமைச்சருக்கு நெருக்கமானவர் போல் அனைவரிடமும் இவரே கூறிக்கொள்கிறாராம். சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், வாணியம் பாடி கோட்டாட்சியர் ஆகியோர் இவரது பணிகளைப் பாராட்டி வருவதாக அரசியல்வாதிகளிடமும், பத்திரிகையாளர்களிடமும் தன்னைத்தானே புகழ்ந்து கொள்வதையே வாடிக்கையாக வைத்துள்ளாராம் வட்டாட்சியர் சம்பத். இரவு நேரங்களில் பாலாற்றில் மணல்திருட்டில் ஈடுபடுபவர்களிடம் கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள் மூலம் குறிப்பிட்ட தொகையை மாமூலாகப் பெற்றுக் கொண்டு, அதனை உயர்அதிகாரிகள் முதல் அரசியல்வாதிகள் வரை இவரே பிரித்துக் கொடுத்து வருகிறாராம். இதனால் தான் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் மணல் திருட்டு நடைபெறும் சமயங்களில் தகவல்கள் கொடுத்தாலும் எந்த அதிகாரியும் நடவடிக்கை எடுப்பதில்லை என்கிறார்கள்.
வாணியம்பாடி வட்டாட்சியர் என்.சம்பத் ஊராட்சி உதவியாளர்களை மதிக்காமல் அவர்களை சகட்டுமேனிக்கு உதாசீனப்படுத்துவதையே கடந்த ஓராண்டாக வாடிக்கையாக வைத்துள்ளாராம். அவர்கள் பணி நிமித்தமாக வட்டாட்சியரை அணுகினால் பணம் இல்லாமல் உள்ளே வராதே என விரட்டி அடிப்பதாக கூறுகிறார்கள். வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் வருவாய்த்துறை ஊழியர்கள் யாரிடமும் வட்டாட்சியர் சம்பத் நட்புடன் பேசாமல், ஆணவத்துடன் தான் பேசுவார். ஆகையால் வருகிற 30ஆம் தேதி ஊராட்சி உதவியாளர்கள் சங்கம் சார்பில் வட்டாட்சியர் சம்பத்தின் ஊழியர் விரோதப் போக்கை கண்டித்து வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
வட்டாட்சியரின் ஊழியர் விரோதப் போக்கை கண்டித்து கிராம ஊராட்சி உதவியாளர்கள் சங்கத்தின் சார்பில், வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் கண்டன ஆர்பாட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், வட்டாட்சியர் சம்பத் அவர்களை அழைத்து இதுவரை எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தாமல் ஊழியர் விரோதப் போக்கை தொடர்ந்து வருவதாக ஊழியர்கள் புலம்பி வருகிறார்கள்.
வாணியம்பாடி வட்டாட்சியராக சம்பத் வருவதற்கு முன் ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் வருவாய் ஆய்வாளராகவும், வாலாஜா வட்டாட்சியர் அலுவலகத்தில் மண்டல துணை வட்டாட்சியராகவும் பணியாற்றி வந்துள்ளார். சோளிங்கர் தான் இவருக்குச் சொந்த ஊர் என்கிறார்கள். அங்கு இவர் பணியாற்றிய காலங்களில் இதேபோல் தான் எந்தப் பணி நடைபெற வேண்டுமானாலும் புரோக்கர்கள் மூலம் பணம் பெற்றுக் கொண்டுதான் வேலையை முடித்துக் கொடுப்பாராம். அதே பாணியில் தற்போது வாணியம்பாடியிலும் செயல்பட்டு வருகிறார் என்கிறார்கள்.
வருகிற 30ஆம் தேதி நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் வட்டாட்சியர் சம்பத்தின் தில்லாலங்கடி வேலைகள் அனைத்தையும் வெளிப்படுத்த தயாராகி வருகிறது ஊராட்சி உதவியாளர்கள் சங்கம். இதனால் அரசு அதிகாரிகளுக்குத்தான் அவப்பெயர் ஏற்படும். இவரது நடவடிக்கை களை கவனித்து விசாரணை செய்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாணியம்பாடி தாலுகாவில் வசிக்கும் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்களின் கோரிக்கைக்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் செவிசாய்த்து நடவடிக்கை எடுப்பாரா? காத்திருப்போம்.
– நமது நிருபர்